இலங்கை சொதப்பல்; 3வது டெஸ்ட் டிரா; தொடரை வென்றது இலங்கை!

வியாழன், 12 ஜூலை 2012 (18:06 IST)
பல்லிகெலியில் நடைபெற்ற 3வது, இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற 71 ஓவர்களில் 270 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 62 ஓவர்களில் 195/4 என்று இருந்தபோது இரு கேப்டன்களும் ஆட்டம் டிரா என்று உடன்படிக்கை எய்தினர்.

பாகிஸ்தான் வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. ஆனால் சங்கக்காராவின் தடுப்பு உத்தி அந்த முயற்சியை உடைத்தது.

இதனால் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் டெஸ்டில் இலங்கை வெற்றி பெற்றதால் தொடரை 1- 0 என்று கைப்பற்றியது.

இந்த தொடரில் 3 டெஸ்ட் போட்டிகளில் 490 ரன்களை 163 ரன்கள் என்ற சராசரியில் பெற்ற சங்கக்காரா தொடரின் நாயகனாகத்தேர்வு செய்யப்பட்டார். இந்த இரண்டாவது இன்னிங்ஸிலும் சங்கக்காரா 74 ரன்களில் 11 பவுண்டரிகள் அடித்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

ஆகஸ்ட் 2009இற்குப் பிறகு இலங்கை ஒரு டெஸ்ட் தொடரை வெல்வது இதுவே முதல் முறை. எனவே இலங்கையின் மந்தமான துரத்தலை புரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக சுழற்பந்து மேதை முத்தையா முரளிதரன் ஓய்வு பெற்ற பிறகு வெல்லும் முதல் டெஸ்ட் தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பரனவிதனா 22 ரன்கள் எடுத்து ஜுனைத் கானின் பந்தில் வீழ்ந்தார். நன்றாக ஆடிய சந்திமால் 65 ரன்களில் அஜ்மலிடம் வீழ்ந்தார்.

அதன் பிறகு ஜெயவர்தனே 11 ரன்களில் சயீத் அஜ்மலிடம் அவுட் ஆனார். சமரவீராவுக்கு அஜ்மல் வீசிய பந்து பியூட்டி என்று வர்ணிப்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை.தூஸ்ரா பந்தில் ஏமாந்தார் சமரா.

வெப்துனியாவைப் படிக்கவும்