கொரோனா வைரஸ் தாக்காமல் தற்காத்து கொள்வது எப்படி...?
கொரோனா வைரஸ் தாக்கினால் மெலிதான காய்ச்சலுடன் இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் ஏற்படும். மேலும் தொண்டை வீங்குவதும், உணவை விழுங்குவதிலும் சிரமமும் ஏற்படும். சில நேரங்களில் நிமோனியா போன்ற விஷக்காய்ச்சலும் ஏற்படக்கூடும். பிரான்சிட்டிஸ் எனப்படும் நுரையீரல் நோயும் ஏற்படலாம்.
ஒருவருக்கு இந்நோய் இருப்பது உறுதியானால், அவர் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இந்த வைரஸ் தாக்குதலால் விளையும் நோய்க்கு மருந்து இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்துள்ளது. இதற்கான தடுப்பூசியும் (vaccine) இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள:
ஒவ்வொரு முறையும் உண்பதற்கு முன்பாக, கைகளை நன்றாக சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும். கை, கால், விரல் நகங்கள் நன்றாக வெட்டப்பட்டிருக்க வேண்டும். அந்தரங்கச் சுத்தம், உணவுச் சுத்தம் போன்றவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.
நன்கு காய்ச்சிய நீரை வடிகட்டி அருந்த வேண்டும். இறைச்சி, முட்டை, மீன் ஆகியவற்றை முழுமையாக வேகவைத்த பின்னரே உண்ணுமாறு உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. சீன உணவகங்களுக்குச் சென்று சீன உணவுகளை உண்பதை, பாதுகாப்புக் கருதித் தவிர்க்கலாம். மேலும் தெருவோரக் கடைகள், கையேந்தி பவன்கள் ஆகியவற்றில் உண்பதைத் தவிர்க்கலாம்.
முதியவர்கள் (60 வயதுக்கு மேலானவர்கள்), நோயாளிகள், சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறி வருவோர், ஜீரண சக்தி குறைந்தோர் ஆகியோர் அசைவ உணவுகளைத் தவிர்த்து, புரதச் சத்து மிகுந்த பயிறு வகைகள், காய்கறிகளை உண்ணலாம். இச்சூழலில் இதுவே பாதுகாப்பானது.
இயன்றவரை கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ள பெருங்கூட்டம் கூடும் இடங்களுக்குச் செல்வதை கர்ப்பிணிகள், குழந்தைகள், நோயாளிகள், சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறி வருவோர், முதியவர்கள் ஆகியோர் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இருமல், தும்மல், கண்ட இடங்களில் துப்பப்படும் சளி, எச்சில் ஆகியவற்றின் மூலம் இந்த வைரஸ் காற்றில் பரவும் தன்மைகொண்டது.
கூட்டம் நிறைந்த இடங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை உள்ளவர்கள், குறிப்பாக கர்ப்பிணிகள், நோயாளிகள், ஆஸ்துமா, சளித்தொல்லை உள்ளவர்கள், முதியவர்கள், சிகிச்சைக்குப் பின் உடல்நலம் தேறி வருவோர் ஆகியோர் உரிய முகமூடி (nose mask) அணிந்து அவ்விடங்களுக்குச் செல்லலாம்.
மருந்துக் கடைகளில் ரூ. 10-க்கு விற்கும் முகமூடிகள் உரிய பயனைத் தராது. ரூ. 80 அல்லது ரூ. 100 விலையில் நன்கு வடிகட்டக் கூடிய பாதுகாப்பான முகமூடிகள் கிடைக்கின்றன. அவற்றை அணியலாம். முக்கியமாக நாம் செய்ய வேண்டியதெல்லாம் நோய்த்தடுப்பு சக்தியை அளிக்கக் கூடிய சத்துள்ள உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவதே ஆகும். உணவே மருந்து என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.