கிறிஸ்துமஸ் என்றாலே பரலோகத்தில் (Heaven) மகிழ்ச்சி. பூலோகத்தில் (Earth) சமாதானம் என்பதாகும். கிறிஸ்துமஸ் என்பது இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அனுசரிக்கும் நாளாகும். ஆதிச் திருச்சபையினர் கிறிஸ்துவின் பிறப்பை டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடுவது என்று முடிவெடுத்தனர். இந்நாள் சரித்திரத்தில் புகழ்பெற்ற நாளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இயேசுவின் பிறப்பை வைத்துதான் கி.மு. என்றும், கி.பி. என்றும் வரலாற்றின் காலம் கணிக்கப்படுகிறது.
உலக இரட்சகர் :
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை உலகிற்கு முதன்முதல் அறிவித்தவன் கர்த்தருடைய தூதன் என்பதை விவிலிய நூலில் இவ்வாறு காணலாம்.
"இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர், உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்". (லூக் 2 : 10-11)
இயேசு இவ்வுலகின் ரட்சகர் என்பதை அவர் பிறப்பின் செய்தியிலேயே அறிவிக்கப்பட்டுவிட்டது. இயேசுபிரான், இஸ்ரேல் நாட்டிலுள்ள எருசலேம் நகருக்கு 10 கி.மீ. தெற்கே உள்ள பெத்லகேம் என்ற சிற்றூரில் புறநகர் பகுதியில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்தார் என்பது வரலாறு. ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கோ, சாதியினருக்கோ, இனத்திற்கோ, உலகில் உள்ள ஒரு பகுதியினருக்கோ சொந்தமானவர் அல்ல. இதில் ஒரு சந்தேகமுமில்லை. ஏனென்றால் அவர் இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் சொந்தமான ரட்சகர் என்பதை அவர் பிறப்பின் நற்செய்தி தெளிவாகக் கூறுவதைக் காணலாம்.
சமாதானப் பிரபு :
இந்த தூதர்கள் கூறிய மற்றுமொரு பிறப்பின் செய்தி என்னவென்றால், "உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும் பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக" என்பதாகும். (லூக் 2 : 14).
இச்செய்தியில் பூமிக்கு பொதுவாக குறிப்பிட்டிருப்பது சமாதானமாகும். இச்சமாதானம் இப்பிரபஞ்சத்தின் இயல்பான எதிர்பார்ப்பு என்பதில் ஐயமில்லை. நமக்கு மனதில் சமாதானம் வேண்டும். உடலில் சமாதானம் வேண்டும். குடும்பத்தில் சமாதானம் வேண்டும். அயலகத்தில் சமாதானம் வேண்டும். நம் நாட்டில், உலகில் சமாதானம் என்று எங்கும் சமாதானம் தேவை என்பதை நாம் அறிவோம்.
இயேசுபிரான் பிறந்த நாட்களில் ரோம அரசனாக இருந்தவர் அகஸ்துராயன் (Agustus Ceasar). அன்று வாழ்ந்த எழுத்தாளர்களில் எபிக்டெடஸ் (Epictetus) என்பவர் குறிப்பிடத்தக்கவர். இவர் ரோம அரசனைப் பற்றி குறிப்பிடும்போது, அகஸ்துராயனால் தரையிலும், கடலிலும் நடக்கும் யுத்தங்களிலிருந்து மக்களுக்கு சமாதானம் கொடுக்க முடியுமே தவிர, மக்களின், கவலை, உணர்ச்சி, வேதனை நிமித்தம் சமாதானம் கொடுக்க இயலாது என்று அவர் கூறியுள்ளார்.
எனவே, இந்த உலகம் தரக்கூடாத சமாதானத்தை கொடுக்கவே இயேசு இவ்வுலகில் வந்தார் என்பதை நாம் விவிலிய நூலில் காணலாம். (யோவான் 14 : 27)
மேலும், இயேசுபிரான் உலகில் பிறக்கப் போகிறார் என்று அவர் பிறப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன் உரைத்த தீர்க்கதரிசியான ஏசாயா, இயேசுவை சமாதானப் பிரபு என்று கூறியிருப்பதையும் விவிலிய நூலில் இவ்வாறு காணலாம்.
அவர் நாமம் : அதிசயமானவர், ஆலோசனை கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு எனப்படும். (ஏசாயா 9 : 8)
முன் குறிக்கப்பட்டவர் :
உலக வரலாற்றில் இப்போது எத்தனையோ தலைவர்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடுவதைப் பார்க்கிறோம். ஆனால் யாருமே அவர்களை குழந்தையாகப் பாவித்துக் கொண்டு கொண்டாடுவதை நாம் காண்பதில்லை. இயேசு இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்தார் என்பதை வரலாற்றின் மூலம் அறிகிறோம். இது ஒரு எதிர்பாராத விபத்தல்ல. அவரின் பிறப்பை உலகம் முழுவதும் பேச்சு, நடை, பாடல் என்று பல வழிகளில் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. அதில் ஒன்று இயேசுவை குழந்தையாக கொண்டாடப்படுவதை யாரும் மறுக்க முடியாது. ஏனென்றால் அவர் பிறக்கும்போதே மீட்பராக வெளிப்பட்டார். இயேசு என்னும் மன்னர்களின் மன்னன் யாரிடத்தில், எந்த வம்சத்தில், எங்கு பிறக்கப் போகிறார் என்று பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உரைக்கப்பட்டுவிட்டதை விவிலியம் இவ்வாறு கூறுகிறது.
ஏசாயா 7 : 14 - "ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள் அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்".
ஏசாயா 9 : 7 - "தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி... சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும்".
இது மட்டுமல்ல. இயேசு பிறப்பதற்கு முன், அவருடைய தகப்பனாகிய யோசேப்புக்கு கர்த்தருடைய தூதன் தோன்றி சொப்பனத்தில் வெளிப்படுத்தியதாவது :
மத்தேயு 1 : 21 - "அவள் (மரியாள்) ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்" என்றான், என்பதாகும்.
பிரபஞ்ச மன்னனும், பூலோக மன்னனும் :
இப்பிரபஞ்ச அரசனான இயேசுவுக்கு பிறப்பிலிருந்தே எதிர்ப்பு இருந்தது. இயேசு பிறந்தபோது ஏரோது மன்னன் ஆட்சியிலிருந்தான். இப்பிரபஞ்ச அதிகாரியான இயேசுவின், அவரின் படைப்பான நட்சத்திரம் ஒன்று இவ்வுலகிற்கு இயேசுவை வரவேற்பது போல வானில் தோன்றியது. இதைக் கண்ட அந்நாட்டு ஞானிகள் ஏதோ, அரசர் பிறந்துவிட்டார் என்று ஏரோது அரசனின் அரண்மனைக்குச் சென்று விசாரித்தனர். ஆனால் அங்கு அரச புதல்வன் பிறக்கவில்லை என்பதை அறிந்தனர். இச்செய்தியை கேட்ட ஏரோது மன்னன் கலக்கமடைந்தான். தன் நாட்டில் வேறொரு அரசன் பிறந்திருப்பது அவனுக்கு திகிலை உண்டாக்கியது. ரகசியமாக ஞானிகளை அழைத்து, பிள்ளை பிறந்த காலத்தை கேட்டறிந்தான். பிள்ளையை அவர்கள் விசாரித்துக் கண்டபின் அவனிடம் அறிவிக்கச் சொல்லி அனுப்பிவைத்தான்.
ஞானிகள் நட்சத்திரத்தைப் பின் தொடர்ந்து இயேசு பிறந்த இடத்தை அடைந்தனர். தாங்கள் கொண்டு வந்த பொன், தூபவர்க்கம், வெள்ளைப்போளம் போன்ற காணிக்கைகளை வைத்து வணங்கினர். ஆனால், திரும்ப ஏரோதுவிடம் போக வேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டனர். ஆகவே, வேறு வழியாக தங்கள் தேசத்திற்குத் திரும்பிப் போனார்கள். இந்நிலையில் கர்த்தரின் தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்கும் காணப்பட்டு, ஏரோது கொலைச் செய்யத் தேடுவான். ஆகையால் பிள்ளையை கூட்டிக் கொண்டு எகிப்துக்கு ஓடிவிடச் சொன்னான். யோசேப்பும் அப்படியே செய்தான். ஏரோது, தான் ஞானிகளால் ஏமாற்றப்பட்டதை அறிந்து கோபமடைந்து, ஞானிகளிடம் விசாரித்த காலத்தின்படி இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளையும் கொலைச் செய்தான். ஏரோதின் ஆணை இறையரசர் இயேசுவின் உலக வாழ்க்கைப் பயணத்தை தடுக்க முடியவில்லை.
இயேசுபிரான் வாழ்ந்த நாட்களில் அவர் காட்டிச் சென்ற வழிமுறைகளை பின்பற்றும் மக்கள் தங்கள் எண்ணங்களும் செயல்களும் மாறி அவர்கள் புதிய வாழ்க்கைமுறையை பின்பற்றுகின்றனர். அது மக்களின் செயல்களுக்கு விளக்கம் கூறி தீமையிலிருந்து விலகி வாழ்வதற்கு வழி செய்கிறது. இதனால் உலக பண்பாட்டில் மாற்றமும், நாகரீக வளர்ச்சியும் ஏற்பட்டு வருகிறது.
உலகமெங்கிலும் டிசம்பர் 25-ம் தேதி கிறித்துவர்களும், அவரைப் பின்பற்றுவோரும் இயேசுவின் பிறப்பை ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர். இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய நட்சத்திரத்தின் அடையாளமாக, தங்கள் வீடுகளில் பெரிய நட்சத்திரங்களைக் கொண்டு அலங்கரித்து தங்கள் வீடுகளிலும் இயேசு பிறந்திருக்கிறார் என்று அறிவித்து மகிழ்கின்றனர் என்பதை நாம் காணலாம்.