ஒயின் ஷாப் வேலை முதல் சினிமா வரை... நகைச்சுவை ஜாம்பவான் செந்தில் பிறந்தநாள் ரீவைண்ட்!

புதன், 23 மார்ச் 2022 (11:13 IST)
தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவானாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் செந்தில். கவுண்டமணியுடன் சேர்ந்து நடித்து நகைச்சுவை காட்சிகள் மூலம் மக்களின் மனதை கவர்ந்து மிகப்பெரும் அளவில் பிரபலமானார். இன்று வரை அவரது இடத்தை பிடிக்க ஒருத்தரும் இல்லை. 
 
இராமநாதபுரம் இளஞ்செம்பூர் என்ற ஊரை சேர்ந்த செந்தில்  தனது 12 வயதில் அப்பா திட்டிவிட்டார் என்ற காரணத்துக்காக வீட்டை விட்டு ஓடிவந்து முதலில் ஒரு எண்ணெய் ஆட்டும் நிலையத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் ஒயின் ஷாப் கடையில் வெயிட்டராக பணிபுரிந்தார். 
 
அதன் பிறகு நடிப்பில் மீது இருந்த ஆர்வத்தால் நாடகத்தில் சேர்ந்து தன்னுடைய நடிப்புத் திறமைகளை வளர்த்துக் கொண்டு திரையுலகில் நுழைந்தார். அப்போதுதான் கவுண்டமனியின் அறிமுகம் கிடைத்துள்ளது. அதன் பிறகு இருவரும் இணைந்து மேடை நாடகங்களில் ஒன்றாக நடித்து மிகப்பெரும் அளவில் தமிழ் சினிமாவில் பிரபலமானார்கள். 
 
ஆரம்பத்தில் சின்ன வேடங்களில் நடித்து வந்த செந்திலுக்கு1983 ஆம் ஆண்டு வெளியான மலையூர் மம்பட்டியான் படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தனது பெற்றோர்களை 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்க சென்ற இவர் இன்முகத்துடன் வரவேற்கப்பட்டார். 1984ஆம் ஆண்டு கலைச்செல்வி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர்.
 
திரைப்பட நடிகராகவும்,  அரசியல்வாதியும் இருந்து வரும் செந்தில் இன்று தனது 71வது பிறந்தநாளை கொணடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்