நமக்கு நாமே ஸ்டாலின் நடிக்கிறாரா?: ஆட்சியை பிடிக்க ஹைட்டெக் ராஜதந்திரமா?

அ.கேஸ்டன்

செவ்வாய், 2 பிப்ரவரி 2016 (16:32 IST)
கடந்த சில மாதங்களாக திமுக பொருளாளர் ஸ்டாலின்  நமக்கு நாமே என்ற திட்டத்தின்படி தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். அந்த திட்டத்திற்கு மக்களிடம் வரவேற்பும் உள்ளது. இந்த பயணத்தின்போது பொதுமக்களை சந்தித்த ஸ்டாலின் அந்த பகுதிகளில் உள்ள குறைகளை கேட்டார். பின் திமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த குறைகளை நிவர்த்தி செய்யப்படும் என்றும் தமிழகமெங்கும் இதே வசனத்தை மாற்றாமலும் கூறி வருகிறார்.


 
 
கடந்த 2011-இல் ஆட்சியை இழந்த திமுக அடுத்த நான்கரை ஆண்டுகள் என்ன செய்தது கொண்டிருந்தது? கடந்த சில மாதங்களாக மட்டும் ஏன் மக்களை சந்தித்து வருகிறார். தேர்தல் வந்தால் மட்டும் தான் அரசியல்வாதிகள் மக்களை சந்திப்பார்கள் என்ற பொதுவான கருத்தை ஸ்டாலின் நிரூபிக்கிறார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என போகுமிடமில்லாம் வாக்குறுதியளிக்கும் ஸ்டாலின், மதுவே இல்லாமல் இருந்த தமிழகத்தில் முதன் முதலாக மதுவை கொண்டுவந்தது திமுக தான் என்பதே சொல்ல மறுப்பது ஏன்?. இதற்கு முன் ஆட்சியில் இருந்த போது மதுவை ஒழிக்காமல் அந்த வருவாயை ருசிபார்த்தது ஏன்?. இப்பொழுது தான் மக்கள் மீது அக்கறை வந்ததா?. அப்படி உண்மையிலேயே மதுவால் மக்கள் படும் அவதியை பார்த்து உங்களுக்கு அக்கறை இருக்கிறது என்றால், உங்கள் கட்சியினர் நடத்தும் மது ஆலைகளை இன்னமும் மூடாமல் இருப்பது ஏன்? என சமூக வலைதளங்களில் இளைஞர்கள் விவாதிக்கின்றனர்.
 
மேலும், டி.என்.பி.எஸ்.சி குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. அரசு அமைந்ததும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசியல்மயமாவது உடனடியாக தடுக்கப்படும். அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மீதான நம்பகத்தன்மையை மீட்பதற்கும், தேர்வு முறைகளில் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை நிலைநாட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
 
ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வந்தால் சரிசெய்யப்படும் என்று கூறிவரும் ஸ்டாலின், இதற்கு முன் திமுக ஆட்சி அமைக்கவில்லையா அல்லது இப்போதுதான் முதன்முறையாக திமுக ஆட்சி அமைக்க போகிறதா என்ற கேள்வியை மக்கள் கேட்டு வருகின்றனர். கடந்த கால திமுக ஆட்சியின்போது இதே குறைகள் தொடர்ந்து இருந்துகொண்டுதான் இருந்தன. அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இப்போது தேர்தல் வருவதையொட்டி இப்படி கூறுகிறார் என்றும் மக்கள் பேசிவருகின்றனர். இது குறித்து சமூகவலைதளங்களிலும் பலர் விமர்சனம் செய்துவருகின்றனர்.
 
கடந்த காலங்களில் திமுக செய்த தவறுகளுக்கு மக்களிடம் பொத்தாம் பொதுவாக மன்னிப்பு கேட்கும் ஸ்டாலின், கடந்த காலங்களில் திமுக தவறான ஆட்சிதான் நடத்தியது என்பதை ஏற்றுக்கொள்கிறாரா?
 
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்......

ஆட்டோவில் செல்வதும், டீ கடைகளில் டீ குடிப்பதும், பொதுமக்களிடம் பேசுவதும், அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் செய்து தனக்கான மார்க்கெட்டை உயர்த்தும் ஸ்டாலின், ஆட்சியில் இருந்த போது, இவற்றையெல்லாம் ஏன் செய்யவில்லை?.


 
 
ஊழல் குற்றம் சுமத்தப்பட்டு தனது கட்சியில் இருக்கும் தலைவர்கள் மீது திமுக எடுத்த நடவடிக்கை என்ன? 2ஜி ஊழல் வழக்கில் சிக்கிய தனது கட்சியை சார்ந்தவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதித்தது ஏன்? அதே வழக்கில் சிக்கியிருக்கும் கனிமொழிக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்கியது ஏன்? இவை ஊழலை ஊக்குவிக்கும் செயல்பாடுகள் தானே? என மக்கள் பேசிவருகின்றனர். தன் கட்சியில் மாற்றத்தை கொண்டுவராமல், திமுக ஆட்சிக்கு வந்தால் எல்லாம் மாறிவிடும், ஊழலற்ற ஆட்சியை வழங்குவோம் என அவர் எப்படி கூறுகிறார். தனது கட்சியில் முதலில் மாற்றத்தை கொண்டு வந்துவிட்டு, ஆட்சியில் மாற்றத்தை கொண்டுவரலாமே.
 
திமுக ஆட்சியில் இருந்தபோது, மீத்தேன் ஏரிவாய்வு திட்டத்துக்கு அனுமதி வழங்கி விட்டு, இப்பொழுது ஆட்சியில் இல்லாத போது, மீத்தேன் திட்டத்தை பற்றி படித்துப்பார்க்காமல், தெரியாமல் அனுமதி வழங்கிவிட்டேன் என கூறும் நீங்கள் எப்படி மக்கள் விரும்பும் மாற்றத்தை கொண்டுவர முடியும். முதலில் நீங்கள் மாறுங்கள் பின்பு மாற்றத்தை கொண்டு வாருங்கள் என மக்களிடம் பொதுவான கருத்து நிலவி வருகிறது.
 
இப்படி தேர்தல் வரும் போது வேடமிட்டு நடிப்பது, மக்களை முட்டாள்களாக நினைப்பதுதான் காரணமா? இல்லை உங்களின் கடந்த கால ஆட்சியை பற்றி மக்களுக்கு தெரியாது அல்லது மறந்திருப்பார்கள் என்ற நினைப்பா?.
 
நமக்கு நாமே பயணத்தின் நோக்கம் திமுக ஆட்சியில் வரவேண்டும் என்பதா? இல்லை மக்களுக்கு உண்மையான மாற்றம் வரவேண்டும் என்ற நல்லெண்ணமா?. அதற்கு ஏன் இந்த திடீர் நடிப்பு என்று தெரியவில்லை. சென்னை மழை வெள்ளத்திற்கு முழுக்க முழுக்க காரணம் அதிமுக அரசு தான் என் கூறும் நீங்கள், உங்கள் தந்தை ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தார் என்பதை மறந்துவிட வேண்டாம். ஆக்ரமிப்புகளும், இயற்கை அழிப்புகளும் இரண்டு ஆட்சியிலும் நடந்தவைகள் தானே?.
 
மாற்றத்தை எதிர்பார்க்கும் மக்களிடம் ஹைட்டெக் முறையில் பிரச்சாரம் மேற்கொள்ளும் ஸ்டாலினின் நமக்கு நாமே திட்டம் வரவேற்பை பெற்றாலும், மேற்கூறிய கருத்துக்கள் அனைத்தும், சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஸ்டாலின் தேர்தலுக்காக நடிக்கிறார் என விவாதிக்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்