விஜயகாந்தை ஓரம்கட்டி தன்னை முன்னிறுத்துகிறாரா பிரேமலதா?

அ.கேஸ்டன்

சனி, 12 மார்ச் 2016 (12:37 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்தை ஓரம்கட்டி தன்னை முன்னிறுத்த பார்க்கிறார் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதற்காக அவர்கள் சொல்லும் காரணங்கள் சில கீழே உள்ளன படியுங்கள்.


 
 
* கூட்டணி குறித்த முடிவில் ஆதிக்கம்:
 
வருகிற சட்டசபை தேர்தலில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதை தீர்மானிப்பதில் விஜயகாந்தின் தேமுதிக முக்கிய பங்கு வகிக்கும் என்பது அரசியல் நிலவரம் தெரிந்த அனைவரும் அறிந்த ஒன்றே. எனவே தான் பல கட்சிகள் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க சுற்றி சுற்றி வந்தது. ஆனால் தேமுதிக தனித்து போட்டி என்று அறிவித்து பல கட்சிகளையும், தன் சொந்த கட்சியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 
இந்த முடிவு விஜயகாந்த் சுயமாக எடுத்த முடிவு இல்லை என அரசியல் வட்டாரத்தில் பேசுகிறார்கள். திமுக பக்கம் விஜயகாந்த் நெருக்கம் காட்டினார், திமுகவுடன் சேருவதற்கு தான் விஜயகாந்திற்கும், கட்சியினருக்கும் விருப்பம். ஆனால் இதற்கு முட்டுக்கட்டை போட்டவர் பிரேமலதா. திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்த போதே அக்கட்சியை பற்றி ஊடகங்களின் முன் விமர்சித்து இரு கட்சிக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினார்.
 
கூட்டணி குறித்து தான் தான் முடிவு செய்ய வேண்டும், என்னுடைய ஆதிக்கம் தான் அதிகம் இருக்க வேண்டும் என பிரேமலதா நினைத்து தான் இப்படியெல்லாம் செய்ததாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியை தவிர்க்கவே அவர் பாஜக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. கட்சியை தன் பிடியில் வைத்துக்கொள்ளவே பிரேமலதா கூட்டணி விவகாரத்தில் தலையிட்டு குட்டையை குழப்பியதாக அரசியல் வட்டாரத்தில் பேசுகிறார்கள்.
 
* மகளிர் அணி பொதுக்கூட்டத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பு:
 
சென்ற முறை காஞ்சிபுரம் மாவட்டம் வேடலில் நடைபெற்ற தேமுதிகவின் அரசியல் திருப்புமுனை மாநாட்டில் தான் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அத்தனை பேரின் எதிர்பார்ப்பையும் தகர்த்தனர். ஆனல் கடந்த 10 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தேமுதிக மகளிர் அணி பொதுக்கூட்டத்தில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க போவதில்லை, தனித்து போட்டி என்ற அறிவிப்பை அறிவித்தனர். தேமுதிக மகளிர் அணியின் தலைவி பிரேமலதா என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு மேல நான் என்ன சொல்றது, அரசியல் வட்டாரத்தில் என்ன பேசுவாங்கனு உங்களுக்கு தெரியாத?.
 
* விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பேசியது:
 
10 ஆம் தேதி நடைபெற்ற தேமுதிக மகளிர் அணி மாநாட்டில் பேசிய பிரேமலதா விஜயகாந்தின் உடல் நிலை குறித்து பேசினார். இந்த பேச்சு தான் விஜயகந்தை பிரேமலதா ஓரம்கட்டி தன்னை முன்னிறுத்த பார்க்கிறார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
 
விஜயகாந்திற்கு சைனஸ் பிரச்சனை இருப்பதால் தான் மேடைப் பேச்சில் அவருக்கும் தடுமாற்றம் இருப்பதாக பிரேமலதா கூறினார். மேலும் அவருக்கு தொண்டையில் டான்சிலஸ் பிரச்சனை உள்ளது, மூக்கடைப்பு, தொண்டை அடைப்பு உள்ளது, வயோதிகம் காரணமாகவும் அவருடைய பேச்சு புரியாமல் இருப்பதாக அவர் பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜயகாந்தின் உடல் நிலையை காரணம் காட்டி அவரை ஓரம் காட்டி, அவருடையை பெயரை பயன்படுத்தி தன்னை அரசியலில் முன்னிலை படுத்த பார்க்கிறார் பிரேமலதா என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்