தூக்க கலக்கம், பசி, இரவு வேளை, நீண்ட தூர பயணம் இந்த சூழ்நிலையில் நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருக்கும் உணவகத்தில் நின்றது பேருந்து. பசியை தீர்க்க உணவகத்தினுள் சென்றேன். பசி தீர்ந்ததோ இல்லையோ என் பர்ஸில் இருந்த பணம் தீர்ந்தது. ஒரு பயணியின் குமுறல் இது.
பல்வேறு ஆட்சிகள் மாறிவிட்டன தமிழகத்தில், பல்வேறு துறைகளில் சாதனை, இந்தியாவில் இருக்கும் முதன்மையான மாநிலங்களில் முக்கியமான மாநிலம் என பெருமைப்படுகிறோம். சாமனியனின் வாழ்வில் என்ன முன்னேற்றம் வந்து விட்டது.
ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசி வழங்குகிறது அரசு ஆனால் நெடுஞ்சாலை உணவகத்தில் உள்ள கழிவறையில் சிறுநீர் கழிக்க ரூ. 5 வசூலிக்கிறார்கள். அம்மா உணவகம் என்னும் அரசு உணவகங்களில் ரூ. 5-க்கு 3 சப்பாத்தி கிடைக்கிறது. ஆனால் நெடுஞ்சாலை உணவகங்களில் ரூ. 50-க்கு ஒரு தோசையை விற்கிறார்கள். இதனை கொள்ளை என்று சொல்வதா இல்லை பேராசை என்று சொல்வதா என தெரியவில்லை?.
மதுபான கடைகளை அரசே எடுத்து நடத்துகின்றன. அதற்கு எந்த கட்சியும் விதிவிலக்கல்ல. இந்த நெடுஞ்சாலை கடைகளை அரசே எடுத்து நடத்தினால் என்ன குடியா மூழ்கி போயிடும். ஆளுக்கும் சேர்த்து விலை சொல்லும் இந்த கடைகளில் போய் சாப்பிடாமல் பலர் பசியுடனே வண்டிக்குள்ளேயே இருக்கும் நிகழ்வை நாம் தினமும் பார்த்துக்கொண்டே தனே இருக்கிறோம்.
இலவசம், இலவசம் என கூவி கூவி தங்கள் தேர்தல் அறிக்கைகளில் வெளியிட்டு மக்களை சோம்பேரியாக்கும் அரசியல் கட்சிகளே நெடுஞ்சாலை உணவகங்களை இனி அரசு எடுத்து நடத்தும் என உங்கள் தேர்தல் அறிக்கையில் வெளியிட திராணி இருக்கா? என்பதே சாமானியனின் கேள்வியாக உள்ளது.