கோடியில் இருந்தவனையும் இன்று தெரு கோடிக்கு வர வைத்துவிட்டது சென்னையை பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் இந்த கனமழை. சில மாதங்களுக்கு முன் தண்ணீருக்காக அலைந்த சென்னை இன்று கண்ணீரோடு ஏங்கி நிற்கிறது.
அடைக்கலமடைய இடமில்லாமல் அனாதைகளாக உலகத்தின் முன்னால் தனது சோகமான முகத்துடன் சென்னை மக்கள் ஒருபக்கம் நிற்க. ஏரி, குளங்களையும், இயற்கை வளங்களையும் அழித்து பன்னாட்டு நிறுவனங்களையும், அடுக்குமாடி குடியிருப்புகளையும் உருவாக்கி நீர் நிலைகளை அழித்ததால் தன் இருப்பிடத்தை தேடி ஆக்ரோசமாய், ஆவேசமாய் அலையும் மழையின் கோர முகத்தையும் இந்த உலகம் சென்னையின் மூலம் கண்டுகொண்டிருக்கிறது.
ஏழையோ, பணக்காரனோ, குடிசையோ, அடுக்குமாடி குடியிருப்புகளோ எதுவும் எனக்கு தெரியாது எல்லோரும் எனக்கு ஒரே மாதிரி தான் என தன் சமத்துவத்தை சென்னைக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது இந்த மழை. இயற்கையை நீ அழித்தால், இயற்கை ஒரு நாள் உன்னை திருப்பி அழிக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது இந்த கன மழை.
ஒரு பக்கம் தண்ணீரால் மூழ்கி கிடக்கும் சென்னை, மறுபக்கம் மூழ்காத ஒரு சில பகுதிகளையும் விடமாட்டேன் என கங்கனம் கட்டிக்கொண்டு விரட்டி விரட்டி அடிக்கும் மழை. சென்னையில் இத்தனை நல்லவர்களா? மழைக்கு தான் இத்தனை பாசமா சென்னைவாசிகள் மீது?.
வானம் பிளந்து விட்டதா? இல்லை வருணபகவான் திறந்து விட்ட மழையை அடைக்க மறந்து உறங்கி கொண்டிருக்கிறானா என்னவென்று சொல்வது?.
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்.....
உடமைகளை இழந்து, உறவினர்களை இழந்து நிற்கும் மழையின் சகோதரர்களுக்கு யார் ஆறுதல் சொல்வது? ஒருவேளை தன் சகோதரங்களுக்கு ஆறுதல் சொல்ல தான் வானம் தன் கண்ணீரை பொழிந்து கொண்டிருக்கிறதா?.
தீவிரவாதமும், சகிப்பின்மையும் தலைதூக்கும் போது இந்த உலகில் மனிதாபிமானம், மனித நேயம் இருக்கிறதா என்கிற அச்சம் தோன்றும். ஆனால் சென்னைவாசிகள் படும் சொல்லன்னா துயரங்களை பார்த்து மனித நேயம் கொண்ட இதயங்கள் உதவிக்கரம் நீட்டி உதவுவதை பார்க்கும் போது மனிதமும், மனித நேயமும் இன்னமும் சாகவில்லை என்பது நிரூபனமாகிறது. உடலில் எந்த பகுதியில் அடிபட்டாலும் கண்கள் கண்ணீரை வெளிப்படுத்தி தனது ஆறுதலை கூறும். அதுபோல தன் சக மனிதன் மழையினால் பாதிக்கப்பட்டு சகலத்தையும் இழந்து நிற்பதை பார்த்து பல கருணை உள்ளங்கள் தங்கள் உதவி கரங்களை நீட்டி ஆறுதல் சொல்கின்றனர்.
தமிழக அரசு முதற்கட்டமாக 500 கோடிகளை ஒதுக்கி நிவாரண பணிகளை மேற்கொண்ட போதிலும். விடாத மழையில் சேதங்கள் அதிகமாகிக் கொண்டே போகிறது. தமிழக மக்களின் துயர் துடைக்க இதுவரைக்கும் 1940 கோடிகளை ஒதுக்கி, மேலும் உதவ தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
உதவிகள் வழங்குவதில் அரசுக்கு இணையாக தனி நபர்களும், தொண்டு நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும் களத்தில் இறங்கி தீவிர பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்துக்கும் ஆந்திராவுக்கும் செம்மரக்கடத்தல், என்கவுண்டர் உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருந்தாலும், இன்னல் வேளையில் சகலத்தையும் மறந்து, அண்டை மாநில மக்கள் படும் கஷ்டத்தை பார்த்து முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜூன் ரூ.25 லட்சம், ஜூனியர் என்.டி.ஆர். ரூ.10 லட்சமும், மகேஷ் பாபு 10 லட்சமும் வழங்குவதாக அறிவித்துள்ளனர். வருண் தேஜா 3 லட்சம், சாய் தருண் தேஜ் 3 லட்சம் நிவாரணம் அளித்துள்ளனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் சார்பில் ரூ.2 லட்சத்திலான நிவாரணப் பொருள்கள் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கியுள்ளார்.
மேலும் அடுத்த பக்கம் பார்க்கவும்....
பீகார் துணை முதல்வராக பதவியேற்றுள்ள தேஜஸ்வி தனது முதல் மாத சம்பளத்தை நிவாரணமாக அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு 5 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார், கர்நாடக முதல்வர் சித்தராமையா 5 கோடியும், ஒரிசா முதல்வர் நவின் பட்நாயக் 5 கோடி நிவாரண நிதியும் வழங்கவதாகவும் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்குற்கு நிவாரண நிதியாக, ஒரு நாள் ஊதியத்தை வழங்க தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.
இவர்களை தவிர பல பிரபலங்கள் உதவி செய்துள்ளனர்..... பல்வேறு மக்கள் தங்கள் உடல் உழைப்பையும் பங்களிப்பையும் அளித்து மீட்பு பணிகளையும், நிவாரண பணிகாளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
உடமைகளையும், உறவுகளையும் இழந்து மீளா துயரில் இருக்கும் மக்களுக்கு இந்த உதவிகள் ஈடாக அமையாவிட்டாலும் சற்று ஆறுதலாய் அமையும். அவர்களுக்கு ஆறுதலாக மனித குலம் தயாராக இருக்கிறது ஆனால் இயற்கையின் கோப சீற்றத்திலிருந்து காப்பாற்றுவது யார்?.... முடிந்த வரை உதவுவோம்.... மீண்டும் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி, இந்த சோகத்தின் வடுக்கள் மாற இறைவனை வேண்டுவோம்.....