மதூர் பண்டார்கரின் காலண்டர் கேர்ள்ஸ் வயது வந்தவர்களுக்கு மட்டும் - தணிக்கைக்குழு கறார்

புதன், 5 ஆகஸ்ட் 2015 (09:33 IST)
மதூர் பண்டார்கரின் படங்கள் என்றால் பிரச்சனைகளுக்கு பஞ்சமிருக்காது. சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்ற இவர், படமாக்க எடுத்துக் கொள்ளும் கதையும், கதைக்களமும் வித்தியாசமானவை. பொதுப்புத்தியை கேள்வி கேட்பவை.
அவரது இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய படம், காலண்டர் கேர்ள்ஸ். காலண்டருக்கு போஸ் கொடுக்கும் அரைகுறை உடை மாடல்களின் உலகத்தைப் பற்றிய படம். ஆகஸ்டில் வெளியாவதாக இருந்த இந்தப் படம் செப்டம்பருக்கு தள்ளிப் போயுள்ளது. சென்சார் கெடுபிடியே இதற்கு காரணம் என பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
காலண்டர் கேர்ள்ஸ் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு, எந்தக் காட்சிக்கும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லை. பிச்சஸ் போன்ற பெண்களை மோசமாக குறிக்கும் வார்த்தைகளை மட்டும் எடிட் செய்ய கேட்டிருக்கிறது. கூடவே வயது வந்தவர்களுக்கு மட்டுமான ஏ சான்றிதழ்தான் தருவோம் என்றும் கூறியுள்ளது. ஏ சான்றிதழ்தான் இப்போது பிரச்சனை.
 
இதற்குப் பதிலளித்துள்ள தணிக்கைக்குழு தலைவர், மதூர் பண்டார்கர் தனது படங்களை குழந்தைகளுக்காகவா எடுக்கிறார்? இது என்ன வால்ட் டிஸ்னி படமா? பிகினி பெண்களைப் பற்றிய படம்தானே இது. குழந்தைகள் இந்த உடையைக்கூட அணிவதில்லை. மதூரின் சாந்தினி பார், பேஜ் 3, ஃபேஷன் எல்லாம் வயது வந்த பார்வையாளர்களுக்கான படம்தானே. இப்போது மட்டும் ஏன் ஏ சான்றிதழுக்காக கவலைப்படுகிறார் என கேட்டுள்ளார்.
 
மதூரிடம் கேட்டால் தணிக்கைக்குழு போலவே அவர் தரப்பு நியாயம் ஒன்று வைத்திருப்பார். ஏ சான்றோ யு சான்றோ. படம் நன்றாக இருந்தால் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.

வெப்துனியாவைப் படிக்கவும்