சிங்கம் 2 வில் கரீனா கபூர்

வெள்ளி, 24 ஜனவரி 2014 (11:21 IST)
இயக்குனர் ரோஹித் ஷெட்டி என்றால் கோடிகளை கொட்ட தயாரிப்பாளர்கள் தயார். ரோஹித்தின் ஹிட் லிஸ்ட் அப்படி. தியேட்டரில் பாப்கார்ன் விற்பவர்வரை சந்தோஷப்படும் மாஸ் மசாலாக்களை உருவாக்குவதில் வல்லவர். கோல்மால், சிங்கம், சென்னை எக்ஸ்பிரஸ் அனைத்தும் இவர் கைவண்ணம்.
FILE

முப்பது வயதில் படம் இயக்க ஆரம்பித்தவர் காப்பியின் மூலம்தான் புகழடைந்தார். இவரின் கோல்மால் ப்ரியதர்ஷனின் காக்ககுயில் படத்தின் தழுவல் (காக்ககுயில் ஹாலிவுட்டின் காப்பி என்பது தனிக்கதை). அவ்வளவு எளிதில் கண்டு பிடிக்க முடியாத தனது தழுவல் திறமையால் கோல்மால் 2, 3 படங்களை எடுத்து ஹிட்டாக்கினார்.

தழுவுவதில் தப்பில்லை என்ற பாலிசியே ரோஹித்தை இந்த நிலைக்கு கொண்டு சேர்த்தது. சிங்கம் தமிழ்ப் படத்தின் உரிமையை முறைப்படி வாங்கி அதே பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்தார். அஜய்தேவ்கான் நடித்த அப்படம் 100 கோடி கிளப்பில் எளிதாக இணைந்து கொண்டது. ரோஹித்தின் அடுத்தப் பட. போல் பச்சான்கூட மலையாள தழுவல்தான். சென்னை எக்ஸ்பிரஸ் பல படங்களின் அவியல்.

அடுத்து சிங்கம் 2 வில் கவனம் பதித்துள்ளார். ஹரியின் சிங்கம் 2 வெளியாகும் முன்பே ஹிந்தி சிங்கம் 2 வுக்கான ஸ்கிரிப்டை எழுத ஆரம்பித்தார் ரோஹித். அமர்க்களமான பிளாட்பார்மை ஹரி சிங்கத்தில் அமைத்துத் தந்ததால் சிங்கம் 2 வின் ஸ்கிரிப்ட் தன்னுடையதாக இருக்க வேண்டும் என்பது ரோஹித்தின் விருப்பம். ஹரியின் சிங்கம் 2 தனக்குப் பிடித்தால் அதனை சிங்கம் 3 யாக உருவாக்குவேன் என்றும் அப்போது தெரிவித்தார்.

அஜய்தேவ்கானை வைத்து அவர் எடுத்துவரும் சிங்கம் 2 அவரின் சொந்த ஸ்கிரிப்ட். முதல் பாகத்தில் காஜல் அகர்வால் நடித்தால் இரண்டாவதில் கரீனா கபூர். இவரை ஒப்பந்தம் செய்ததும் படத்தின் வியாபார மதிப்பும் சடக்கென்று கூடியது.

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 படத்தை வெளியிடுவது என முடிவு செய்துள்ளது ரிலையன்ஸ் என்டர்டெய்ன்மெண்ட். அதேநாளில் இதனுடன் மோதவிருப்பது அக்ஷயின் கப்பார்.

கப்பார் முருகதாஸின் ரமணா படத்தின் ஹிந்தி ரீமேக்.

வெப்துனியாவைப் படிக்கவும்