சிங்கத்தை வாழ்த்திய பாட்ஷா

வெள்ளி, 11 ஜூலை 2014 (16:11 IST)
ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ் கான் நடித்திருக்கும் சிங்கம் ரிட்டர்ன்ஸ் ஆகஸ்ட் 15 திரைக்கு வருகிறது. படம் வெற்றி பெற பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ரோஹித் ஷெட்டிக்கும், அஜய்தேவ் கானுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதில் என்ன வியப்பு இருக்கிறது? கேள்வி கேட்பவர்கள் 2012இல் நடந்த ஃப்ளாஷ்பேக்கை அறிந்து கொண்டால் சுவாரஸியமாக இருக்கும்.
 
2012இல் சல்மானும், ஷாருக்கும் நீயா நானா என்று மோதிக் கொண்டிருந்த நேரம். ஷாருக்கானின் ஜப் தக் ஹே ஜான் நவம்பர் 12ஆம் தேதி வெளியாகிறது. நவம்பர் 13 அஜய்தேவ் கானின் சன் ஆஃப் சர்தார் திரைக்கு வருகிறது. ஷாருக்கானுக்கு அஜய் தேவ் கான் போட்டியாளரே இல்லை. என்றாலும் அன்று சன் ஆஃப் சர்தாருக்கு தனது முழு ஆதரவை தெரிவித்தார் சல்மான். படத்தை புரமோட் செய்யும் விதத்தில் பேசவும் செய்தார். ஜப் தக் ஹே ஜான் படத்தை சன் ஆஃப் சர்தார் முந்த வேண்டும் என்ற சல்மான் கானின் விருப்பத்துக்காக ஷாருக்கானுக்கு நேராக அஜய் தேவ் கான் நிறுத்தப்பட்டார்.
 
சன் ஆஃப் சர்தார் 105.03 கோடிகள் வசூலித்தது. ஷாருக்கான் படம் 120.85 கோடிகள்.
 

இரண்டு வருடங்களுக்கு முன் மோதிக் கொண்டவருக்கு இப்போது வாழ்த்து தெரிவித்துள்ளார் ஷாருக். காரணம் சிங்கம் ரிட்டர்ன்ஸை இயக்கியிருக்கும் ரோஹித் ஷெட்டி ஷாருக்கின் சென்னை எக்ஸ்பிரஸை இயக்கியவர்.
தமிழில் ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் படத்தின் இந்தி ரீமேக்கில் (அதன் பெயரும் சிங்கம்தான்) அஜய் தேவ் கான் 2011இல் நடித்தார். ஜோ‌டி காஜல் அகர்வால். அதன் இரண்டாம் பாகம்தான் சிங்கம் ரிட்டர்ன்ஸ். ஆனால் இதில் ஜோ‌டி காஜல் இல்லை கரீனா கபூர். 
 
ஹரியின் சிங்கம் 2 கதைதான் இந்தி சிங்கம் ரிட்டர்ன்ஸ் கதை என்று பலரும் நினைக்கின்றனர். தவறு. சிங்கத்தின் சீக்வெலாக இருந்தாலும் சிங்கம் ரிட்டர்ன்ஸின் கதையை ரோஹித்தே எழுதியுள்ளார்.
 
சுதந்திர தின ஸ்பெஷலாக படம் திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்