சில விளங்க முடியாத விஷயங்களையும், விநோத முறைகளையும் நமது மக்கள் பின்பற்றி வருகின்றனர். அதிலும் கடவுளின் அருளைப் பெற சில விபரீத பிரார்த்தனைகளையும் மக்கள் செய்கின்றனர்.
அப்படியிருக்க தீர்க்க முடியாத சில வியாதிகளுக்காக அவர்கள் எடுத்துக் கொள்ளும் சிகிச்சை முறைகளைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
இந்த வாரம் நம்பினால் நம்புங்கள் பகுதியில் மஞ்சள் காமாலையைப் போக்குவதற்காக இருக்கும் ஒரு சிகிச்சை முறையை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம்.
ஓரிடத்தில், மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக பெரிய வரிசையில் காத்து இருப்பதைக் கண்டோம். இந்த காட்சி ஏதாவது ஒரு மருத்துவமனையில் கண்டது அல்ல, மஞ்ஜித் பால் சலுஜா என்பவரது கடையின் வாசலில் கண்ட காட்சிதான். இவரது விநோத சிகிச்சை முறையால் மஞ்சள் காமாலை குணமடைவதாகக் கூறப்படுகிறது.
இந்த சிகிச்சை முறையில், மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டவரது காதில் முக்கோண வடிவ காகிதத்தை வைக்கிறார். காகிதத்தின் ஒரு முனையை மெழுகுவர்த்தி மூலமாக பற்ற வைக்கிறார். அந்த காகிதம் எரிந்து கொண்டிருக்கும் போது அவர் தொடர்ந்து குருபானி ஓதிக் கொண்டிருக்கிறார்.
webdunia photo
WD
அந்த காகிதம் எரிந்து காதில் இருந்து விழும்போது, காதின் ஓரத்தில் மஞ்சள் திரவம் இருப்பதை காண முடிகிறது. இந்த சிகிச்சையின் மூலம் உடலில் இருக்கும் மஞ்சள் காமாலை காதின் வழியாக வெளியேறிவிடுவதாக மஞ்ஜீத் கூறுகிறார்.
மஞ்ஜீத் சர்தார்ஜி இனத்தைச் சேர்ந்தவர் என்றாலும், ஒவ்வொரு முறையும் சிகிச்சையைத் தொடங்கும்போது விநாயகரை வழிபட மறப்பதில்லை.
மேலும் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் நிச்சயமாக மாலை, தேங்காய், ஊதுபத்தி போன்றவற்றைக் கொண்டு வர வேண்டும். மேலும் சிலர் தங்கள் விருப்பப்படி வேண்டுதல்களை செய்கின்றனர்.
இது குறித்து பேசிய மஞ்ஜீத், மஞ்சள் காமாலைக்கு இலவசமாகவே சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் அவர்களிடம் இருக்கும் பக்தியைப் வெளிப்படுத்தவே இதுபோன்றவற்றைக் கொண்டு வர சொல்கிறேன் என்கிறார்.
இங்கு வரும் மக்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று மருந்துகளும் சாப்பிட்டு வருகின்றனர். எனினும் இந்த முறையினால் நோய் குணமாகிவிடாதா என்ற நம்பிக்கையில் வருகின்றனர்.
webdunia photo
WD
இது குறித்து மஞ்ஜீத் கூறுகையில், மஞ்சள் காமாலையைப் போக்கும் சக்தி தனக்கு கடவுள் கொடுத்த வரம் என்றும், இந்த சிகிச்சை முறையை தனது தந்தை மற்றும் தாத்தாவும் செய்து வந்ததாகக் கூறுகிறார். நானும் நோயாளிகளுக்கு மருந்து அளிக்கிறேன்.
அது ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் கலவையாகும். ஒரு நாளைக்கு சற்றேறக்குறைய 80 முதல் 90 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறேன். ஒரு நோயாளியைப் பார்த்த உடனேயே, இவருக்கு நோய் குணமாக எத்தனை காலம் பிடிக்கும் என்பதைத் தெரிந்து கொள்வேன் என்கிறார்.
மஞ்ஜீத் பால் சலுஜாவிடம் ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். அவ்வளவு ஏன் அதில் சிலர் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு இங்கு வருபவர்களும் உண்டு. எத்தனையோ மருத்துவர்கள் தங்களது குடும்பத்தில் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களை இங்கு அழைத்து வந்துள்ளனர்.
இந்த சிகிச்சை முறைக்குக் காரணம் மஞ்ஜீத் பாலிடம் உள்ள சக்தியா அல்லது அவர் கொடுக்கும் மருந்தின் சக்தியா? நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?