யாரும் இல்லாதவரின் சடலத்தை சுமந்து சென்ற பெண் எஸ்.ஐ

செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (14:52 IST)
ஆந்திரப் பிரதேசத்தில் வயதான ஒருவரின் சடலத்தை, பெண் உதவிக் காவல் ஆய்வாளர் ஒருவர் சுமந்து சென்றது மட்டுமின்றி இறுதி மரியாதை செய்யவும் உதவியது பலரின் பாராட்டுகளை பெற்றிருக்கிறது.
 
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த காசிபக்கா நகராட்சியில், அதிவிக்கொத்துரு கிராமத்தில் விவசாய நிலத்தில் ஒரு முதியவர் இறந்து கிடப்பதாக காசிபக்கா காவல் நிலையத்துக்கு நேற்று (பிப்வரி 1, திங்கட்கிழமை) தகவல் கிடைத்தது.
 
சம்பவ இடத்துக்குச் சென்ற பெண் உதவி ஆய்வாளர் கொட்டுரு சிரிஷா, முதியவரின் சடலத்தைப் பார்வையிட்டார். அந்த சடலம் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கி இருந்தது. எனவே பலரும் சடலத்துக்கு அருகில் கூடச் செல்ல விரும்பவில்லை.
 
இறந்து கிடந்த முதியவரைக் குறித்து விசாரித்திருகிறார் அப்பெண் உதவி ஆய்வாளர். அவர் ஒரு யாசகர் எனத் தெரிய வந்தது. அவரைக் குறித்த மேலதிக தகவல்கள் கிடைக்கவில்லை.
 
எனவே, இறந்த முதியவருக்கு இறுதி மரியாதை செய்ய லலிதா சேரிட்டபிள் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்துக்கு அழைத்துப் பேசினார் சிரிஷா. முதியவரின் பிணம் இருந்த இடத்துக்கும், காவல் துறை வாகனத்துக்கும் சுமாராக ஒரு சில கிலோமீட்டர் தூரம் இருந்ததால், அவரின் சடலத்தை எடுத்துச் செல்ல கிராம மக்களிடம் உதவி கோரினார்.
 
யாரும் உதவிக்கு வராத நிலையில், தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவருடன், தானே சடலத்தைச் சுமந்து வந்தார். மேலும், இறுதி மரியாதை செய்வதற்காக தனது சொந்த பணத்திலிருந்து சிறிது தொகை அளித்தும் உதவி செய்திருக்கிறார்.
 
காவல்துறை பெண் அதிகாரியின் இந்த செயல், ஆந்திராவில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் காவல் துறையின் டிஜிபி கெளதம் சவாங் உட்பட பல்வேறு அதிகாரிகளும், பொது மக்களும் பெண் உதவி ஆய்வாளர் சிரிஷாவை பாராட்டி இருக்கிறார்கள்.
 
இதுதொடர்பாக, ஆந்திரப் பிரதேச காவல்துறை தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், சிரிஷா முதியவரின் சடலத்தைச் சுமந்து சென்ற காணொளியைப் பதிவு செய்து வாழ்த்து தெரிவித்துள்ளது சமூக ஊடகங்களில் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்