ஆபத்தை அறியாமல் கைகளால் இறால் பிடிக்கும் பெண்கள்

Webdunia
திங்கள், 23 ஏப்ரல் 2018 (12:53 IST)
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை கிராம பெண்கள் ஆபத்தை அறியாமல் கழுத்து அளவு தண்ணீரில் இறங்கி உணவுக்காக கைகளால் இறால் மீன்களை பிடிக்கின்ற நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர்.

 
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ளது காரங்காடு மற்றும் சேந்தனேந்தல் கடற்கரை கிராமம். அங்குதான் இவர்கள் கைகளால் இறால்களை பிடிக்கின்றனர். இக்கிராமத்தில் மிக பெரிய சதுப்பு நில காடு அமைந்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவது சதுப்பு நில காடு என்ற பெறுமையும் இந்த கிராமத்திற்கு உண்டு. இந்த சதுப்பு நில பகுதிகளில் கடல் பசு, கடல் ஆமை, ஆக்டோபஸ் என அழைக்கப்படும் கணவாய் மீன் உள்ளிட்ட பல்லாயிர கணக்கான சிறு சிறு கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன.
 
மேலும், சதுப்பு நில காடுகளில் உள்ள மரங்களில் தங்குவதற்காகவும், இறை தேடியும்
வருகின்ற வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன.

 
"ஒருவகையான பொழுதுபோக்கு"
 
இந்தப் பகுதியில் உள்ள மிகப்பெரிய ஆறான கோட்டைக்கரை ஆற்றில் வரும் உபரி நீர் கிழக்கு கடற்கரை சாலையை கடந்து கடலில் கலக்கிறது. இப்பகுதியில் கடல்நீரும், ஆற்று நீரும் சங்கமிக்கும் பகுதியில் கையால் இறால் மீன் பிடிக்கும் பழக்கம் இன்றளவும் நடைமுறையில் இருந்து வருகிறது.
 
இது ஒருவகையான பொழுதுபோக்கு என கூறும் அப்பகுதி கிரமவாசிகள், ஒரு காலத்தில் இப்படி பிடிக்கப்படும் இறால் மீன்கள் வீட்டிற்கு தேவையானது போக விற்பனை செய்யப்படுவதும் வழக்கமாக இருந்து வந்தது என்கின்றனர். இந்த வகை மீன்பிடிப்பில் ஈடுபடும் பெண்கள் கையால் இறால் பிடிக்கும் சமயங்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் விலை உயர்ந்த சுமார் ஒரு கிலோவுக்கு மேல் இருக்கும் சம்பா நண்டுகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகின்றனர்.

 
பெரும்பாலும் கடல் உள்வாங்கும் நேரத்தில்தான் அதிக அளவில் இப்படி இறால் பிடிக்க செல்வார்களாம். பழைய முறைப்படி பரி என்று அழைக்க கூடிய பனை ஓலையால் பின்னப்பட்ட கூடை ஒன்றை தலையில் கட்டி பின்பக்கமாக தொங்கவிட்டு கொள்கின்றனர். சுமார் 5 நபர்களுக்கு மேல் அதிகபட்சமாக 10 நபர்கள் வரிசையாக தண்ணீரில் இறங்கி உட்கார்ந்து , கழுத்தளவு ஆற்று தண்ணீரில் மிதந்து கொண்டு இரண்டு கைகளால் தண்ணீருக்குள் தடவியபடி தண்ணீருக்கு அடியில் இறால் மீனை தேடி பிடிப்பார்கள்.
 
அப்போது, அவர்களின் கையில் தட்டுப்படும் இறாலை பிடித்து கூடையில் போட்டுக்கொள்வர்கள். இந்த முறையில் பெரும்பாலும் கூனி என அழைக்கப்படும் வெள்ளை நிறத்திலான சிறிய வகை இறால்களே அதிகம் கிடைக்கும். ஆனால் அதிர்ஷடம் இருந்தால் சில நேரங்களில் கூடுதல் விலை போகும் கருப்பு நிற இறால் வகைகளும் கிடைப்பது உண்டு.
 
பொதுவாக ஒரு நபர் அதிகபட்சமாக 2 முதல் 3 கிலோ வரை பிடித்து விடுவதாகவும், இப்படி பிடிக்கப்படும் இறால் அதிக சுவையுடன் இருக்கும் எனவும் அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால்; சில நேரங்களில் கெண்டை, கார்த்திகை முரள், மணலை, சிரையா, போன்ற சிறிய வகை மீன்களும் இவர்களிடம் பிடிபடுவதுண்டு.
 
பல நேரங்களில் கையால் தடவி இறால் பிடிக்கும்போது நண்டுகள் கடித்து விடுவதும், கண்ணுக்கு தெரியாமல் கடலுக்குள் கத்தியை விட கூர்மை தன்மை கொண்ட ஆக்கு என அழைக்கப்படும் ஒரு வகை கடல் வாழ் உயிரினம் வெட்டி பெரும் காயங்கள் ஏற்படுவதும் உண்டு என்கின்றனர் இந்த கிராம மீனவ பெண்கள்.
 
கழுத்து அளவு தண்ணீரில் நீந்தி கொண்டு இறால் மீன் பிடித்து கொண்டிருந்த பார்வதி பிபிசி தமிழிடம் பேசியபோது, “நாங்க மணகுடியில் இருந்து வருகிறோம். ஒரு நாளைக்கு அரை கிலோவும் பிடிப்போம், ஒரு கிலோவும் பிடிப்போம். ஏன் ரெண்டு கிலோ கூட பிடிப்போம். கையில தட்டுறதுக்கு தக்கன இருக்குறத கையில தடவி தான் பிடிப்போம். இது வெஞ்சனத்துக்கு ஆகும் கறிக்கு ஆகும். எங்க நேரத்துக்கு நெறைய கெடச்சா பொரிச்சு சாப்புடுவோம் இல்லைன்னா சும்மா ஒரு கத்திரிகாய் போட்டு சமைத்து சாப்புடுவோம். வீட்டுக்காகதான் வேற விலைக்கு கொடுக்க மாட்டோம். " என்றார்.
 
மேலும் தாங்கள் தினமும் வருவதில்லை அமாவாசை சமயத்தில் மட்டும் ஐந்து அல்லது ஆறு பேராக வந்து மீன் பிடிப்பதாக கூறும் பார்வதி, கடையில் வாங்கும் இறாலை காட்டிலும் கைகளில் பிடிக்கும் இறால்களுக்கு சுவை அதிகம் என்பதால் இதனை தங்களது விருப்பதிற்காக செய்வதாகவும் கூறுகிறார். இறால் பிடிப்பதை தவிர்த்து, ஆடு மேய்பது, நூறு நாள் வேலைக்கு செல்வது ஆகிய பணிகளில் ஈடுபடுவதாக கூறுகிறார் இறால் பிடித்துகொண்டிருந்த சகாயராணி.
 
இந்த வகை மீன் பிடிப்பில் ஈடுபடும் பெண்கள்; கடலோர கிராமங்களில் வசிக்க கூடியவர்களே. இவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவர்கள் மற்றும் விவசாயிகள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்