"ஒவ்வொரு மசூதியிலும் ஏன் சிவலிங்கத்தை தேட வேண்டும்?" - ஞானவாபி விவகாரம் குறித்து மோகன் பகவத்

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (12:35 IST)
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், ஞானவாபி விவகாரம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ஒவ்வொரு மசூதியிலும் ஏன் சிவலிங்கத்தைத் தேடுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் நாம் தினமும் ஒரு புதிய பிரச்னையை எழுப்பக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

நாக்பூரில் நடந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாமின் நிறைவு விழாவின் போது, அவர் ஞானவாபி விவகாரம் குறித்து பேசியுள்ளார்.

"ஞானவாபி விவகாரம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. நாம் வரலாற்றை மாற்ற முடியாது. இது இன்றைய இந்துக்களோ அல்லது முஸ்லிம்களோ உருவாக்கவில்லை. அது அன்றைய காலத்தில் நடந்தது," என்றார்.

"இஸ்லாம், வெளியில் இருந்து தாக்குதல் நடத்தியவர்கள் மூலம் இங்கு வந்தது. அந்தத் தாக்குதல்களில், இந்தியாவுக்கு விடுதலை வேண்டும் என்று விரும்பியவர்களை கலங்க வைக்கவே கோயில்கள் இடிக்கப்பட்டன. இந்துக்கள் சிறப்பு வழிபாடு நடத்தும் தலங்கள் குறித்து சர்ச்சைகள் எழுப்பப்படுகின்றன.

ஆனால் இந்து மக்கள், முஸ்லிம்களுக்கு எதிராக சிந்திக்கவில்லை. இன்றைய முஸ்லிம்களின் மூதாதையர்களும் அக்காலத்தில் இந்துக்களாக இருந்தனர்.

நீண்ட காலமாக இந்துக்களின் சுதந்திரத்தை பறிக்க அவர்களின் பொறுமையை அடக்குவதற்காக இது செய்யப்பட்டது. ஆகவே, இந்துக்கள் இத்தகைய தலங்களை மீட்டெடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்," என்றார்.

மேலும் அவர், " இதற்கு பரஸ்பர தீர்வு காணுங்கள். மக்கள் நீதிமன்றத்தை நாடுகின்றனர். அப்படி செய்தால், நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்குகிறதோ, அதை ஏற்க வேண்டும். நமது நீதித்துறை புனிதமானது என்று கருத்தில் கொண்டு, அதன் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும். அதன் முடிவுகளை நாம் கேள்விக்குட்படுத்தக்கூடாது," என்றார்.

"தினமும் புதிய பிரச்னையை எழுப்பக்கூடாது"

தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பேசிய அவர், தினமும் புதிய பிரச்னையை எழுப்பக் கூடாது என்று கூறினார்.

அவர், "நமக்கு சில தலங்கள் மீது தனித்துவமான மதிப்பு உண்டு. ஆனால், தினமும் ஒரு புதிய பிரச்னையை எழுப்பக்கூடாது. நாம் ஏன் இதுகுறித்து சண்டையிட வேண்டும்?

ஞானவாபி பற்றி நமக்கு சில நம்பிக்கைகள் உள்ளன. அது தொடர்பாக நாம் ஒன்றை செய்கிறோம். அது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும்?

அதுவும் ஒரு விதமான வழிபாடுதான். அது வெளியில் இருந்து வந்துள்ளது. ஆனால், வெளியில் இருந்து வந்தவர்களுக்கும், அதை பின்பற்றும் முஸ்லிம்களுக்கும் எந்த உறவும் இல்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அவர்களின் வழியில் வழிபாடு செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்பினால் பரவாயில்லை. எந்த விதமான வழிபாட்டிற்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அனைத்தும் புனிதமானது என்றே நாங்கள் கருதுகிறோம்.

இந்த வழிபாட்டு முறையை அவர்கள் பின்பற்றுகின்றனர். ஆனால், அவர்களும் நம் ரிஷிகள், முனிவர்கள், சத்திரியர்களின் வழி வந்தவர்களே.

நாம் அனைவரும் ஒரே மூதாதையர்களின் வழித்தோன்றல்களே. ஒரே பாரம்பரியத்தை பின்பற்றுகிறோம்." என்றார்.

மேலும், கோயில்கள் தொடர்பாக அவர்களின் அமைப்பு (ஆர்எஸ்எஸ்) இனி எந்த போராட்டத்தையும் முன் எடுக்காது என்றும் பகவத் கூறியுள்ளார்.

"அப்போது ராம ஜென்மபூமி போராட்டம் ஒன்று நடந்தது. எங்களின் இயல்புக்கு மாறாக, சில வரலாற்று காரணங்களுக்காக அதை செய்தோம். இப்போது நாம் எந்த போராட்டமும் செய்ய வேண்டியதில்லை. இனி வரும் காலங்களில் கோயில் குறித்த விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு எந்த போராட்டத்தையும் தொடங்காது," என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்