அமெரிக்கா - இஸ்ரேல் இணைபிரியா நட்பின் ரகசியம் என்ன? அமெரிக்காவுக்கு இஸ்ரேல் ஏன் தேவை?
செவ்வாய், 7 நவம்பர் 2023 (20:59 IST)
அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தாக்குதல் நடத்திய சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல் அவிவ் நகரை அடைந்து இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.
ஹமாஸை 'பிசாசு' என்று கூறிய அவர், எந்த சூழ்நிலையிலும் அமெரிக்கா இஸ்ரேலுடன் இருப்பதாகவும் கூறினார். இஸ்ரலுக்கு எல்லா உதவியும் கிடைக்கும் என்பதையும் உறுதிப்படுத்தினார்.
இதற்குப் பிறகு, நவம்பர் மாதத் தொடக்கத்தில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை இஸ்ரேலுக்கு 14.5 பில்லியன் டாலர் இராணுவ உதவிக்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது.
காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பான இஸ்ரேலின் நிலைப்பாட்டை அமெரிக்காவும் ஆதரிப்பதாகத் தெரிகிறது.
போர் நிறுத்தம் காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு மட்டுமே பயனளிக்கும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் இந்த ஆதரவு ஒன்றும் புதிதல்ல.
அமெரிக்கா கடந்த காலத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து இன்றும் கூட அதனுடன் உறுதியாக நிற்கிறது. இதன் பின்னணி என்ன?
இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சிறந்த உறவுகளின் வரலாறு என்ன என்பது மட்டுமின்றி அரசியல், இராஜதந்திர மற்றும் பொருளாதார சமன்பாடுகள் என்ன? எதன் காரணமாக அமெரிக்கா எப்போதும் இஸ்ரேலின் ஒவ்வொரு அசைவையும் சரியானது என்று அறிவிக்கிறது. இதன் பின்னணியை விரிவாகத் தெரிந்துகொள்வோம்.
இஸ்ரேலை அங்கீகரித்த உலகின் முதல் அரசியல்வாதி அமெரிக்க அதிபர் ஹென்றி ட்ரூமன் ஆவார்.
பால்ஃபோர் பிரகடனத்தை நினைவுகூரும் வகையில் இஸ்ரேலில் இந்த அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டது.
வரலாற்று ரீதியான பாலத்தீனத்திற்குள் யூதர்களின் தனித் தாயகம் இருப்பதற்கு முன்பே அமெரிக்கா, இஸ்ரேல் என்ற இந்த யோசனையை ஆதரித்து வருகிறது.
நவம்பர் 2, 1917 இல், பால்ஃபோர் பிரகடனம் பாலத்தீனத்தில் ஒரு தனி யூதர்களின் தாயகத்தை அறிவித்தது. அப்போது பிரிட்டனும் உடனடியாக அதை ஆதரித்தது.
சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மார்ச் 3, 1919 அன்று, அப்போதைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் நேச நாடுகளின் சார்பாக யூதர்களின் தாயகத்திற்கான கோரிக்கையை ஆதரித்தார்.
பின்னர் 1922 மற்றும் 1944 இல், அமெரிக்க பாராளுமன்றம் பால்ஃபோர் பிரகடனத்திற்கு ஆதரவாக தீர்மானங்களை நிறைவேற்றியது.
1948 இல் இஸ்ரேல் உருவானவுடன், அதை அங்கீகரித்த முதல் நாடாக அமெரிக்கா ஆனது.
இஸ்ரேல் என்ற தனிநாடு குறித்து அறிவிக்கப்பட்ட 11 நிமிடங்களில், அது அமெரிக்க அங்கீகாரத்தைப் பெற்றது.
அப்போதைய அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன் இஸ்ரேலை அங்கீகரித்த முதல் உலகத் தலைவர் ஆவார்.
சூயஸ் கால்வாய் தொடர்பான இஸ்ரேல் போரின் போது அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கசப்புணர்வு தோன்றியது.
இஸ்ரேலுக்கு ஏன் இவ்வளவு சீக்கிரம் அமெரிக்க அங்கீகாரம் கிடைத்தது?
உண்மையில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே பனிப்போர் உருவாகத் தொடங்கிய காலகட்டம் அது.
அந்த நேரத்தில், பிராந்தியத்தில் அரபு நாடு, அதன் எண்ணெய் இருப்பு மற்றும் கடல் வழிகள் (சூயஸ் கால்வாய் பாதை ஒரு வர்த்தக பாதையாகும், இதன் மூலம் சர்வதேச வர்த்தகம் பெரிய அளவில் நடத்தப்பட்டது), இரண்டு உலக வல்லரசுகளின் வலிமையை சோதிக்கும் களமாக மாறின.
ஐரோப்பிய சக்திகள் வலுவிழந்து, அரபு உலகில் அதிகாரப் போராட்டத்தில் அமெரிக்கா ஒரு முக்கிய இடைத்தரகராக உருவெடுத்தது.
எண்ணெய் வளங்கள் தொடர்பாக அரபு நாடுகளில் அமெரிக்காவின் ஆர்வம் அதிகரித்தது. எனவே, அரபு நாடுகளைக் கட்டுப்படுத்த இஸ்ரேல் தேவைப்பட்டது.
இஸ்ரேலை அங்கீகரிப்பதில் அமெரிக்கா தாமதிக்காததற்கும், அதை ராணுவ சக்தியாக உயர்த்துவதற்கும் இதுவே காரணம்.
இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் அமெரிக்க அதிபர் டி.ஐசனோவர். சூயஸ் கால்வாய் குறித்து இஸ்ரேலின் கொள்கை தொடர்பாக ஐசனோவர் மிகவும் கோபமாக இருந்தார்.
ஆனால், இஸ்ரேல் என்ற தனிநாடு உருவானதற்கு முன்பே அமெரிக்கா தனது ஆதரவை வழங்கியது.
இருப்பினும், கடந்த காலங்களில் இவர்களின் உறவில் சில சமயங்களில் கசப்பும் ஏற்பட்டுள்ளது. சூயஸ் கால்வாய் தொடர்பாக பிரான்ஸ் மற்றும் பிரிட்டனுடன் இஸ்ரேல் போரை தொடங்கியபோது, அமெரிக்காவின் ஐசனோவர் நிர்வாகம் அதன் மீது கடும் கோபம் கொண்டது.
இந்தப் போரின் போது கைப்பற்றப்பட்ட பகுதிகளை காலி செய்யாவிட்டால், இஸ்ரேலுக்கான உதவிகள் நிறுத்தப்படும் என அமெரிக்க அதிபர் இஸ்ரேலை மிரட்டினார்.
இஸ்ரேல் பின்வாங்கவில்லை என்றால் ஏவுகணைகளால் தாக்கப்படும் என்றும் சோவியத் யூனியன் மிரட்டியது. இந்த அழுத்தங்கள் காரணமாக, இஸ்ரேல் இந்தப் பகுதிகளிலிருந்து பின்வாங்க வேண்டியிருந்தது.
இதேபோல், 1960 களில், அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் இருந்தது. அந்த நேரத்தில், அமெரிக்காவின் கென்னடி நிர்வாகம் இஸ்ரேலின் இரகசிய அணுசக்தி திட்டங்களை உருவாக்கி வருவதாக கவலைப்பட்டது.
இருப்பினும், 1967 ஆம் ஆண்டில், இஸ்ரேல் ஜோர்டான், சிரியா மற்றும் எகிப்தை ஆறு நாள் போரில் தோற்கடித்து அரபு உலகின் பெரும் பகுதியைக் கைப்பற்றியபோது, இந்த யூத நாட்டைப் பற்றிய அமெரிக்க பார்வை முற்றிலும் மாறியது.
இது மூன்றாவது அரபு - இஸ்ரேல் போர் என்றும் அழைக்கப்படுகிறது.
உண்மையில், அந்த நேரத்தில் அமெரிக்கா வியட்நாம் போரில் சிக்கியிருந்தது என்பதுடன் இஸ்ரேல் எந்த பெரிய உதவியும் இல்லாமல் அரபு நாடுகளை தோற்கடித்தது.
வெறும் ஆறு நாட்களில் இந்தப் போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. இன்னொரு முக்கியமான விஷயம், அப்போது இஸ்ரேலால் தோற்கடிக்கப்பட்ட எகிப்து, சிரியா ஆகிய இரு நாடுகளும் சோவியத் யூனியனின் நண்பர்களாக இருந்தன.
இஸ்ரேலின் இந்த வெற்றிக்குப் பிறகு, அரபு நாடுகளில் சோவியத் யூனியனுக்கு எதிரான நிரந்தர பங்காளியாக இஸ்ரேலை அமெரிக்கா பார்க்கத் தொடங்கியது.
1973 போரில் எகிப்து மற்றும் சிரியாவையும் இஸ்ரேல் தோற்கடித்தது.
இஸ்ரேலின் இரான் கொள்கை தொடர்பாக நெதன்யாகு மற்றும் பராக் ஒபாமா இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன.
பராக் ஒபாமாவுக்கும் நெதன்யாகுவுக்கும் என்ன வித்தியாசம்?
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும் தற்போதைய இஸ்ரேல் பிரதமருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான உறவு சிறிது காலம் பதற்றமாக காணப்பட்டது.
இரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நெதன்யாகு குடியரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குச் சென்று அமெரிக்காவின் இரான் கொள்கை தொடர்பாக பராக் ஒபாமாவை கடுமையாக விமர்சித்தார்.
இது சர்வதேச அளவில் பெரிய செய்தியாக கருதப்பட்டது. ஒபாமாவுக்கும் நெதன்யாகுவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த இடத்திலிருந்து இஸ்ரேல் தொடர்பான தனது பாரம்பரிய நிலைப்பாட்டில் அமெரிக்கா சிறிது மாற்றத்தை கொண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இது நடக்கவில்லை. ஒபாமா தனது எட்டு ஆண்டு கால ஆட்சியின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானத்தை தவிர மற்ற அனைத்து தீர்மானங்களையும் வீட்டோ செய்திருந்தார்.
அவரது பதவிக்காலத்தின் கடைசி நாட்களில், இஸ்ரேலுக்கு $38 பில்லியன் நிதி உதவியும் அங்கீகரிக்கப்பட்டது.
இஸ்ரேலில் நீதித்துறை அமைப்பை மாற்றும் நெதன்யாகுவின் முயற்சியை பைடன் சமீபத்தில் விமர்சித்திருந்தார், ஆனால் அக்டோபர் 7 அன்று ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு, அவர் இஸ்ரேலிய பிரதமருக்கு முழுமையாக ஆதரவளிப்பதைக் காண முடிந்தது.
தற்போதைய நிலையில் இஸ்ரேலின் அசாதாரண நட்பு நாடாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.
தற்போது, அமெரிக்கா இஸ்ரேலின் அசாதாரண நட்பு நாடாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற நிதி, இராணுவ மற்றும் அரசியல் உதவிகளை வழங்குகிறது.
இஸ்ரேல் அறிவிக்கப்படாத அணுசக்தி நாடாகும். ஆனால் அமெரிக்க ஆதரவு மற்றும் பாதுகாப்பு காரணமாக எந்த விசாரணையையும் இஸ்ரேல் எதிர்கொள்ளவில்லை.
அமெரிக்கா இஸ்ரேலுக்கு அதிகபட்ச பொருளாதார உதவிகளை வழங்குகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 158 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க உதவியை இஸ்ரேல் பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 3.8 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க உதவியைப் பெறுகிறது. இது இஸ்ரேலின் மொத்த பாதுகாப்பு பட்ஜெட்டில் 16 சதவீதம் ஆகும்.
இஸ்ரேல் அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகவும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இரு நாடுகளுக்கும் இடையே 50 பில்லியன் டாலர் வர்த்தகம் நடக்கிறது.
அமெரிக்காவின் உதவியுடன் மிகப்பெரிய பாதுகாப்புத் துறையை இஸ்ரேல் உருவாக்கியுள்ளது. அதன் பாதுகாப்பு உற்பத்தித் தளத்தின் காரணமாக, இது இன்று உலகின் பத்தாவது பெரிய ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியுள்ளது.
1972 முதல், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட 50 தீர்மானங்களை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இஸ்ரேலுக்கு எதிரான 50 தீர்மானங்களை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
அமெரிக்காவின் பார்வையில் அரபு உலகின் கொந்தளிப்பான அரசியலில் இஸ்ரேலின் வியூக ரீதியிலான முக்கியத்துவம் இதற்கு ஒரு முக்கிய காரணம்.
பனிப்போரின் போது, அரபு நாடுகளில் சோவியத் ஒன்றியத்தின் செல்வாக்கிற்கு எதிராக அமெரிக்கா இஸ்ரேலை ஒரு முக்கியமான அரணாகப் பயன்படுத்தியது.
அமெரிக்க மக்களின் கருத்து, அதன் தேர்தல் அரசியல் மற்றும் சக்தி வாய்ந்த இஸ்ரேல் லாபி ஆகியவையும் அமெரிக்காவின் இஸ்ரேல் சார்பு கொள்கைக்கு காரணமாகும்.
இவை அனைத்தும் சேர்ந்து அமெரிக்காவின் இஸ்ரேல் கொள்கைக்கு வழிகாட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
அமெரிக்க நாடாளுமன்றத்தில், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளின் எம்.பி.க்களில் பெரும்பாலானோர் தொடக்கம் முதலே இஸ்ரேலின் ஆதரவாளர்களாக உள்ளனர். அமெரிக்க யூத மற்றும் சுவிசேஷ கிறிஸ்தவ லாபிகள் இரண்டும் அமெரிக்க அரசியலில் இஸ்ரேலைப் பற்றி மிகவும் தீவிரமாக அக்கறை செலுத்திவருகின்றன.
குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளிலும் இஸ்ரேலுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது என்பதுடன் இருதரப்பினரும் இஸ்ரேலின் ஆதரவாளர்களாகவே உள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள பல லாபிகள் இஸ்ரேலுக்கு ஆதரவான கொள்கைகளை உருவாக்க உதவுகின்றன.
அத்தகைய ஒரு சக்திவாய்ந்த லாபி அமெரிக்க இஸ்ரேல் பொது விவகாரக் குழு (அல்லது AIPAC) ஆகும். இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அதிபர்கள், செனட்டர்கள் மற்றும் பிரதமர்கள் அதன் வருடாந்திர கூட்டங்களில் விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் இஸ்ரேல் சார்பு அமைப்புகள் நிதி உதவி வழங்குகின்றன.
2020 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் சார்பு அமைப்புகள் 30 பில்லியன் டாலர் நிதி திரட்டின. அதில் 63 சதவிகிதம் ஜனநாயகக் கட்சியினருக்கும் மீதமுள்ளவை குடியரசுக் கட்சியின் சட்டமியற்றுபவர்களுக்கும் வழங்கப்பட்டது.
பாலத்தீனர்களுக்கு ஆதரவாகவும் அமெரிக்க அரசியல்வாதிகள் பலர் குரல் கொடுக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்க ஜனநாயகக் கட்சியில் பெர்னி சாண்டர்ஸ் மற்றும் எலிசபெத் வாரன் போன்ற செனட்டர்கள் பாலத்தீனத்தின் ஆதரவாளர்களாக உருவெடுத்துள்ளனர்.
இருவரும் 2020 ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களுக்கான போட்டியில் ஈடுபட்டிருந்தனர். பெர்னி மற்றும் வாரன் போன்ற செனட்டர்கள் இஸ்ரேலுக்கு வழங்கப்படும் பொருளாதார உதவிகளுடன் பாலத்தீனர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது போன்ற நிபந்தனைகள் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.
அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்டெஸ், இல்ஹான் ஓமர், அயன்னா பிரெஸ்லி மற்றும் ரஷிதா தலேப் போன்றவர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் பாலத்தீனத்துக்காக குரல் கொடுத்தவர்கள்.
சமீபத்திய ஆண்டுகளில், பாலத்தீன இயக்கத்திற்கான ஆதரவு அமெரிக்க மக்களிடையே அதிகரித்துள்ளது. Gallup கணக்கெடுப்பின்படி, இந்த ஆண்டு பிப்ரவரியில் அதில் பங்கேற்ற 25 சதவீத மக்கள் பாலத்தீன இயக்கத்திற்கு அனுதாபம் தெரிவித்தனர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இது 19 சதவீதமாக இருந்தது.
ஆனால் அமெரிக்காவின் பொதுக் கருத்து இஸ்ரேலுக்கு ஆதரவாகவே உள்ளது. கணக்கெடுக்கப்பட்ட அமெரிக்கர்களில் 58 சதவீதம் பேர் இஸ்ரேலின் நலன்களுக்கு ஆதரவளிக்கின்றனர். அதே நேரத்தில், 75 சதவீத அமெரிக்கர்கள் இஸ்ரேலுக்கு நேர்மறையான மதிப்பீட்டை வழங்கினர்.