தான் முன்பு கூறியதை போன்றே, எதிர்வரும் 13ம் தேதி பதவி விலக தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரபூர்வமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் இன்று காலை தெரிவித்தது.
இந்த நிலையில், பிரதமரும் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
உரிய தீர்வு கிடைக்கும் வரை, தாங்கள் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேற போவதில்லை என போராட்டக்காரர்கள் இன்று அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், நேற்றிரவு ஜனாதிபதி மாளிகையை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
பெரும் எண்ணிக்கையிலான ராணுவத்தினர், விசேட அதிரடிபடை உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர், ஜனாதிபதி மாளிகையை அண்மித்து, கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
எனினும், காலி முகத்திடல் போராட்டக்களத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான ராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
எவ்வாறாயினும், தொடர்ந்தும் ஜனாதிபதி மாளிகையை பார்வையிடுவதற்காக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தொடர்ந்தும் வருகைத் தந்த வண்ணம் உள்ளனர்.
ஜனாதிபதி மாளிகை மாத்திரமன்றி, ஜனாதிபதி செயலகம், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகை ஆகியவற்றை பார்வையிடுவதற்கும் தொடர்ந்து மக்கள் வருகைத் தருகின்றனர்.
ஜனாதிபதி மாளிகையில் கடமைகளில் இருந்த ஊழியர்கள், ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறியுள்ளதுடன், ஜனாதிபதி மாளிகையில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் வெளியில் பாதுகாப்பில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, காலி முகத்திடலில் நடத்தப்பட்டு வரும் 'கோட்டா கோ கம' போராட்டம் 94வது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த காலங்களில் போராட்டத்திற்கு குறைந்த எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டிருந்த நிலையில், கடந்த 9ம் தேதிக்கு பின்னரான காலப் பகுதியில் போராட்டம் மீண்டும் வலுப் பெற்றுள்ளது.
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் - ஒருவர் பணி நீக்கம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை பதிவு செய்வதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் 7 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீஸ் விசேட அதிரடி படையின் சிரேஸ்ட போலீஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
உடன் அமலுக்கு வரும் வகையில் இந்த பணி நீக்கம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் அந்த தாக்குதலை தடுத்து நிறுத்தாமை ஆகிய காரணங்களின் அடிப்படையில், போலீஸ் மாஅதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய மற்றும் பொது சேவை ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் இவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமரின் வீடு தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை பதிவு செய்வதற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீது, போலீஸ் விசேட அதிரடி படையினர் கடந்த 9ம் தேதி தாக்குதல் நடத்தியிருந்தனர்.