புலிகளின் முக்கியத் தலைவர்களில் ஒருவருக்கு எதிராக பிடியாணை

வியாழன், 3 மார்ச் 2016 (20:18 IST)
விடுதலை புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராகக் கூறப்படும் ஆண்டனி எமில் காந்தனை கைது செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மீண்டும் பிடியாணை பிறப்பித்துள்ளது.


 

 
இந்த சந்தேக நபர் நீதிமன்றத்திற்கு வந்து ஆஜராக அவகாசம் தருமாறு அவரது வழக்கறிஞர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப கடந்த ஜனவரி மாதம் 23 தேதி இன்டர்போல் மூலமாக விடுக்கப்பட்டிருந்த பிடியாணை நீதிமன்றத்தின் மூலம் நீக்கப்பட்டது.
 
ஆனால், சந்தேக நபருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிமன்றத்தினால் வெளிநாட்டு பயன்களை தடை செய்யும் உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த உத்தரவை நீக்குமாறு அவரது வழக்கறிஞர் கோரிக்கைவிடுத்தார்.
 
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வழக்கறிஞர் சந்தேக நபருக்கு நிதிமன்றத்தில் ஆஜராக மேலும் கால அவகாசம் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
 
ஆனால், அந்த வேண்டுகோளுக்கு எதிர்ப்பு தெரிவித்த அரச தரப்பு வழக்கறிஞர் சாதாரண கால அவகாசம் வழங்கிய போதிலும் எமில் காந்தன் நீதிமன்றத்தில் ஆஜராக தவறியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
 
எனவே, மேலும் கால அவகாசம் வழங்குவதை தாங்கள் எதிர்ப்பதாக கூறிய அரச தரப்பு வழக்கறிஞர் சந்தேக நபரை கைது செய்யும் பிடியாணையை மீண்டும் பிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
 
இதையடுத்து எமில் காந்தனுக்குப் பிடியாணை பிறப்பித்த நீதிபதி ஓரு நபருக்கு மாத்திரம் விசேஷ சலுகைகளை பெற்றுக்கொடுக்க நீதி மன்றத்தால் முடியாதென்று கூறினார்.
 
ஆனால், இந்த உத்தரவின் முலம் சந்தேக நபருக்கு நீதிமன்றம் வந்து ஆஜராவதற்கு எந்த விதமான தடைகளும் இருக்காது என்றும் நீதிபதி மேலும் தெரிவித்தார்.
 
1998ஆம் ஆண்டு களுத்துறை சிறைச்சாலைக்குள் வைத்து முன்னாள் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம்சாட்டி இந்த சந்தேக நபர் உட்பட நான்கு நபர்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்