எகிப்தில் வன்மவாத தாக்குதல்கள் அதிபர் நாடு திரும்புகிறார்

சனி, 31 ஜனவரி 2015 (06:43 IST)
எகிப்தின் வடக்கிலுள்ள சைனாய் பிராந்தியத்தில் சில வன்மவாதத் தாக்குதல்கள் வரிசையாக நடந்துள்ளதை அடுத்து, ஆப்பிரிக்க ஒன்றிய மாநாட்டுக்காக எத்தியோப்பியா சென்றிருந்த எகிப்து அதிபர் அப்தல் ஃபதா அல் சிஸி, தனது பயண காலத்தை குறைத்துக்கொண்டு நாடு திரும்புகிறார்.

வியாழனன்று, சைனாய்யில் உள்ள பல ஊர்களில், போலிஸ் மற்றும் இராணுவத் தளங்களையும், சோதனைச் சாவடிகளையும் இலக்குவைத்து ஒருங்கிணைந்து செய்யப்பட்டவையாகத் தெரியும் தாக்குதல்கள் அடுத்தடுத்து நடந்திருந்தன.
 
இத்தாக்குதல்களில் பாதுகாப்பு படையினர் பெரும்பான்மையோராக 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
 
நடந்தவற்றில் மிக மோசமான வன்முறை பிராந்தியத் தலைநகரான எல் ஆரிஷ் என்ற ஊரில்தான் அரங்கேறியிருந்தது.
 
அந்நகரில் உள்ள போலிஸ் அலுவலகங்கள், ஒரு ராணுவ தளம் மற்றும் ஒரு ஹோட்டலில் ராக்கெட்டுகள் வீசப்பட்டன என்றும், பின்னர் ராணுவ தளத்தின் பின்புற கேட் அருகே கார் குண்டு ஒன்று வெடித்ததாகவும், மேலும் பல ராணுவ சாவடிகள் இலக்கு வைக்கப்பட்டன என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.
 
எகிப்து பத்திரிகையான, அல் அஹ்ரம் இதழின் உள்ளூர் அலுவலகம் இந்தத் தாக்குதலில் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டது என்று அந்தப் பத்திரிகை கூறியது.
இந்த பத்திரிகையின் அலுவலகம் தாக்குதலுக்குள்ளான ஹோட்டல் மற்றும் ராணுவ தளத்துக்கு எதிரே அமைந்திருந்தது.
 
'சைனாய் மாகாணம்' ( சைனாய் ப்ரோவின்ஸ்) என்று தனது பெயரை இப்போது மாற்றிக்கொண்டிருக்கும் அன்சார் பெயிட் அல் மக்டிஸ் தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறியிருக்கிறது.
 
தாக்குதல் சம்பவம் நடந்தபோது எதியோப்பியப் பயணத்தில் இருந்த எகிப்திய அதிபர், அபதல் பத்தா அல் சிஸி, தனது பயணத்தை அவசரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.
 
எகிப்தின் இஸ்லாமிய அதிபர் மொஹமது மோர்ஸி பதவியிலிருந்து 2013ல் அகற்றப்பட்டதிலிருந்தே, இஸ்லாமியக் கிளர்ச்சியாளர்கள் வன்முறையை அதிகரித்து வருகிறார்கள்.
 
மொஹமது மோர்ஸியின் "இஸ்லாமிய சகோதரத்துவம்" கட்சியை ஒடுக்கும் நடவடிக்கைகளை , தற்போதைய அதிபர் சிஸி, முன்பு ராணுவ தளபதியாக இருந்தபோது நடத்தினார்.
 
அன்சார் பெயிட் அல மக்திஸ் இயக்கம் இராக்-சிரியாவிலிருந்து இயங்கும் இஸ்லாமிய அரசு என்ற தீவிரவாத அமைப்புக்கு விசுவாசமான அமைப்பு.

வெப்துனியாவைப் படிக்கவும்