அமெரிக்க அதிபர் தேர்தல்: வெற்றியை தீர்மானிப்பது இந்த 6 மாகாணங்கள்தான்
வெள்ளி, 6 நவம்பர் 2020 (10:39 IST)
வெள்ளை மாளிகையில் அடுத்து யார் அடி எடுத்து வைக்கப்போகிறார்? உலகின் சக்தி வாய்ந்த நாட்டை ஆளப்போவது யார் என்பதை தெரிந்து கொள்ளும் நேரம் வெகு தூரத்தில் இல்லை.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள், இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை (எலக்டோரல் காலேஜ்) வாக்குகளில் 270 எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு குடியரசு கட்சியின் வேட்பாளரும் அதிபருமான டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சியின் வேட்பாளருமான ஜோ பைடனும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய நேரப்படி காலை 9 மணி அளவில் ஜோ பைடன் 253 தேர்தல் சபை வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். டிரம்ப் 214 தேர்தல் சபை வாக்குகள் பெற்றுள்ளார்.
இதை வைத்து யார் வெற்றி பெறப் போகிறார் என்ற கணிப்பு இருந்தாலும், இதை வைத்து மட்டுமே நாம் முடிவை எடுத்துவிட முடியாது.
வெற்றியைத் தீர்மானிக்கும் சில முக்கிய மாகாணங்களில் இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
பென்சில்வேனியா, அரிசோனா, ஜோர்ஜா, விஸ்கான்சின், நெவாடா, மிஷிகன் ஆகிய இந்த 6 போர்க்கள மாகாணங்களில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை செலுத்தும்.
ஏன் இந்த 6 மாகாணங்கள் முக்கியம்? இந்த 6 மாகாணங்களில் என்ன நிலை என்பதை தற்போது பார்க்கலாம்.
அமெரிக்காவில் மொத்தமுள்ள 50 மாகாணங்களில், ஒரு சில மாகாணங்கள் எப்போதும் குடியரசு கட்சிக்கும், ஒரு சில மாகாணங்கள் எப்போதும் ஜனநாயக கட்சிக்கும்தான் ஆதரவளிப்பார்கள் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான்.
ஆனால், ஒரு சில மாகாணங்களில் இதனை கணிப்பது கடினம். ஒருமுறை ஜனநாயக கட்சி, ஒருமுறை குடியரசுக் கட்சி என ஆதரவு அவ்வப்போது மாறுபடும். இதனை முக்கிய போர்க்கள மாகாணங்கள் என்று அழைப்பார்கள்.
அதிபர் வேட்பாளர்கள் இந்த குறிப்பிட்ட மாகாணங்களில் மட்டும் அதிக அளவிலான பிரசாரத்தை மேற்கொள்வது வழக்கம்.
அந்த வகையில், இந்த தேர்தலில் பென்சில்வேனியா, அரிசோனா, ஜோர்ஜா, விஸ்கான்சின், நெவாடா மற்றும் மிஷிகன் ஆகிய இந்த 6 மாகாணங்களும் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதைதான் அமெரிக்க மக்களும், அரசியல்வாதிகளும் உற்று நோக்கி வருகிறார்கள்.
சரி. இந்த 6 மாகாணங்களில் என்ன நிலை என்பதை பார்க்கலாம்.
இவை அனைத்துமே இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி அளவில் இருந்த நிலவரங்கள்
1.ஜோர்ஜா
இங்கு மொத்தம் 16 தேர்தல் சபை வாக்குகள்.
ஜோர்ஜாவில் இரு வேட்பாளர்களுக்குமே கடுமையான போட்டி நிலவுகிறது.
வாக்கு எண்ணிக்கை கிட்டத்தட்ட முடியும் தருணத்தில் உள்ளது. விரைவில் முடிவுகளை எதிர்பார்க்கலாம்.
இந்த முக்கிய மாகாணத்தில் டிரம்ப் முன்னிலை வகித்தாலும், இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது.
இன்னும் சுமார் 19,000 மட்டுமே எண்ண மிச்சமிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
டிரம்ப் இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால், ஜோர்ஜா வெற்றி அவருக்கு உறுதி செய்யப்பட வேண்டும்.
2.பென்சில்வேனியா
இங்கு மொத்தம் 20 தேர்தல் சபை வாக்குகள்.
இங்கும் அதிபர் டிரம்பே முன்னிலை வகிக்கிறார். ஆனால் டிரம்ப் - பைடனுக்கு இடையேயான முன்னிலை விகிதம் குறைந்துள்ளது.
முன்னதாக சுமார் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் டிரம்ப் முன்னிலையில் இருந்தார். தற்போது அது வெறும் 65,000ஆக குறைந்துள்ளது.
பென்சில்வேனியாவில் இன்னும் லட்சக்கணக்கான வாக்குகள் எண்ணப்பட வேண்டியிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
டிரம்ப் வெற்றிக்கு ஜோர்ஜா போல, பென்சில்வேனியாவும் முக்கியமானது. இந்த இரு மாகாணங்களையும்தான் டிரம்ப் தரப்பு பெரிதாக நம்பியிருக்கிறது.
3.அரிசோனா
அரிசோனாவில் மொத்தம் 11 தேர்தல் சபை வாக்குகள்.
இங்கு 68,000 வாக்கு வித்தியாசத்தில் ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார். ஆனால், டிரம்பும் இங்கு அதிகளவிலான வாக்குகள் பெற்று, வாக்கு வித்தியாசத்தை குறைத்து வருகிறார்.
இங்கு இன்னும் சுமார் 4,70,000 வாக்குகள் எண்ணப்பட வேண்டி உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பைடன் வெள்ளை மாளிகைக்கு செல்ல அரிசோனா மாகாணத்தில் வெற்றி பெறுவது அவசியம். இங்கு வெற்றி பெற்றால் 270 என்ற இலக்கை அடைந்து, தனது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள அவரால் முடியும்.
4.நெவாடா
நெவாடாவில் மொத்தம் 6 தேர்தல் சபை வாக்குகள்.
இங்கு சுமார் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் பைடன் முன்னிலை வகிக்கிறார்.
இன்னும் 63,200 வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட வேண்டியுள்ளது.
இந்த வார இறுதியில் இந்த மாகாணத்தில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்ற முடிவுகள் தெரிய வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கு யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்ற நிலையில் கடுமையான போட்டி நிலவுகிறது.
5.விஸ்கான்சின்
விஸ்கான்சின் ஏற்கனவே பைடன் வசம் வந்துவிட்டது. அங்கு இருக்கும் மொத்த 10 தேர்தல் சபை வாக்குகளையும் பைடன் கைப்பற்றியுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை முடிந்து, பைடன் சுமார் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக முன்னணி அமெரிக்க ஊடகங்கள் கூறியுள்ளன.
எனினும், அங்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று டிரம்ப் தரப்பு கோரியுள்ளது.
6.மிஷிகன்
மிஷிகனும் பைடனுக்கு ஆதரவாகவே உள்ளது. டிரம்ப் இந்த மாகாணத்தில் 47.9 சதவீத வாக்குகள் பெற, பைடன் 50.5 சதவீத வாக்குகள் பெற்று மிஷிகனை தன்வசப்படுத்திக் கொண்டுள்ளார்.