அமேசான் பழங்குடிகள் அம்பு எய்ததில் பிரேசில் வல்லுநர் உயிரிழப்பு
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (14:18 IST)
பிரேசிலின் அமேசான் காடுகளில் தனித்து வாழும் பழங்குடியினர் குறித்து ஆய்வு செய்ய வல்லுநர் ஒருவர் அந்த மக்கள் வாழும் இடத்துக்குள் நுழைய முயன்றபோது அம்பு ஒன்று அவரது மார்பில் பாய்ந்ததில் இறந்துவிட்டார்.
வடமேற்கு பிரேசிலில் உள்ள ரொண்டேனியா மாநிலத்தின் தொலைதூரப் பகுதியில் 56 வயதான ரியலி பிரான்சிஸ்கடோ நேற்று முன்தினம் (புதன்கிழமை) காலமானார்.
பிரேசில் அரசின் தன்னாட்சி பெற்ற ஃபுனாய் என்ற நிறுவனத்தின் சார்பாக, ஒதுக்கப்பட்ட பழங்குடியின சமுதாயத்தை கண்காணிப்பதற்காக சென்றபோது இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
அமேசானில் வாழ்ந்து வரும் அந்த தொல்குடிகளின் இடத்திற்கு அருகே சென்றபோது பிரான்சிஸ்கடோ மற்றும் அவரது குழுவினர் மீது மறுமுனையில் இருந்து தாக்குதல் நடத்தப்பட தொடங்கியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரான்சிஸ்கடோ உடன் காவல்துறையினரும் சென்றிருந்த நிலையில், அவர் வாகனமொன்றின் பின்புறம் சென்று ஒளிந்துகொள்ள முயன்றபோது மார்பில் அம்பு பாய்ந்துவிட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
இதயத்தின் மேற்பகுதியில் பாய்ந்த அம்பை எடுப்பதற்கு பிரான்சிஸ்கடோ முயன்றதாக அப்போது உடனிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
"வலியில் அழுது துடித்த அவர், தனது மார்பிலிருந்து அம்புக்குறியை எடுத்துவிட்டு, சுமார் 50 மீட்டர் தூரம் ஓடிய நிலையில், பிறகு சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்" என்று அந்த அதிகாரி சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நடந்தேறிய பிராந்தியத்தில் புகைப்பட கலைஞராக பணியாற்றி வரும் கேப்ரியல் உச்சிடா, "கட்டாரியோ ரிவர்" என்று அறியப்படும் வெளியுலகத்துடன் தொடர்பில்லாத அமேசானின் தொல்குடிகளை பிரான்சிஸ்கடோ கண்காணிக்க முயற்சித்து வந்ததாக ஏஎஃப்பி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றபோது சம்பவ இடத்திலிருந்த உச்சிடா, இந்த பழங்குடியினர் பொதுவாக "அமைதியான குழுவினர்" என்றும் ஆனால், "இந்த சமயம் ஆயுதங்களுடன் காணப்பட்ட வெறும் ஐந்து ஆண்கள் கொண்ட குழு" இந்த தாக்குதலை நடத்தியதாக அவர் கூறுகிறார்.
அமேசான் உள்ளிட்ட உலகம் முழுவதும் வெளியுலகத்துடன் தொடர்பில்லாமல் வாழும் பழங்குடியினர், தங்களது நிலப்பகுதிக்குள் வெளியாட்கள் நுழையும்போது வன்முறையுடன் நடந்துகொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
1980களில் ரியலி பிரான்சிஸ்கடோவின் உதவியுடன் தொடங்கப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று, வெளியுலகத்தை சேர்ந்த நண்பர் அல்லது எதிரியை தொல்குடிகளால் பிரித்தறிய இயலவில்லை என்று தெரிவித்திருந்தது.
அமேசான் பிராந்தியத்தை மேம்படுத்துவதாக உறுதியளித்து பிரேசிலின் அதிபராக 2019இல் ஜெயிர் போல்சனாரோ பதவியேற்றதிலிருந்து, அங்கு சட்டவிரோத சுரங்க தொழில்கள், விவசாயிகள், வேட்டைக்காரர்கள் உள்ளிட்டோர் தங்களது மூதாதையர் நிலங்களில் ஆதிக்கம் செலுத்தும் சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக பழங்குடியின சமுதாயங்களின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.