வர்த்தக போர் என்ற விஷயம் தற்போது உண்மையாகிவிட்டது: பிரான்ஸ் நிதி அமைச்சர்

ஞாயிறு, 22 ஜூலை 2018 (20:26 IST)
வர்த்தக போர் என்ற விஷயம் தற்போது உண்மையாகிவிட்டது என பிரான்ஸ் நாட்டின் நிதி அமைச்சர் ப்ரூனோ லே மேரே எச்சரித்துள்ளார்.

 
தன் நாட்டினை பற்றி மட்டுமே யோசிக்கும் வகையில், அமெரிக்காவின் வரி விதிப்பு கொள்கை ஒருதலைபட்சமாக இருப்பதாகவும் ப்ரூனோ தெரிவித்தார்.
 
ஆனால், இதனை மறுத்த அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவன் நுசின், சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தங்கள் சந்தைகளை திறந்து, போட்டியிட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
 
கடந்த வாரம் இது தொடர்பாக பேசிய அதிபர் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தகத்தில் எதிரி என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க வரும் அனைத்து சீன பொருட்களுக்கும் கூடுதல் வரிகள் விதிக்கக்கூடும் என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
 
இந்நிலையில் அர்ஜென்டினாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உலகின் சிறந்த பொருளாதாரம் கொண்ட முதல் 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.
 
அப்போது பிரான்ஸ் அமைச்சர் கூறியதாவது:-
 
தன்னை மட்டுமே யோசித்தால், அதன் அடிப்படையில் இவ்வுலகில் வர்த்தகம் இயங்காது என்று குறிப்பிட்ட அமைச்சர் ப்ரூனோ, வருங்கால சர்வதேச சந்தைக்கு இது ஒத்து வராது என்று தெரிவித்தார்.
 
இவ்வாறு இருப்பது, வளர்ச்சியை குறைத்து, பலவீனமான நாடுகளை மிரட்டுவது போல உள்ளதாகவும், இதனால் அரசியல் ரீதியான பல விளைவுகள் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
 
வர்த்தக போர் என்ற ஒன்று தற்போது உண்மையாகிவிட்டதாக ப்ரூனோ தெரிவித்தார். மேலும், எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா திரும்பப் பெறாத வரை, அந்நாட்டுடன் சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பிய ஒன்றியம் கருதாது என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்