புலிகள் எண்ணிக்கை இந்தியாவில் 33 சதவீதம் அதிகரிப்பு - தமிழ்நாட்டில் எத்தனை உள்ளன?

திங்கள், 29 ஜூலை 2019 (19:09 IST)
இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.


இந்தியாவில் புலிகளின் நிலை
 
இன்று சர்வதேச புலிகள் தினம். தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், சர்வதேச புலிகள் தினத்தை ஒட்டி இந்தியாவில் 2018ம் ஆண்டில் நடைபெற்ற புலிகள் கணக்கெடுப்பின் அறிக்கையை வெளியிட்டது. இன்று நடைபெற்ற புலிகள் தின சிறப்பு நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோதி இந்த அறிக்கையினை வெளியிட்டார் . இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக உயர்ந்துள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டில் இருந்து நான்கு வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு நடந்து வருகின்றது. 2006ம் ஆண்டில் நடந்த கணக்கெடுப்பின் முடிவில் இந்தியக்காடுகளில் 1,411 புலிகள் உள்ளதாகவும், 2010 ஆண்டில் 1,706 புலிகள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. 2014ம் வருடம் நடந்த புலிகள் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 2,226 புலிகள் இருப்பதாக அறியப்பட்டு இருந்த நிலையில் 2018ம் ஆண்டில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் அதிகமான புலிகள் வாழும் மாநிலமாக மத்தியபிரதேசம் உள்ளது. இங்கு 526 புலிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014ல் மத்திய பிரதேசத்தில் 308 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 526 ஆக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து அதிக புலிகள் வாழும் இரண்டாவது மாநிலமாக கர்நாடகா உள்ளது. இங்கு 524 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புலிகள்


தமிழகத்தில் 264 புலிகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களில் ஐந்தாவது இடத்தில் தமிழகம் உள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. 2006ம் ஆண்டில் தமிழகத்தில் 76 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை , 2010 ல் 163 ஆகவும் , 2014ல் 229 ஆகவும் உயர்ந்தது. தற்போது தமிழகத்தில் 264 ஆக புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம் , சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என நான்கு புலிகள் காப்பகங்கள் உள்ளன.

இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சிறப்பாக மேலாண்மை செய்யப்பட்ட புலிகள் காப்பகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் விழாவில் பிரதமர் நரேந்திர மோதி, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கான விருதினை , சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் தற்போதைய கள இயக்குனர் நாகநாதனிடம் அளித்தார்.

தமிழகத்தின் நான்காவது புலிகள் காப்பகமாக, 2013ம் ஆண்டில் சத்தியமங்கலம் வனப்பகுதி அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் அதிக பரப்பளவுள்ள புலிகள் காப்பகம் இதுதான். வறண்ட இலையுதிர் காடுகள், முட் புதர் காடுகள் , மலைப்பகுதி, ஆற்றோர படுகை என வேறுபட்ட அடுக்குகளில் அமைந்துள்ள இந்த சத்திய மங்கலம் வனப்பகுதி புலிகள் வாழ ஏதுவான பகுதியாக இருப்பதால் இங்கு புலிகளின் எண்ணிக்கை சீராக உயர்ந்து வருகிறது.

உயரும் புலிகளின் எண்ணிக்கை ஏன் நல்லது?

புலிகள் வளமான காட்டின் குறியீடு. உணவு சங்கிலியின் உச்சத்தில் இருக்கும் புலி இருந்தால், அந்த வனப்பகுதியில் மற்ற உயிர்கள் அனைத்தும் வளமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
 

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் மட்டும் 40 ஆயிரம் புலிகள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால், வேட்டை முதலிய பல காரணங்களாலும் தொடர்ந்து உலகெங்கும் புலிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. 1972ல் இந்தியாவில் நடந்த புலிகள் கணக்கெடுப்பில் 1872 புலிகள் தான் இந்தியாவில் எஞ்சியுள்ளதாக தெரியவந்ததைத் தொடர்ந்து இந்தியாவில் தொடர்ந்து புலிகளை பாதுகாப்பதற்காக பல திட்டங்கள் முன்னெடுக்க பட்டன. 1973ம் ஆண்டு அன்றைய இந்திய பிரதமர் இந்திராகாந்தி புலிகள் திட்டம் (புராஜெக்ட் டைகர்) என்ற முன்னெடுப்பை தொடங்கினார்.

இதன்கீழ் புலிகள் வாழும் பகுதிகளை புலிகள் காப்பகமாக அறிவித்து சிறப்பு நிதி ஒதுக்கி அப்பகுதிகளின் பாதுகாப்பை பலப்படுத்துவது, புலி வேட்டையினை தடுப்பது ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது.

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகில் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருந்த புலிகளின் எண்ணிக்கை ஆயிரங்களை நோக்கி அழிவுப்பாதையில் சென்றது. புலிகள் பாதுகாப்பிற்காக உலகெங்கும் எடுக்கப்பட்ட தொடர் முயற்சிகளால் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. உலகில் காடுகளில் அதிக அளவு புலிகள் வாழும் நாடான இந்தியாவில் உயரும் புலிகளின் எண்ணிக்கை நம்பிக்கை அளிப்பதாக பலரும் கருதுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்