முக்கிய இந்திய நாளிதழ்கள் மற்றும் இணைய பக்கங்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
தினகரன் : முத்தம் தந்து கொரோனா வைரஸை குணப்படுத்துவதாக கூறிய சாமியார் உயிரிழப்பு
மத்தியப் பிரதேச மாநிலத்தில் முத்தம் தந்து கொரோனா வைரஸை குணப்படுத்த முடியும் என கூறிய சாமியார் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும் அவரிடம் முத்தம் பெற்ற 19 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மத்தியப்பிரதேச மாநிலத்தில் 10,000திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 430 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அஸ்லம் பாபா என்ற சாமியார் தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு பொதுவாகவே முத்தம் கொடுத்து ஆசிர்வாதம் வழங்குவார் என கூறப்படுகிறது. எனவே கையில் முத்தம் கொடுத்தால் கொரோனா அண்டாது என கூறி பலருக்கு முத்தம் கொடுத்து வந்துள்ளார்.
கடந்த 4ம் தேதி சாமியாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நாளுக்கு நாள் உடல்நிலை மோசமடைந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரிடம் முத்தம் பெற்றவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்த்ததில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 29 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தினகரன் நாளிதழ் செய்தி விவரிக்கிறது.