ஜெயலலிதா மீதான வருமான வரித் துறை வழக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

வெள்ளி, 25 ஜூலை 2014 (10:38 IST)
தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவருடைய தோழி சசிகலா மீதான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கு ஆகஸ்ட் ஏழாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு, வியாழக்கிழமையன்று காலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செந்தில், இந்த விவகாரத்தை வருமான வரித் துறையுடன் பேசி தீர்த்துக்கொள்வதற்காக மனுச் செய்யப்பட்டிருப்பதால், அந்த மனு மீது முடிவெடுக்கப்படும்வரை, இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறினார்.
 
இதையடுத்து, வருமான வரித் துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமசாமி, இது குறித்து வருமான வரித் துறையிடம் கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இதனால், இந்த வழக்கை மதியத்திற்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.
 
மதியம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித் துறையிடம் ஜெயலலிதா தரப்பினர் முறையீடு செய்திருப்பதாக வருமான வரித் துறையின் வழக்கறிஞர் தெரிவித்தார். ஆகவே, இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
 
இதற்கிடையில், வருமான வரித் துறையிடம் தாக்கல் செய்த மனு மீது என்ன முடிவெடுக்கப்படுகிறது என்பதை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார்.
 
மேலும், முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டுமெனக் கோரி ஒரு மனுவை அவரது தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
 
வழக்கின் பின்னணி
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா 1993-1994 ஆம் ஆண்டில் தனது வருமானம் குறித்த கணக்கை வருமான வரித் துறைக்கு சமர்ப்பிக்கவில்லை என வருமான வரித் துறையால் 1996ஆம் ஆண்டில் வழக்குத் தொடரப்பட்டது.
 
அதற்குப் பிறகு 93-94ஆம் ஆண்டிற்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என சசிகலா மீதும் 1997இல் வருமான வரித் துறை வழக்குத் தொடர்ந்தது. அதே போல, 91-92,, 92-93 ஆகிய ஆண்டுகளில் சசி எண்டர்பிரைசசும் அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரும் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை எனக் கூறி, 1997இல் மேலும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது வருமானவரித் துறை.
 
இந்த வழக்குகளைத் தள்ளுபடி செய்ய வேண்டுமெனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 2006இல் நிராகரிக்கப்பட்டன. பிறகு, உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்யப்பட்டது.
 
இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கும்படி பெருநகர நீதிமன்றத்திற்கு கடந்த ஜனவரி 30ஆம் தேதியன்று உத்தரவிட்டது.
 
சென்னைப் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு, 2014 ஜூலை 24 அன்று விசாரணைக்கு வந்தது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்