இன்று மதியம் திடீரென செய்தியாளர்களைச் சந்தித்த அன்வார், ஆட்சி அமைப்பது தொடர்பாகவும் தமக்குள்ள ஆதரவைப் புலப்படுத்தவும் மலேசிய மாமன்னருடனான சந்திப்புக்கு அனுமதி கோரியிருப்பதாகத் தெரிவித்தார்.
தமக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் மலாய் இஸ்லாமியர்கள் என்று குறிப்பிட்ட அன்வார், நடப்புப் பிரதமர் மொகிதீன் யாசின் தலைமையிலான அரசு இன்றோடு முடிவக்கு வந்துவிட்டது என்றார்.
"கடவுளுக்கு நன்றி. தற்போது எனக்கு உறுதியான, போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதுகுறித்து மாமன்னரிடம் தெரிவிப்பேன்," என்றார் அன்வார்.
அவரது இந்த அறிவிப்பை அடுத்து மலேசிய பங்குச்சந்தைப் புள்ளிகள் 2 விழுக்காடு அளவுக்குக் குறைந்தன.
தமது அமைச்சரவை மலாய் பிரதிநிதிகளை அதிகமாகக் கொண்டிருக்கும் என்ற போதிலும் மற்ற இனங்களுக்கான பிரதிநிதித்துவமும் நியாயமான அளவில் இருக்கும் என்றார் அன்வார்.
எனது அரசாங்கத்தில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பிரதிநித்துவம் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
"அரசியலமைப்புச் சட்டத்தின் கொள்கைகள், மலாய் ஆட்சியாளர்களின் இறையாண்மை, மலாய்தான் அதிகாரப்பூர்வ மொழி என்பதை நிலைநிறுத்தும் வகையில் எனது அரசு செயல்படும்.
"பூமிபுத்திரர்கள் மற்றும் அனைத்து இனத்தவர்களும் தங்களது உரிமைகளை தற்காப்பதற்கான உறுதிமொழியை அளிப்பதாகவும் புதிய அரசு இருக்கும். ஊழலுக்கு முடிவு கட்டும் விதமாகவும் மக்கள் நலனைப் பாதுகாப்பதாகவும் இருக்கும்," என்று அன்வார் தெரிவித்தார்.
அன்வார் தலைமையிலான பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் அப்போதைய பிரதமர் நஜீப் தலைமையிலான அரசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது. பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி சார்பில் மகாதீர் மொஹம்மத் பிரதமரானார். அச்சமயம் சிறையில் இருந்த அன்வார் இப்ராஹிம் பின்னர் விடுதலையானார்.
இரண்டாண்டுகள் நீடித்த அந்த ஆட்சி இந்தாண்டு பிப்ரவரி மாத இறுதியில் கூட்டணிக் குழப்பங்களால் கவிழ்ந்தது. அன்வார் தலைமையிலான பிகே.ஆர். கட்சியைச் சேர்ந்த அஸ்மின் அலியின் தலைமையில் சில எம்பிக்கள் அணி மாறியதை அடுத்து மகாதீர் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது.
பின்னர் திடீர்த் திருப்பமாக நடப்பு பிரதமர் மொகிதீன் யாசின் தலைமையிலான புதிய ஆட்சி அமைந்தது. மகாதீர் தலைமையிலான அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர் யாசின். எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அவர் ஆட்சியமைத்தார். எனினும் அவரது அரசுக்கு நாடாளுமன்றத்தில் போதுமான பெரும்பான்மை இல்லை என்று கூறப்படுகிறது.
எந்நேரத்திலும் மொகிதீன் யாசின் தலைமையிலான ஆட்சி கவிழக்கூடும் என்று தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. எனினும் அன்வார் தரப்பால் பெரும்பான்மை எம்பிக்களின் ஆதரவு இருப்பதை எண்ணிக்கை அடிப்படையில் உறுதியாக நிரூபிக்க முடியவில்லை.
இந்நிலையில் பிரதமர் மொகிதீன் யாசின் ஆட்சி கவிழ்ந்து விட்டது என்றும் தமக்குப் பெரும்பான்மை எம்பிக்களின் ஆதரவு உள்ளது என்றும் அன்வார் இப்ராஹிம் இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆனால் ஆளும் தரப்பினர் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
ஆட்சி கவிழவில்லை என மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக துறையின் அமைச்சர் கைரி ஜமாலுடீன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோர மலேசிய மாமன்னருடனான சந்திப்புக்கு அனுமதி கோரி இருப்பதாக அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் மாமன்னரைச் சந்திக்க இயலும் என தாம் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அன்வாரின் இந்த திடீர் அறிவிப்பால் மலேசிய அரசியல் களத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் மலேசிய மாமன்னர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மதியம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கவலைப்பட ஒன்றுமில்லை என்றும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அன்வாரின் அறிவிப்பில் நம்பிக்கை ஏற்படும் பட்சத்தில் மாமன்னர் அவரை சந்திக்கக்கூடும். எனவே மாமன்னரின் முடிவுக்காக மலேசிய மக்கள் காத்திருக்கின்றனர்.