இலங்கையின் வடபகுதி செல்லும் வெளிநாட்டவர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகம்

வியாழன், 16 அக்டோபர் 2014 (15:39 IST)
தேசிய பாதுகாப்புக்கு சிலரால் குந்தகம் ஏற்பட்டிருக்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டி, இலங்கையின் வடபகுதிக்குச் செல்கின்ற வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற்று வர வேண்டும் என்ற புதிய விதிமுறை, வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அங்குள்ள படையதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

 
இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வந்து, வடபகுதிக்குச் செல்ல முயன்ற வெளிநாட்டவர்கள் பலர், முன் அனுமதி இல்லாத காரணத்தினால் கடந்த சில தினங்களாக ஓமந்தை சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டதையடுத்து, அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல நேர்ந்துள்ளது.
 
இது குறித்து இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய பிபிசிக்குக் கருத்து வெளியிடுகையில், வெளிநாட்டு கடவுச் சீட்டுடன் வடபகுதிக்குப் பயணம் செய்கின்ற அனைவரும் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியைப் பெற வேண்டும் எனத் தெரிவித்தார்.
 
"பயங்கரவாதத்தைத் தோற்கடித்து நாங்கள் நாட்டை அபிவிருத்தி செய்து வருகின்றோம். இந்தப் பணிக்கு வெளிநாடுகளும், வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்களும், இராஜதந்திரிகளும் எங்களுக்குப் பல வழிகளில் உதவியிருக்கின்றார்கள். இதற்கு நாங்கள் நன்றி தெரிவித்திருக்கின்றோம். ஆனால் ஒரு சிலர் வடபகுதியில் நிலவுகின்ற அமைதியைக் குலைத்து இனங்களுக்கிடையில் குரோதத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் காரணமாகவே இந்த நடைமுறையை நாங்கள் மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. யுத்தம் முடிவடைந்ததையடுத்து, எவரும் நாட்டின் எந்தப் பகுதிகளுக்கும் சென்று வரலாம். அதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது. 
 
ஆனால், தேசிய பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் சிலர் நடந்து கொள்வதன் காரணமாகவே வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. வடபகுதிக்கு என்ன தேவைக்காக அவர்கள் செல்கின்றார்கள் என்பதைக் குறிப்பிட்டு, பாதுகாப்பு அமைச்சிடம் பிரயாணம் செய்வதற்கான அனுமதியை முன்கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டும்" என்றார் இராணுவ பேச்சாரளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய அவர்கள்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்