காரசாரமான உணவு ஆயுளை அதிகரிக்கும் என்கிறது சீன ஆய்வு

வியாழன், 6 ஆகஸ்ட் 2015 (11:22 IST)
காரசாரமான உணவுகளை சாப்பிடுவது ஆயுளை அதிகரிக்கும் என்று சீன ஆய்வு ஒன்று காட்டுகிறது.
 
அதிலும் குறிப்பாக தோட்டத்திலிருந்து பறிக்கப்பட்ட மிளகாயை உடனடியாக சாப்பிடுவது உடலுக்கு நல்லது என அந்த ஆய்வு கூறுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் ஐந்து லட்சம் மக்களின் உணவுப் பழக்கங்களை ஆய்வு செய்த சீன ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
வாரம் ஒருமுறை காரசாரமான உணவை உட்கொள்பவர்களைவிட, தினந்தோறும் காரசாரமான உணவுகளை உட்கொள்பவர்கள் 14 சதவீதம் கூடுதலாக உயிர்வாழும் வாய்ப்புகள் உள்ளன என்று அந்த ஆய்வின் முடிவு கூறுகிறது.
 
எனினும் தமது ஆய்வின் முடிவுகள் இறுதியானவை அல்ல என்று கூறியுள்ள இந்த ஆய்வாளர்கள், "மனிதர்களின் உணவுப்பழக்கத்தைக் கண்காணித்ததைக் கொண்டு கணக்கிடப்பட்டவை" என்பதாகவே தமது ஆய்வு அமைந்திருந்தது என்றும், இதுகுறித்து வேறு இடங்களிலும் கூடுதல் ஆய்வுகள் தேவை எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
 
எனினும் மிளகாயிலுள்ள முக்கிய மூலப் பொருளான-காப்சேஷியன்- நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்றும், வீக்கம் மற்றும் எரிச்சலைக் குறைக்கும் தன்மை கொண்டது என்பது முந்தைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்