புங்குடுதீவு மாணவி கொலையை விசாரிக்க விசேட நீதிமன்றம்: சிறிசேன

புதன், 27 மே 2015 (11:38 IST)
இலங்கையின் வடக்கே புங்குடுதீவு மாணவி வித்யாவின் கொலைச் சம்பவம் தொடர்பில் விசேட நீதிமன்றத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகளாகக் காணப்படுபவர்களுக்கு விரைவாக தண்டனை வழங்கப்படும் என்று யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.


 
திடீர் விஜயமாக யாழ்ப்பாணத்திற்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் வடமாகாண முதலமைச்சர் மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
 
இந்தக் கலந்துரையாடலின்போது, புங்குடுதீவு மாணவி வித்யாவின் கொலையை வன்மையாகக் கண்டித்துள்ள ஜனாதிபதி, வித்யாவின் குடும்பத்தினரையும் சந்தித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
யாழ் வேம்படி மகளிர் கல்லூரி சந்திப்புகளுக்குப்பிறகு, அவர் வடமாகாண ஆளுனரின் அலுவலகத்திற்குச் சென்று அவருடனும் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுனர் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் சில தினங்களுக்கு முன்னர் யாழ்நகரில் இடம்பெற்ற ஆர்பப்பாட்டத்தின்போது தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்த யாழ் நீதிமன்றக் கட்டிடத் தொகுதியையும் வாகனத்தில் இருந்தவாறே பார்வையிட்டிருக்கின்றார்.
 
ஜனாதிபதியின் யாழ்ப்பாண பயணத்தின்போது உள்ளுர் செய்தியாளர்கள் எவரும் அந்த நிகழ்வில் செய்தி சேகரிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆயினும், பிரதி அமைச்சர் விஜயகலா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்களை மாத்திரம் அழைத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
இதற்கிடையில் இன்று சுன்னாகம் பகுதியில் நடைபெறவிருந்த ஆரப்பாட்டம் ஒன்றிற்கு மல்லாகம் நீதிமன்றம் தடை விதித்திருக்கின்றது. இந்தத் தடையுத்தரவின்படி 14 நாட்களுக்கு சுன்னாகம் பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் எதனையும் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்