சந்திரயான் 2: 'சாஃப்ட் லேண்டிங்' - கடைசி 15 நிமிடங்கள் ஏன் முக்கியமானது
வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (17:33 IST)
சந்திரயான் நிலவு திட்டத்தில், விக்ரம் தரையிறங்கும் கலன் நிலவின் மேற்பரப்பில், தானே நிலைநிறுத்திக் கொள்ளும் தருணம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
தரையில் இருந்து எந்த கட்டுப்பாடும் இல்லாமல், விக்ரம் கலன் அதுவாகவே வழிநடத்திக் கொள்ளும் அந்தத் தருணம், "படபடப்பான 15 நிமிடங்கள்" என அவர் விவரிக்கிறார்.
ஏன் இந்தப் பதற்றம்?
நிலவில் தரையிறங்குவது என்பது கடினமானதாக இருக்கலாம்.
நிலவில் வளிமண்டலம் கிடையாது. இதனால் லேண்டரை மெதுவாக தரையிறக்க பாராசூட்டை பயன்படுத்த முடியாது.
அதனால் இந்த எரிபொருளை பயன்படுத்தி சமநிலையில் தரையிறங்குவதுதான் ஒரே வழி.
அதாவது, லேண்டர் அதனுடைய சொந்த ராகெட் இன்ஜின்களை பயன்படுத்தி அதன் வேகத்தை சீராக குறைக்கும்.
நிலவின் மேற்பரப்பை நெருங்க நெருங்க, கிடைமட்டமாக லேண்டர் நகர்ந்து கொண்டே இருக்கும்.
நிலவின் லேண்டர் தரையிறங்கும் அந்த தருணத்தில், ராக்கெட் இன்ஜின்கள் நகர்வை நிறுத்தி, அதே சமயத்தில், இறக்கத்தின் வேகத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்.
இதற்கு பெயர்தான் "சாஃப்ட் லேண்டிங்".
இறுதி கட்டத்திற்கு முன்பு சுற்றுவட்டப் பாதை கலனும், லேண்டரும், நிலவில் பாறைகள் அல்லது பள்ளங்கள் இல்லாத எந்த இடத்தில் தரையிறங்கலாம் என்பதை ஆய்வு செய்திருக்கும்.
லேண்டர் தரையிறங்கிய பின் சந்திர மண்டலத்தில் ஏதேனும் தூசிகள் எழலாம். அப்படி இருந்தால், அந்த தூசிகள் மறைந்த பின்பு ரோவர் மெதுவாக ஊர்ந்து வெளியே செல்லும்.
நிலவில் தரையிறங்கிய இடத்தில் இருந்து 500 மீட்டர் தூரம் ரோவரால் பயணிக்க முடியும்.
சரி. லேண்டர் என்ன செய்யும்?
லேண்டர் தனது அருகில் உள்ள நிலவு நடுக்கங்களை ஆய்வு செய்யும். மேலும், சந்திர மண்டலத்தில் உள்ள மண்ணின் வெப்ப விவரங்களையும் சேகரிக்கும்.
ஆனால், நிலவின் மேற்பரப்பில் நிலவும் தீவிரமான காலநிலை ஒரு பெரும் சவாலாக அமையலாம்.
சூரிய வெளிச்சம் இருக்கும்போது, அங்கு வெப்பநிலை 100 டிகிரி செல்ஷியசுக்கு அதிகமாக செல்லலாம். இது -170 டிகிரி செல்ஷியஸ் வரை இறங்கலாம்.
இந்தியாவின் சந்திராயன் திட்டம்
இந்தியாவின் நிலவை நோக்கிய பயணம் என்கிற லட்சிய திட்டத்தின் ஒரு பகுதியான சந்திரயான்-2 கடந்த ஜூலை 22ஆம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்டது.
சந்திரயான்-2இல் மூன்று முக்கிய கலன்கள் உள்ளன. முதலாவதாக, சுற்றுவட்டக்கலன் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும். இரண்டாவதாக, நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் கலன். மூன்றாவதாக, இந்த தரையிறங்கிய கலனில் இருந்து ரோவர் ஊர்தி வெளியேறும்.
இந்நிலையில் செப்டம்பர் 7ஆம் தேதி அதிகாலை 1:30 - 2:30 மணி அளவில் லேண்டர் நிலவின் மேற்பரப்பை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் காலை 5:30 - 6:30 மணி அளவில் நிலவின் தென் துருவ பகுதியில் ரோவர் தரையிறக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.
இதை நீங்கள் எப்படி பார்க்கலாம்?
தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படும். இஸ்ரோ இணையதளத்திலும் நேரலையாக ஒளிபரப்பப்படும்.
மேலும், இஸ்ரோவின் யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களிலும் நேரலையாக ஒளிப்பரப்பாகும்.
பிபிசி தமிழின் ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களிலும் இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பப்படும்.