குண்டுவீச்சு நடத்தியவர்களுக்கு சவுதி இளவரசர் பரிசு அறிவிப்பால் சர்ச்சை

சனி, 25 ஏப்ரல் 2015 (05:24 IST)
யேமனில் குண்டுவீசித் தாக்குதல்களை நடத்திய சவுதி விமானப் படையின் ஓட்டுநர்களுக்கு பரிசளிப்பதாக அந்நாட்டு இளவரசர் டிவிட்டரில் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 


எனினும் அந்தக் குறுந்தகவலை அவர் பின்னர் அழித்துவிட்டதாகத் தெரிகிறது.
 
அவர் வெளியிட்டிருந்த சர்ச்சைகுரிய அந்த ட்வீட்டில் யேமனில் குண்டு வீச்சு நடவடிக்கைகளில் பங்குபெறும் விமான ஓட்டிகளுக்கு, மிகவும் விலை கூடுதலான பெண்ட்லி சொகுசுக் கார்களை பரிசளிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
 
இதற்கு பதிலளித்திருந்த பல சவுதிகள் அவரது முன்னெடுப்பை பாராட்டி, அந்த விமான ஓட்டிகள் அப்படியான பரிசைப் பெற தகுதி வாய்ந்தவர்களே எனக் கூறியிருந்தனர்.
 
ஆனால் நாட்டுக்கு வெளியே இருக்கும் பலர் இது நல்லதொரு முன்னெடுப்பு அல்ல ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை எனக் கருத்து வெளியிட்டுள்ளனர்.
 
இதேவேளை வறுமையில் வாடும் யேமனுக்கு, அவசர மருத்துவ உதவிகளை வழங்கும் வாகனங்களை அளித்து உதவி செய்வது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என யேமெனி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்