காரை நகர் சிறுமி வல்லுறவு: கடற்படையினர் 7 பேர் கைது

சனி, 19 ஜூலை 2014 (16:11 IST)
இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாணம் காரை நகரில் பாடசாலை மாணவியொருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படையினர் 7 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாகக் காவல் துறையினர் கூறுகின்றனர்.
 
சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்பு ஒன்றுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
காரை நகரில் ஊரி என்ற கிராமத்தைச் சேர்ந்த 11 வயது பள்ளிச் சிறுமி, கடற்படைச் சிப்பாய் என்று சந்தேகிக்கப்படுபவரினால் தொடர்ச்சியாக 11 தினங்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த முறைப்பாட்டையடுத்து, குறித்த சிறுமி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருடன், 9 வயதான மற்றுமொரு பாடசாலைச் சிறுமியும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
 
இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் எனக் கோரியும் காரை நகர் பிரதேச செயலகத்தின் முன்னால் 2014 ஜூலை 18 வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.
 
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எஸ். சிறிதரன், ஈ.சரவணபவன் ஆகியோரும் ஊர் மக்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
 
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும், ஊரி கிராமத்தில் உள்ள சிறுமியர் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக, காரை நகர் பிரதேச செயலரிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களினால் கையளிக்கப்பட்டிருக்கின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்