பாலியல் வன்முறை: யாழ் பெண்கள் கவனயீர்ப்பு போராட்டம்

சனி, 26 ஜூலை 2014 (13:59 IST)
யாழ்ப்பாணம் காரை நகரில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளானது உட்பட யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வருகின்ற பாலியல் வன்முறைகள் மற்றும் பாலியல் கொலைகளைக் கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.
 
இதற்கான அழைப்பைப் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு என்ற அமைப்பு விடுத்திருந்தது.
 
இந்த ஆர்ப்பாட்டம் குறித்துக் கருத்து வெளியிட்ட பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ரஜனி சந்திரசேகரம், யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகப் பல இடங்களிலும் பெண்கள் சிறுமிகள் மீது பாலியல் வன்புணர்வும் கொலைகளும் இடம் பெற்றிருக்கின்ற போதிலும், இதுவரையில் குற்றவாளிகள் உரிய முறையில் தண்டிக்கப்படவில்லை என சுட்டிக் காட்டினார்.
 
"பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அச்சுறுத்தப்படுகின்றார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுப்பவர்களும் அச்சுறுத்தப்படுகின்றார்கள். பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பது என்பது சவால் மிகுந்ததாக இருக்கின்றது. இதன் காரணமாகவே கறுப்புப் பட்டியால் வாயை மூடிக் கட்டியபடி கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டோம்" என அவர் தெரிவித்தார்.
 
"பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றச் சம்பவங்கள் இடம்பெற்றதும், காவல் துறையினர் விசாரணைகளை நடத்துகின்றார்கள். நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆயினும் குற்றவாளிகள் தப்பிச் செல்கின்ற போக்கும் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பாதிக்கப்படுகின்ற நிலைமையுமே காணப்படுகின்றது" என்றும் அவர் கூறினார்.
 
யாழ் நீதிமன்றத்தின் எதிரில் கறுத்த பட்டியினால் வாய்களைக் கட்டியவாறு பெருமளவிலான பெண்கள் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொண்டிருந்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்