பாப்லோ நெரூடா விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா?

வெள்ளி, 23 ஜனவரி 2015 (11:32 IST)
சிலி நாட்டு கவிஞர் பாப்லோ நெரூடா விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால் சிலி நாட்டு அரசு புதிய விசாரணைக் கமிஷனை அறிவித்துள்ளது.
 
நோபல் பரிசு பெற்ற கவிஞர் பாப்லோ நெருடாவின் மரணம் குறித்து சிலி நாட்டு அரசு புதிய விசாரணை கமிஷன் ஒன்றை அறிவித்திருக்கிறது. அவரது மரணத்திற்கான காரணம் குறித்து இந்த விசாரனை உறுதி செய்யும்.
 

 
கவிஞர் நெருடா விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று சில குறிப்புகள் காட்டுவதாக அரசுக்காகப் பேசவல்ல பிரான்ஸிஸ்கோ யுகாச் கூறினார்.
 
நெருடா 1973இல் இறந்தபோது அவர் ப்ரோஸ்டேட் புற்றுநோயால் இறந்தார் என்று அவரது மரண அறிக்கை கூறியது. ஆனால் அவரது முன்னாள் டிரைவரும் அந்தரங்கச் செயலருமான , மானுவெல் ஆரயா , நெருடாவுக்கு ஊசி மருந்து ஒன்று தரப்பட்டது என்றும் அதுதான் அவருக்கு மாரடைப்பைத் தூண்டியது என்றும் கூறுகிறார்.
 
அவரது உடலை 2013ஆம் ஆண்டு தோண்டி எடுத்த பின்னர், அதன் மீது நடத்தப்பட்ட சோதனைகள் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் ஏதும் இருப்பதாகக் காட்டவில்லை. சிலியில் ராணுவ அதிரடிப் புரட்சி ஏற்பட்டு, ஜெனெரல் பினொஷெ ஆட்சிக்கு வந்த 12 நாட்களுக்குப் பின்னர் நெருடா இறந்தார்.
 
அவரது கவிதைகளுக்காகவே நெருடா பிரபலமானவராக இருந்தாலும், அவர் சிலியின் கம்யூனிஸ்ட் கட்சியில் அவரது ஆயுள் முழுவதும் உறுப்பினராக இருந்தார். மேலும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் , பிரான்சுக்கான சிலி தூதராகவும் இருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்