செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அணுசக்தி நிபுணர்கள் செல்லவுள்ளனர்.
யுக்ரேன் மீதான படையெடுப்பின் தொடக்கத்தில் ரஷ்ய படைகள் செர்னோபிலை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில், ரஷ்ய படைகள் செர்னோபிலில் இருந்து வெளியேறிவிட்டது என யுக்ரேன் கூறியுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகமை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், செர்னோபில் அணுமின் நிலையத்திற்கு அணுசக்தி தொடர்பான நிபுணர்கள் அனுப்பப்பட உள்ளதாக, சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் மரியானோ கிராஸி தெரிவித்துள்ளார்.
அந்த அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு தொடர்பான இந்த ஆய்வுக்கு அவர் தலைமை வகிக்க உள்ளார்.
யுக்ரேனில் இத்தகைய ஆய்வு நடைபெறுவது இதுவே முதன்முறை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர், ராய்ட்டர்ஸ் செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், ரஷ்ய படைகள் செர்னோபிலில் இருந்து வெளியேறியது, சரியான திசையில் பயணிப்பதாகும் என தெரிவித்தார்.
செர்னோபில் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சின் அளவு "இயல்புநிலையில்" இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று காலையில் செர்னோபில் அணுமின் நிலையத்தில் ரஷ்யப்படையினர் சிலர், அணுமின் நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்ததாக, யுக்ரேன் அணுசக்தி நிறுவனமான எனெர்கோடம் (Energoatom) தலைவர் தெரிவித்துள்ளார்.
1986ஆம் ஆண்டில் செர்னோபிலில் உள்ள ஒரு அணு உலையில் விபத்து ஏற்பட்டதால், செர்னோபில் அணுமின் நிலையம் பிரபலமானது.