நிர்மலா சீதாராமன்: ரேஷன் கடையில் நரேந்திர மோதி படம்; கலெக்டருடன் அமைச்சர் வாக்குவாதம்

சனி, 3 செப்டம்பர் 2022 (22:49 IST)
பிரதமரின் படத்துடன் கூடிய ஒரு பேனரை எங்கள் ஆட்கள் வைப்பார்கள். ஒரு மாவட்ட ஆட்சியராக அதற்கு சேதமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. இல்லாவிட்டால் நானே, இங்கு பேனர் வைப்பேன் என்று பேசியுள்ளார் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஏன் இப்படி பேசினார்?
 

 
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம், பீர்கார் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, ஆட்சியரிடம் தொடர் கேள்விகள் கேட்டார்.

 
அதைத்தொடர்ந்து தெலங்கானாவின் ரேஷன் கடைகளுக்கு வரும் அத்தியாவசிய பொருட்களின் விலையில் மாநில, இந்திய அரசின் பங்குகள் குறித்து சில தரவுகளை அடிப்படையாக கொண்டு தோராயக் கணக்கீடுகள் செய்து பேசினார்.

 
ஆனால், இறுதியில் இவ்வளவு செய்யும் இந்திய அரசின் பிரதமர் படத்தைக் கொண்டு ஒரு பேனர் கூட இல்லை என்று பேசியதோடு, எங்கள் பணியாளர்கள் பேனர் வைப்பார்கள். ஒரு கலெக்டராக அதை சேதமடையால் கிழியாமல் வைத்திருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என்றும் பேசினார். இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
 
இதுதான் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வாதப்பிரதிவாதங்களுக்கு இடமளித்துள்ளது. குறிப்பாக அரசியல் தலைவர்கள் பலரும் இந்த நடவடிக்கைக்கு எதிர்வினையாக தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

 
 
அங்குள்ள பேனரில் ஏன் பிரதமர் மோடி படம் இல்லை என மாவட்ட ஆட்சியர் ஜிதேஷ் பட்டீலிடம், நிர்மலா சீதாராமன் கேட்டார். மேலும் அவர் கேட்ட பல கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியர் தெரியவில்லை என்று பதில் கூறியதாகவும் கூறப்படுகிறது.

 
இதனால், கோபமடைந்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வாறு பேசினார். "இந்திய அரசு சார்பில் மக்களுக்கு மாதாமாதம் வழங்கப்படும் ரேஷன் அரிசி ஒரு கிலோ சுமார் ரூ. 35 வரை விலை இருக்கும். இதனை மக்கள் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் பெறுகின்றனர்.

 
இதில் மாநில அரசின் பங்கு என்ன? சொல்லுங்கள். ஒரு ஆட்சியராக இதை நீங்கள் தெளிவாக விவரிக்க வேண்டும். உங்களுக்கு தெரியவில்லையா?

 
 
மாநில அரசு ஒரு கிலோ அரிசிக்கு 1 ரூபாய் செலவு செய்கிறது. அத்துடம் மக்கள் கொடுக்கும் ஒரு ரூபாய். இது தவிர ஏறக்குறைய மீதமுள்ள மொத்த செலவையும் இந்திய அரசுதான் செய்கிறது. போக்குவரத்து செலவு உட்பட. ஆனால், இவ்வளவையும் செய்யும் தலைவரான பிரதமர் நரேந்திர மோதியின் படத்தை வைப்பதென்றால் மட்டும் ஏன் எதிர்ப்பு. யார் எதிர்ப்பது? இன்று மாலைக்குள் ரேஷன் கடை முன்பு பிரதமர் மோடியின் படத்துடன் பேனர் வைக்க வேண்டும். இல்லையேல் நானே பேனர் வைப்பேன்" என கூறினார். அப்போது அங்கு கூடியிருந்த ஆதாரவாளர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

 
எதிர்வினைகள்

 
இது தொடர்பாக, தெலங்கானா மாநில நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும் டி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவருமான கே டி ஆர் தனது ட்விட்டரில் கருத்து வெளியிட்டார்.

 
அந்தப் பதிவில், ``நிர்மலா சீதாராமன் ஐஏஎஸ் அதிகாரியிடம் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து நான் திகைத்துப்போனேன். சில அரசியல்வாதிகள் ஐஏஎஸ் அதிகாரிகளின் உழைப்பை மதிக்காமல் துச்சப்படுத்துவார்கள். இதை தன்மையாக கையாண்ட ஐஏஎஸ் ஜித்தேஷுக்கு எனது வாழ்த்துகள்'' எனப் பதிவிட்டிருந்தார்.

 
பிரதமரின் படம் வைக்க வேண்டும் என்று சொல்லும் நிதியமைச்சரின் கோரிக்கை அதிகாரச்சலுகையின் உச்சம் என்று தெரிவித்துள்ளார் தெலங்கான அரசின் டிஜிட்டல் மீடியா இயக்குநர் கொனதம் திலீப்.
 
 
அதுபோக, உணவுக்கான உரிமை என்பது 1964ஆம் ஆண்டு உருவான இந்திய உணவுக் கழகத்தின் சட்டப்படி, நாடு முழுக்க இருக்கும் அனைத்து மக்களுக்கும் பொதுவானதாகிறது. பிரதமர் நரேந்திர மோதிக்கு முன்பும் இருந்தது. அவருக்கு பிறகும் தொடரும் என்றும் அவர்,தெரிவித்துள்ளார்.
 
 
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தனது ட்விட்டரில் பதிவிட்டு, "இது ஒரு அவமானகரமான ஜம்ச்சாகிரி (ஆம் என்றால் ஆம் என தலையாட்டும் பண்பைக் குறிக்கும் இந்தி வார்த்தை) பண்பின் வெளிப்பாடு. அதிகபட்சம் நிதியமைச்சர் இது தொடர்பாக கடிதம் எழுதியிருக்கலாம்" என்று தெரிவித்துள்ளார்.
 
 
மேலும், பிரதமர் மோதி இதற்காக தன் சொந்தப் பணத்தையா எடுத்தார் என்று கேள்வி எழுப்பியும் பதிவிட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்