தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டிஸ்

செவ்வாய், 18 நவம்பர் 2014 (19:08 IST)
உரிய உபகரணங்கள் இல்லாமல் பாதாளச் சாக்கடையில் துப்புரவுப் பணி செய்வோர் தொடர்பாகத் தமிழக அரசு விளக்கம் அளிக்கக் கோரி, தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
 
இந்தியாவின் பல பகுதிகளில் மனிதனே மனிதக் கழிவுகளை அப்புறப்படுத்துவது தொடர்கிறது
 
கையால் மலம் அள்ளும் பணி இந்தியாவில் சட்டப்படி குற்றம் என்பதாலும், அதைத் தடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்பதாலும் இது குறித்து 8 வாரங்களுக்குள் தமிழக அரசு முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
 
தமிழகத் தலைமைச் செயலளார் வழியாக அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீஸில், இந்தத் தொழிலில் ஈடுபடுவோருக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித் தர, தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்தும் அறிக்கை அளிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
கடந்த அக்டோபர் மாதம் 25 மற்றும் 27ஆம் தேதிகளின் போது ஊடகங்களில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
துப்புரவுப் பணி செய்யும் பணியாளர்களுக்குச் சென்னை உள்ளிட்ட மாநாகராட்சிப் பகுதிகளில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
 
இருந்தும் அவற்றைப் பயன்படுத்த ஊழியர்கள் மத்தியில் தயக்கம் காணப்படுவதாக விமர்சனங்களும் உள்ளன.
 
இந்தப் பணி இயந்திரமயமாக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் சிலரால் முன்வைக்கப்படுகிறது.
 
பாதாளச் சாக்கடைகளில் இருக்கும் நச்சு வாயு தாக்கி ஆண்டுதோரும் தொழிலாளர்கள் பலர் உயிரிழக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்