இயற்கை அதிசயம் A68 மெகா பனிப்பாறை: நாள்தோறும் 150 கோடி டன் நன்னீரை கடலில் கலந்த ராட்சத பனிப்பாறை

ஞாயிறு, 23 ஜனவரி 2022 (13:17 IST)
A68 என்கிற மிகப்பெரிய பனிப்பாறை உருகுவதால் அட்லாண்டிக் பெருங்கடலில் நாள் ஒன்றுக்கு 150 கோடி டன் தண்ணீர் கலந்தது.

இதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமானால், பிரிட்டனில் உள்ள மொத்த மக்கள் தொகையும் ஒரு நாளில் பயன்படுத்தும் நீரைப் போல 150 மடங்கு அதிக தண்ணீர் ஒரே நாளில் கடலில் கலந்தது.

A68 உலகின் மிகப்பெரிய பனிப்பாறையாக, குறைந்த காலத்துக்கு இருந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு அண்டார்டிகாவில் இருந்து பிரிந்த போது கிட்டத்தட்ட 6,000 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டதாக இருந்தது. ஆனால் 2021ஆம் ஆண்டில் அத்தனை பெரிய பனிப்பாறை காணாமல் போய்விட்டது. ஒரு டிரில்லியன் டன் அளவிலான பனிப்பாறையை கரைந்துவிட்டது.

தற்போது விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் A68 பனிப்பாறை சுற்றுச்சூழலில் ஏற்படுத்திய தாக்கத்தைக் குறித்து ஆராய்வதில் மும்முரமாக இருக்கின்றனர்.

A68 பனிப்பாறை அண்டார்டிகாவிலிருந்து பிரிந்து, தெற்கு பெருங்கடல் வழியாக வடக்கு நோக்கி பயணித்து, தெற்கு அட்லாண்டிக் கடலை வந்தடைந்தது.

லீட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்று, செயற்கைக் கோளின் தரவுகளைக் கொண்டு அப்பனிப்பாறை பயணித்த வழித்தடம் முழுக்க அதன் உருவம் எப்படியெல்லாம் மாறியது என்பதைக் கணக்கிட தேவையான தரவுகளை சேகரித்து வருகிறது.

எனவே, கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அப்பனிப்பாறையின் பயணத்தில், அது உருகும் விகிதம் எப்படி மாறுபட்டது என்பதை மதிப்பிட முடிந்தது.

A68 பனிப்பாறை அதன் கடைசி காலத்தில், பிரிட்டிஷ் ஓவர்சீஸ் டெரிட்டரி ஆஃப் சவுத் ஜார்ஜியா என்கிற வெப்பமான பகுதிக்கு வந்தடைந்தது.

இந்த ராட்சத பனிப்பாறை ஆழம் குறைவான, லட்சக் கணக்கான பென்குயின்கள், கடல் சிங்கங்கள், திமிங்கலங்கள் வேட்டையாடும் பாதையில் சிக்கிக் கொள்ளுமோ என்றும் கொஞ்ச காலத்துக்கு ஓர் அச்சம் நிலவியது.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை, காரணம் A68 பனிப்பாறை மிதப்பதற்குத் தேவையான ஆழத்தை இழந்தது.

"A68 பனிப்பாறை கண்டத்தின் நிலபரப்பின் மீது மோதியது போலத் தான் தெரிகிறது. அப்போது தான் பனிப்பாறை திரும்பி, சிறு துண்டு உடைவதைக் கண்டோம். அது மட்டுமே A68 பனிப்பாறையை நிறுத்த போதுமானதாக இல்லை" என பிபிசியிடம் கூறினார் அந்த ஆய்வறிக்கையின் ஆசிரியர் மற்றும் லீட்ஸ் பல்கலைக்கழகத்தின் நெர்க் சென் டர் ஃபார் போலார் அப்சர்வேஷன் அண்ட் மாடலிங்கைச் சேர்ந்த அனே ப்ராக்மான் - ஃபோல்கன்.

ஏப்ரல் 2021 காலத்தில், A68 பனிப்பாறை, கண்காணிக்க முடியாத அளவுக்கு எண்ணற்ற சிறிய துண்டுகளாக உடைந்தது. ஆனால் அது சுற்றுச்சூழலின் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் மிக நீண்ட காலத்துக்கு இருக்கும்.

ஜெயின்ட் டேபுலர் அல்லது ஃப்ளாட் டாப் பனிப்பாறைகள் எந்த பகுதியில் சுற்றித் திரிந்தாலும் அது இருக்கும் பகுதியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அப்பனிப்பாறைகள் வெளியிடும் நன்னீர், கடலின் நீரோட்டத்தை மாற்றும். மேலும் இரும்பு போன்ற தாதுப் பொருட்கள், நுண்ணுயிரிகள் கடலில் கலந்து உயிரி உருவாக்கத்தை ஏற்படுத்தும்.

A68 பனிப்பாறை பிளவுபட்டு காணாமல் போவதற்கு முன், பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வேயால், அப்பனிப்பாறைக்கு அருகில் சில எந்திர கிளைடர்களை நிலைநிறுத்த முடிந்தது.

இந்த கிளைடர்கள் உட்பட பல்வேறு சாதனங்களிலிருந்து கிடைத்த தரவுகளை இதுவரை முழுமையாக பகுப்பாய்வு செய்யப்படவில்லை என்றாலும், சில ஆர்வத்தைக் தூண்டக் கூடிய விஷயங்களை வெளிப்படுத்துவதாக உயிரியல் கடல் ஆய்வு நிபுணர் பேராசிரியர் ஜெரைன்ட் டார்லிங் கூறினார்.

"A68 பனிப்பாறையைச் சுற்றியுள்ள பைட்டோபிளாங்க்டன் இனங்களின் தாவரங்களில் மாற்றம் ஏற்படுவதை வெளிப்படுத்தும் வகையில் மற்றும் கடலின் ஆழமான பகுதிகளில் தாதுப் பொருட்களின் படிமானங்கள் தொடர்பாக வலுவான சமிக்ஞைகள் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். கிளைடரில் உள்ள சிறு துகள்களைக் கண்டறியும் சென்சார், பனிப்பாறையிலிருந்து படிமானங்கள் தொடர்பாக வலுவான சமிக்ஞைகள் கண்டுணர்ந்துள்ளது." என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார்.

A68 பனிப்பாறையின் மாறும் வடிவம் மற்றும் வெப்பத்தால் உருகி கடலில் நன்னீர் கலப்பது தொடர்பான விவரங்கள், 'ரிமோட் சென்சிங் ஆஃப் என்விரான்மென்ட்' என்கிற சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்