நாளந்தா பல்கலைக்கழகம்: வகுப்புகள் ஆரம்பம்

திங்கள், 1 செப்டம்பர் 2014 (17:53 IST)
பீகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கிர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் பழமையான நாளந்தா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான வகுப்புகள் ஆரம்பித்துள்ளன.
 
தற்போது 5 பெண்கள் உட்பட 15 மாணவர்களுடனும் 11 பேராசிரியர்களுடனும் இந்த பல்கலைக்கழகம் திங்கட்கிழமை முதல் தனது கற்பித்தலை தொடங்கி இருக்கிறது.
 
நாளந்தா பல்கலைக்கழகம் தொடக்கத்திற்கு சிறப்பு விழா எதுவும் தற்போது ஏற்பாடு செய்யப்படவில்லை. இம்மாதம் 14ஆம் தேதி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நாளந்தா பல்கலைக்கழகத்தைப் பார்வையிடும் சமயத்தில் ஒரு சிறப்பான துவக்க விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு பயில விண்ணப்பித்திருந்த நிலையில், முதல்கட்டமாக அவர்களில் 15 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆய்வு விடுமுறையில் வந்துள்ள ஒரு பூட்டான் பல்கலைக்கழக முதல்வரும் பெளத்த கல்வி குறித்த முதுகலைப் பட்டம் பெற்றுள்ள ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இந்த 15 மாணவர்களில் அடங்குவர்.
 
பேராசிரியர்களில் இரண்டு பேர், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். ஒருவர் சிங்கப்பூரைச் சேர்ந்த யின் கெர் மற்றொருவர் அமெரிக்காவைச் சேர்ந்த சாம்யல் ரைட்.
 
பண்டைய காலத்தில் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமாக நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது குறிப்பிடத்தக்கது. திபத்தியர்கள், சீனர்கள், கிரேக்கர்கள் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் அறிஞர்களும் இந்தப் பல்கலைகழகத்தால் ஈர்க்கப்பட்டனர் என்று வரலாற்று பதிவுகள் தெரிவிக்கின்றன.
 
பண்டைய நாளந்தா பல்கலைக்கழகத்தின் மதிப்புகளுடன் சமகாலத் தேவைகளை இணைத்துச் செயற்படுவதே இந்தப் புதுப்பிக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தின் முக்கிய நோக்கம் என்று அந்தப் பல்லைக்கழகத் துணைவேந்தர் கோபா சமர்வால் தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற ‘யேல்’ பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்பும் தமக்கு கிடைத்திருப்பதாகத் துணைவேந்தர் கோபா சமர்வால் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்