உலக ஜப்பான் அழகியாக இந்திய கலப்பினப் பெண்

வியாழன், 8 செப்டம்பர் 2016 (02:49 IST)
இந்திய பூர்வீகத்தை கொண்ட ஒருவரின் பெண், உலக ஜப்பான் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜப்பானில் கலப்பின பெண் ஒருவர், உலக ஜப்பான் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது இது இரண்டாம் முறையாகும்.
 
பிரியங்கா யோஷிகாவா
பிரியங்கா யோஷிகாவா என்னும் 22 வயது பெண்ணான அவர், யானைகளை பழக்கும் உரிமம் வைத்துள்ளார். மேலும் அவரின் இந்த வெற்றியை கலப்பினத்தவர்கள் குறித்த கண்ணோட்டத்தை மாற்றப் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
 
கடந்த வருடம், அரியானா மியமோடா என்னும் கலப்பின பெண் பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றார். இப்பட்டத்தை வென்ற முதல் கலப்பின பெண் இவராவார்.
 
முழுவதுமாக ஜப்பான் பூர்வீகத்தைக் கொண்ட பெண் தான் அப்பட்டத்தை வென்றிருக்க வேண்டும் என்று விமர்சனங்கள் அப்போது எழுந்தன.
 
ஒவ்வொரு வருடமும் ஜப்பானில் 2 சதவீதம் மட்டுமே கலப்பின குழந்தைகள் பிறக்கின்றன அவர்களை ஜப்பான் மொழியில் ''ஆஃபு'' என்று அழைப்பார்கள்; ஆங்கில் மொழியில் பாதி என்பதை குறிக்கும் ஆஃப் என்னும் வார்த்தையிலிருந்து வந்துள்ளது.
 
''நாங்கள் ஜப்பானியர்கள். எனது தந்தை இந்தியர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன். எனக்குள் இந்தியன் இருக்கிறது என்பதில் மகிழ்கிறேன். அதனால் நான் ஜப்பானியர் இல்லை என்று ஆகிவிடாது’’ என ஏஎஃப்பி செய்தி முகமையிடம் யோஷிகாவா தெரிவித்துள்ளார்.
 
யோஷிகாவா, குத்துச் சண்டை வீரரும் ஆவார்
அவரின் இந்த வெற்றியை, தனக்கு முன்னர் இப்பட்டம் வென்ற மியமோடாவிற்கு அர்பணித்துள்ளார் யோஷிகாவா.
 
மியமோடாவிற்கு முன்னர் கலப்பின பெண்கள் ஜப்பான் சார்பில் போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியாது என்று தான் நினைத்ததாகவும் ஆனால் அரியானா மியமோடா இப்பட்டத்தை வென்று தன்னை போன்ற கலப்பின பெண்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்துள்ளார் என்றும் யோஷிகாவா தெரிவித்துள்ளார்.
 
கலப்பினத்தவர்களாக இருப்பதால் துன்புறும் பல நபர்களை தனக்குத் தெரியும் என்றும், தான் ஜப்பானுக்கு வந்த போது தன்னை அனைவரும் கிருமி போன்று பாவித்தார்கள் என்றும், தன்னை தொட்டால் ஏதோ கெடுதல் ஏற்படுவதை போல் அவர்கள் தொடுவார்கள் ஆனால் தன்னை இந்தளவு வலிமையாக்கியது அவர்கள் தான் என்றும் அவர்களுக்கு தனது நன்றி எனவும் தெரிவித்துள்ளார் யோஷிகாவா.
 
இந்திய பூர்வீகத்தை கொண்டதால் யோஷிகாவின் வெற்றியை எதிர்த்து சிலர் சமூக ஊடங்களில் அதிருப்தி தெரிவித்துள்ளனர்; ஆனால் சில இந்தியர்கள் அதிலிருந்து வெளியே வர அவர்களை அறிவுறுத்தியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்