இலங்கையில் ஊட்டச்சத்து இல்லா நிலைக்கு தள்ளப்படும் சிறார்கள்: தீர்வு என்ன?

செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (22:35 IST)
ஹபீலாவின் இரண்டு பிள்கைள் 3 மற்றும் 4ஆம் வகுப்புகளில் படிக்கின்றனர். அவர்களுக்கான காலை உணவைக் கூட தொடர்ச்சியாக வழங்குவதில் ஹபீலா நெருக்கடியை எதிர்கொள்வதாகக் கூறுகிறார். பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் இலவச மதிய உணவு - இந்தப் பிரச்னைக்கு ஓரளவு தீர்வைக் கொடுத்தாலும், வழங்கப்படும் உணவின் அளவு பிள்ளைகளுக்குப் போதாது என அவர் குறிப்பிடுகின்றார்.

 
"நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, சாதாரண நாட்களில் தனது பிள்கைகளுக்கு வீட்டில் வழங்கி வந்த உணவுகளை - தற்போது தன்னால் கொடுக்க முடியாதுள்ளது," என்று கூறும் அவர், "இதன் காரணமாக பிள்ளைகளுக்கு போஷாக்கற்ற நிலை உருவாகி விடுமோ," என அச்சப்படுகிறார்.

 
அம்பாறை மாவட்டம் - அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஹபீலா - கணவரை இழந்தவர். தனது இருப்பிடத்துக்கு அருகிலுள்ள வீடுகளில் வேலை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து, குடும்பத்தை நடத்தி வருகின்றார்.

 
ஹபீலா கூறுகின்ற 'பாடசாலை மதிய உணவுத் திட்டம்', கடந்த ஜனவரியிலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை இடைநிறுத்தப்பட்டிருந்தது.

 
ஒவ்வொரு மாணவருக்கும் தலா 30 ரூபாவுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருட்களுக்கான விலையேற்றம் காரணமாக, 30 ரூபாவுக்கு மதிய உணவை கொடுக்க முடியாது என, வழங்குநர்கள் மறுத்துவிட்டனர். அதனால், மதிய உணவுத் திட்டம் தடைப்பட்டது.
 
 
இதன்பின்னர், ஒவ்வொரு மாணவருக்கும் தலா 60 ரூபாவை, மதிய உணவுக்காக வழங்குவதற்கு அண்மையில் அரசு முன்வந்தது. இதனையடுத்து, கடந்த சில வாரங்களாக மீண்டும் பாடசாலைகளில் மதிய உணவு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 
இலங்கையில் அநேகமான குடும்பங்கள் - போதுமான மற்றும் போஷாக்குள்ள உணவுகளைப் பெற்றுக்கொள்வதில் சவால்களை எதிர்கொள்கின்றன. உணவுப் பொருட்களுக்கான விலையேற்றம் காரணமாக பால்மாவை கொள்வனவு செய்வதையும் பால்தேநீர் குடிப்பதையும் ஏராளமாளோர் நிறுத்தி விட்டனர். இறைச்சி, மீன், முட்டை ஆகியவற்றுக்கும் பல மடங்கு விலை அதிகரித்து விட்டதால், அவற்றினை நுகர்வதையும் மக்கள் வெகுவாகக் குறைத்து விட்டனர்.
 
 
இவ்வாறான நிலைமைகள் காரணமாக, சிறுவர் மந்த போஷாக்கில் உலகளவில் இலங்கை 6ஆவது இடத்தில் உள்ளதாக யுனிசெப் அறிவித்திருக்கிறது. தெற்காசியாவில் கடுமையான போஷாக்கின்மையை எதிர்கொள்ளும் நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் யுனிசெப் குறிப்பிட்டிருக்கிறது.

 
'உணவுப் பொருட்களுக்கான விலைகள் கடுமையாக அதிகரித்திருப்பது - மந்த போஷாக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணம்' எனவும் யுனிசெப் சுட்டிக்காட்டியிருக்கிறது.
 
 
 
இலங்கையில் சிறுவர்கள் போஷாக்கின்மையினால் பாதிக்கப்படும் நிலை உருவாகியதை ஏற்கெனவே அவதானித்த பல்வேறு தரப்பினரும், பாடசாலைகளில் இடைநிறுத்தப்பட்ட - இலவச மதிய உணவுத் திட்டத்தை மீளவும் ஆரம்பிக்குமாறு கோரிக்கை விடுத்தது வந்தனர். தற்போது நாட்டில் வறுமை அதிகரித்துள்ள நிலையில், போஷாக்கு குறைபாடான சமூகமொன்று உருவாகும் அபாயம் உள்ளயினை சுட்டிக்காட்டி அண்மையில் பிபிசியிடம் பேசிய இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பொருளியல்துறை பேராசியர் ரஊப், அதனை எதிர்கொள்ளும் பொருட்டு - உடனடியாக பாடசாலைகளில் மதிய உணவுத் திட்டத்தை மீள ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

 
இவ்வாறான நிலையிலேயே, பாடசாலைகளில் மதிய உணவு வழங்கும் செயற்பாடு மீளவும் தொடங்கப்பட்டுள்ளது.

 
"மரணத்துக்கு வழி வகுக்கும்"

 
இலங்கையில் பல குடும்பங்கள் சத்தான உணவைப் பெற்றுக் கொள்ள முடியாமல் இருப்பதாக யுனிசெப் அமைப்பின் தெற்காசியப் பிராந்தியத்தின் பணிப்பாளர் ஜார்ஜ் லாரியா-அட்ஜீ (George Laryea-Adjei) அண்மையில் கூறியிருந்தார்.

 
உணவைக் கொள்வனவு செய்யும் திறன் இன்மை காரணமாக, அன்றாட உணவை மக்கள் தவிர்த்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

 
"ஊட்டச்சத்து இன்மை காரணமாக குழந்தைகள் ஒல்லியாகிறார்கள். அவர்கள் மெலிந்து போகும் தன்மை சடுதியாக கடுமையாகும். இது ஒரு குழந்தையின் மரணத்துக்குக் கூட வழிவகுக்கும். பண்டங்களின் விலை அதிகரிப்பு மற்றும் குடும்ப வருமானம் குறைவதன் மூலம் - குழந்தைகள் மெலிவடையும் பிரச்னை தீவிரமாகும். எனவே, இந்த விடயத்தில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும்" எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
 
 
போஷாக்கு குறைபாட்டை - மந்த போஷாக்கு, அடி மந்த போஷாக்கு என இரண்டு வகைப்படுத்த முடியும் என்கிறார் டாக்டர் எம்.எச். றிஸ்வின். இவர் கல்முனைப் பிராந்திய சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தின் தாய் - சேய் நலன்புரி பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றுகின்றார்.

 
பிபிசி தமிழிடம் பேசிய அவர்; "சுமார் 04 லட்சத்து 89 ஆயிரம் சனத்தொகையைக் கொண்ட கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 05 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் 44 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 12..5 வீதமானோர் மந்த போஷாக்குள்ள பிள்ளைகளாகவும், 2.8 வீதமானோர் அடி மந்த போஷாக்குள்ளவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்," என்றார்.

 
தேசியளவில் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளில் சுமார் 18 வீதமானோர் மந்த போஷாக்குள்ளோராக இருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 
"தமிழ் பேசுவோர் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் போஷாக்குக் குறைபாடு அதிகளவில் காணப்படுகிறது" எனவும் டாக்டர் றிஸ்வின் இதன்போது கூறினார்.

 
போஷாக்கு குறைபாட்டில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாக பொருளாதாரம், கலாசாரம் மற்றும் கல்வியறிவு ஆகியவை உள்ளன எனவும் அவர் விவரித்தார்.
 
 
 
"போஷாக்கு குறைந்த பிள்ளைகளுக்கு திரிபோஷ மா, பல் சத்து தூள் வகைகள் மற்றும் இரும்புச் சத்து குளிசைகளை நாங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் பிள்ளைகளுக்கு போஷாக்கு குறைபாடு பல மடங்கு அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது" எனவும் அவர் எச்சரித்தார்.

 
இதேவேளை போஷாக்கு குறைபாட்டை நிவர்த்திசெய்வதற்கு பின்பற்றப்படும் வழிமுறைகளிலும் பல்வேறு சவால்களை தாம் எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

 
"நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டமையினால் மருத்துவ சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டது. அதேவேளை எமது சேவைகளை வழங்குவதிலும் பாதிப்புகள் ஏற்பட்டன" என்கிறார்.
 
புத்திக் கூர்மையற்ற சமூகம் உருவாகும் ஆபத்து
 
நபரொருவரின் உயரம் மற்றும் எடை ஆகியவற்றின் அளவுகள் ஊடாக பெறப்படும் 'உடல் எடை குறியீட்டு எண்' (BMI - Mody Mass Index) அடிப்டையில் போஷாக்கு கணிக்கப்படுகிறது என்கிறார் டாக்டர் றிஸ்வின்.
 
 
"குறித்த உயரத்தைக் கொண்ட ஒருவர், அதற்குரிய எடையைக் கொண்டிருக்க வேண்டும். உயரத்துக்குரிய எடை குறைவாக இருப்பின், அது போஷாக்கு குறைபாடாகக் கருதப்படும்" என்கிறார் அவர்.
 
 
"சிலவேளைகளில் அதி தீவிர போஷாக்கு குறைபாட்டைக் கொண்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களின் இரத்தம் பரிசோதிக்கப்படும். அதன்போது அவர்கள் என்ன வகையன போஷாக்கு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்படும்" என்கிறார்.

 
ஒவ்வொரு போஷாக்கு குறைபாடும் - ஒவ்வொரு வகையான அறிகுறியைக் காட்டும் எனத் தெரிவித்த அவர் - அவற்றினை விவரித்தார்.
 
 
"கார்போஹைட்ரேட் மற்றும் புரதம் ஆகிய போஷாக்குகள் பிள்ளைகளுக்கு குறைவடைந்தால், எடை வீழ்ச்சியடைவதோடு, அவர்களுடைய செயற்பாடுகள் அனைத்தும் மந்தமாகும். உதாரணமாக அவர்களின் கற்றல் மற்றும் விளையாட்டுச் செயற்பாடுகளில் மந்த நிலை உருவாகும். இரும்புச் சத்து குறையும் போது ரத்தத்தின் அளவு குறையும்; புத்திக் கூர்மையும் குறைவடையும்."

 
ஊட்டச்சத்து
 
"எனவே போஷாக்கின்மை காரணமாக புத்திக் கூர்மையற்ற, உழைக்கும் தன்மை குறைந்த சமுதாயமொன்று உருவாகும் ஆபத்து உள்ளது. இந்த நிலையானது பொருளாதாரத்திலும், கல்வித்துறையிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தும்," என்கிறார் அவர்.

 
"மனிதர்களின் மூளை வளர்ச்சி ஐந்து வயதுக்குள் நடந்து முடிந்துவிடும். எனவே இந்த வயதுக்குள் ஏற்படும் போஷாக்கு குறைபாடுகள், நீண்ட காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்" எனவும் அவர் தெரிவித்தார்.

 
43 லட்சம் மாணவர்களும் உணவு வழங்கப்பட வேண்டும்

 
இது இவ்வாறிருக்க பாடசாலை மாணவர்களில் 10 பேரில் இருவர் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பதாக, கடந்த ஜுன் மாதம் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

 
இலங்கையில் சுமார் 43 லட்சம் மாணர்கள் உள்ளனர்.

 
இந்த நிலையில், 11 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே பாடசாலைகளில் இலவச மதிய உணவு வழங்கப்படுவதாக பிபிசி தமிழிடம் பேசிய - இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறினார்.

 
இருந்த போதும், தற்போதைய சூழ்நிலையில் 43 லட்சம் மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்