மகாதீர்: சவால் விடுக்கும் முன்னாள் பிரதமர்; கட்சி, ஆட்சியைக் கைப்பற்றுவாரா? - மலேசிய அரசியல் களம்

ஞாயிறு, 31 மே 2020 (00:22 IST)
மகாதீர் மொஹம்மத் பெர்சாத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பது அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பையும் புதிய எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது. அவர் அக்கட்சியின் அவைத் தலைவராக உள்ளார்.

92 வயதில் மீண்டும் பிரதமராகி சாதித்த மகாதீர், அடுத்த இரு ஆண்டுகளில் மீண்டும் மிகப் பெரிய அரசியல் போராட்டம் ஒன்றை எதிர்கொண்டு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மலேசியாவில் அச்சமயம் ஆட்சியில் இருந்த பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் சில சலசலப்புகள் எழுந்தன. அப்போது பிரதமராக இருந்த மகாதீர் மொஹம்மத் பதவி விலகி கூட்டணியின் மற்றொரு முக்கிய தலைவரான அன்வார் இப்ராகிமுக்கு பிரதமராக வழி விட வேண்டும் எனும் கோரிக்கை வலுத்தது.

இதனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மலேசிய மாமன்னரிடம் கடிதம் அளித்தார் மகாதீர். அதன் பிறகு இடைக்காலப் பிரதமராக பொறுப்பேற்றார். இதையடுத்து ஏற்பட்ட அதிரடி திருப்பங்களால் மலேசிய அரசியலில் ஒரே வாரத்துக்குள் எதிர்பாராத காட்சிகள் அரங்கேறின.

அவற்றின் முடிவில் மகாதீரின் கீழ் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த மொகிதின் யாசின் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதிலும் கடந்த தேர்தலில் எந்த கட்சியை ஊழல்வாதிகள் நிறைந்த கட்சி என விமர்சித்தாரோ, அந்த 'அம்னோ' கட்சியின் ஆதரவுடனேயே பிரதமரானார் மொகிதின் யாசின்.

மலேசிய அரசியல் களத்தில் அடுத்து என்ன நடைபெறும் என்பதை யூகிப்பதற்கு முன்பு கடந்த கால நிகழ்வுகளை தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இது குறித்து இந்த செய்திக் கட்டுரை அலசுகிறது.
 
எப்படி உருவானது பெர்சாத்து கட்சி? எப்படி பிரதமர் ஆனார் மொகிதின்?
 
கடந்த பிப்ரவரி மாத இறுதி வரை மலேசியாவில் 'நம்பிக்கை கூட்டணி' என்று அழைக்கப்படும் 'பக்காத்தான் ஹராப்பான்' கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வந்தது. இதில் அன்வார் இப்ராகிம் தலைமையிலான பிகேஆர் கட்சி, மகாதீர், மொகிதின் யாசின் ஆகியோரை உள்ளடக்கிய பெர்சாத்து கட்சி, ஜனநாயக செயல்கட்சி (சீனர்களை பெரும்பான்மையாக பிரதிநிதிக்கும்) உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2018 ஏப்ரல் வரை ஆட்சியில் இருந்த தேசிய முன்னணி கூட்டணியை எதிர்த்து களமிறங்கி வெற்றி கண்டது நம்பிக்கை கூட்டணி. மகாதீர் மேற்கொண்ட தீவிரப் பிரசாரமும், அச்சமயம் சிறையில் இருந்தபடி அன்வார் இப்ராகிம் அவ்வப்போது தெரிவித்த கருத்துகளும் பலன் அளித்தன.

தேசிய முன்னணியில் அம்னோ, மலேசிய சீன சங்கம், மலேசிய இந்திய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அம்னோ தலைவர் நஜீப் துன் ரசாக் பிரதமராக பொறுப்பு வகித்த போது பெரும் ஊழல்களில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டு எழுந்தது. அவரது அமைச்சரவையில் துணைப் பிரதமராக பொறுப்பு வகித்தவர்தான் மொகிதின் யாசின் (இன்றைய பிரதமர்).

ஊழல் குறித்து கேள்வி எழுப்பியதால் அன்றைய பிரதமர் நஜீப் துன் ரசாக், கட்சியில் இருந்தும், தமது அமைச்சரவையில் இருந்தும் மொகிதின் யாசினை அதிரடியாக நீக்கினார். அதன் பிறகு சில காலம் அமைதி காத்த மொகிதின், பின்னர் மகாதீர் ஆசியுடன் செயல்பட்டதை அடுத்து பெர்சாத்து கட்சி உதயமானது.

அந்த வகையில் கடந்த பொதுத்தேர்தலின் போது அன்றைய பிரதமர் நஜீப்பை எதிர்த்து மகாதீர், அன்வார், மொகிதின் யாசின் என மூன்று தலைவர்களும் களமிறங்கியது ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டது. எனினும் தேர்தலுக்கு முன்பு இந்த தலைவர்கள் இடையே செய்து கொள்ளப்பட்ட பகிரங்க உடன்பாடு தான் இன்றளவும் பிரச்சினைக்கு காரணமாக உள்ளது.

இக்கூட்டணி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் முக்கியமாக இடம்பெற்றிருந்த சில அம்சங்களில் ஒன்று, "முதலில் மகாதீரும், அடுத்து அன்வார் இப்ராகிமும் பிரதமராகப் பொறுப்பு வகிப்பர்" என்பது தான்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தேர்தல் பிரசார மேடைகளிலும் இதை அந்தக் கூட்டணித் தலைவர்கள் மறக்காமல் உரக்கச் சொல்லியே வாக்குகள் சேகரித்தனர்.

ஆனால் ஆட்சியில் அமர்ந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பதவி விலக மகாதீர் மறுக்க, அன்வார் தரப்பு பதவி விலகும் தேதியை அறிவிக்குமாறு நெருக்கடி கொடுக்க, யாரும் எதிர்பாராத வகையில் கடந்த பிப்ரவரி இறுதியில் பதவி விலகினார் மகாதீர். பின்னர் மாமன்னர் கேட்டுக் கொண்டபடி, இடைக்காலப் பிரதமராக பொறுப்பேற்றார்.

இதையடுத்து அன்வார் அடுத்த பிரதமர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மகாதீர் நேரடியாக அன்வாரை ஆதரவில்லை. மாறாக நாடாளுமன்றத்தில் ஆதரவு இருக்கும் பட்சத்தில் அன்வார் பிரதமர் ஆகட்டும் என்றார். ஒருவேளை பெரும்பான்மை எம்பிக்கள் தம்மை ஆதரித்தால் தாம் பிரதமராக நீடிக்க தயங்கப் போவதில்லை என்றும் அறிவித்தார்.

இதனால் அன்வார் தரப்பு அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்த போதிலும், அடுத்து அவர் தான் பிரதமராவார் என்று நம்பிக்கை கொண்டிருந்தது. ஆனால் மற்றொரு திடீர் திருப்பமாக அன்றைய எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த அம்னோ, பாஸ் உள்ளிட்ட கட்சிகள் திடீரென மொகிதின் யாசினுக்கு ஆதரவு தெரிவித்தன.

அன்வார் கட்சியைச் சேர்ந்த அஸ்மின் அலி உள்ளிட்ட 11 எம்பிக்களும் மொகிதினுக்கு ஆதரவு தெரிவிக்க, யாரும் எதிர்பாராத வகையில் மலேசியாவின் எட்டாவது பிரதமரானார் மொகிதின் யாசின்.

இதையடுத்து பக்காத்தான் கூட்டணியில் இருந்து பெர்சாத்து கட்சி விலகுவதாக அறிவிக்கப்பட்டது. தேசிய முன்னணி ஆதரவுடன் புதிதாக பெரிக்கத்தான் கூட்டணி உருவாக்கப்பட்டது.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஊழல்வாதிகள் நிறைந்த கட்சி என்று தம்மால் வர்ணிக்கப்பட்ட அம்னோவுடன் பெர்சாத்து மீண்டும் கூட்டணி அமைத்திருப்பதை தம்மால் ஏற்க முடியாது என மகாதீர் கடுமையாக எதிர்த்தார். எனினும் அரசியல் நிகழ்வுகளின் ஆகக்கடைசித் திருப்பமாக பெர்சாத்து கட்சியில் இருந்தே அவர் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கு என்ன காரணம்?
 
கடந்த 18ஆம் தேதி மலேசிய நாடாளுமன்றம் கூடியது. மொகிதின் யாசின் பிரதமர் ஆனபிறகு, முதல் முறையாக நாடாளுமன்றம் கூடியதை அடுத்து, அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்த்தரப்பினர் வலியுறுத்தினர். அவர்களில் மகாதீரும் ஒருவர்.

ஆனால் மொகிதின் பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டாலும் அரசுக்கு ஆதரவான வரிசையில் 114 எம்பிக்கள் அமர்ந்திருந்தனர். இதன் மூலம் பிரதமர் மொகிதின் யாசின் மறைமுகமாக தனது பெரும்பான்மையை நிரூபித்ததாக கருதப்பட்டது.

ஆனால் அன்றைய தினம் மகாதீர் உள்ளிட்ட ஐந்து பெர்சாத்து கட்சி எம்பிக்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தனர். இது கட்சி விதிகளை மீறிய செயல் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே மகாதீர் உள்ளிட்ட ஐந்து பேரும் தற்போது நீக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக கட்சியின் அவைத் தலைவர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக மகாதீர் கடிதம் அளித்திருந்தார். எனினும் பிறகு அதை திரும்பப் பெறுவதாகவும் கூறினார். ஆனால் கருத்து வேறுபாடுகள் அதிகரித்த நிலையில் இந்தக் கடிதத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார் மொகிதின் யாசின்.

அவரது முடிவை மலேசிய சங்கப் பதிவிலாகாவும் ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத நிலையில்தான் பெர்சாத்து கட்சியில் அதிகார மோதல் பூதாகரமாகி உள்ளது.

மகாதீர் உள்ளிட்ட ஐந்து பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக பெர்சாத்து கட்சியின் பொதுச்செயலர் ஹம்சா சைனுடின் அறிவித்துள்ளார். இதனால் கொதிப்படைந்த மகாதீர் நேற்று அதிரடியாக கட்சியின் தலைமையகத்துக்குச் சென்று அங்கு தனக்கான அறையில் அமர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பெர்சாத்து கட்சியின் அவைத் தலைவராக தாம் தொடர்ந்து நீடிப்பதாகவும், இது தன்னுடைய அலுவலகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமலில் உள்ள கட்டுப்பாடுகளின்
காரணமாகவே தாம் இதுநாள் வரை கட்சி அலுவலகத்துக்கு வரவில்லை என்று அவர் தெரிவித்தார். கட்சியில் இருந்து மகாதீர் நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் சைனுடின் விளக்கம் அளிக்க திட்டமிட்டிருந்த அதே நேரத்தில் தான் மகாதீர் கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்தார்.

அவருடன் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவரது மகன் முக்ரிஸ், முன்னாள் மத்திய அமைச்சர்கள் சைட் சாதிக், மஸ்லி மாலிக் ஆகியோரும் இருந்தனர்.

"நாடாளுமன்றத்தில் அதன் உறுப்பினர் எங்கு வேண்டுமானாலும் அமரலாம். ஒருவர் அமர்ந்த இடத்தைக் காரணமாக வைத்து கட்சியில் இருந்து நீக்க முடியாது.

"நான் எனது அலுவலகத்துக்குத் தான் வந்திருக்கிறேன். எனக்கு இங்கு சில பணிகள் காத்திருக்கின்றன. நான் இங்கே தான் இருக்கிறேன். முடிந்தால் என்னை நீக்குங்கள்," என்று சவால்விடுக்கும் வகையில் பேசினார் மகாதீர் மொஹம்மத்.

தம்மை நீக்கியதை எதிர்த்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுமா? அல்லது சங்கப் பதிவிலாகாவில் புகார் அளிக்கப்படுமா? என்ற கேள்விக்கு, தமக்கு சாதகமான வகையில் சங்கப் பதிவிலாகாவின் முடிவு அமையாதோ எனும் கவலை தமக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் நாடாளுமன்றம் ஒரேயொரு நாள் மட்டும் கூட்டப்பட்டதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

"நாடாளுமன்றத்தின் இந்த ஒரு நாள் அமர்வு ஜனநாயக உரிமையை மறுத்துள்ளது. மக்களைப் பிரதிநிதிப்பவர்கள் பேச அனுமதிக்க வேண்டும். ஆனால் மாமன்னரின் உரையைக் கேட்பதற்கு மட்டும் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு இருப்பது வேடிக்கையான செயல்.

"மக்கள் பிரதிநிதிகளின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இது அரசாங்கத் தரப்பின் தவறு. இதற்கு கொரோனா வைரஸ் தொற்றை காரணமாக கூறுவதை ஏற்க இயலாது. ஏனெனில் அச்சமயம் மக்கள் ஏற்கெனவே வெளியே நடமாடத் தொடங்கிவிட்டனர்," என்றார் மகாதீர் மொஹம்மத்.
 
மகாதீர் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட காணொளிப் பதிவு வைரலானது:
 
பெர்சாத்து கட்சி தலைமையகத்துக்கு வருவதற்கு முன்பு தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அது குறித்து பதிவிட்டார் மகாதீர். மேலும் பிரதமர் மொகிதின் யாசின் தரப்புக்கு சவால்விடுக்கும் வகையிலும் சில வரிகள் அந்தப் பதிவில் காணப்பட்டன.

பின்னர் கட்சி அலுவலகத்துக்குள் அவர் நுழைவதை காட்டும் 36 நொடிகள் அடங்கிய காணொளிப் பதிவும் ஃபேஸ்புக்கில் வெளியானது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் இதை பரவலாகப் பகிர்ந்து கொண்டனர்.

நடிகர் ரஜினி நடித்த 'கபாலி' படத்தின் குறிப்பிட்ட ஒரு காட்சியில் அவர் பேசும் வசனத்தையும் பின்னணி இசையையும், மகாதீரின் காணொளியோடு பொருத்தியும் சிலர் அப்பதிவை பகிர்ந்தனர்.

இதே போல் நடிகர் விஜய் ஒரு படத்தில், 'I am waiting' என தனது எதிரியை நோக்கிச் சொல்லும் வசனத்தைக் குறிப்பிட்டும் மகாதீர் பதிவைப் பலர் வைரலாக்கினர்.
 
கட்சித் தேர்தலில் மகாதீர் போட்டியிட முடியுமா?
 
பெர்சாத்து கட்சியில் இருந்து மகாதீர் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரால் கட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்று எதிர்த்தரப்பு கூறுகிறது.

எனினும் இம்முறை பெர்சாத்து தலைவர் பதவிக்கு அக்கட்சியின் நடப்பு துணைத்தலைவரும் அவரது மகனுமான முக்ரிஸ் மொஹம்மத் தான் போட்டியிட இருந்தார். இந்தப் போட்டியைத் தவிர்க்கும் விதமாகவே முக்ரிஸும் நீக்கப்பட்டுள்ளதாக மகாதீர் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பெர்சாத்து கட்சியில் இருந்து பிரதமர் மொகிதின் யாசின் முறைப்படி நீக்கப்படுவார் என்றும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மகாதீர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
 
மகாதீர் அணிக்குத் தாவும் மத்திய அமைச்சர்?
 
இத்தகைய பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், பிரதமர் மொகிதின் யாசினின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பிரதமர் துறை அமைச்சர் ரிட்ஜுவான் முகமட் யூசோப் உள்ளிட்ட இரு அமைச்சர்கள் மகாதீர் அணிக்கு தாவ இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அவ்வாறு இருவர் அணி மாறும் பட்சத்தில் நடப்பு அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாது போகும் என்று கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை மாலையே இரு அமைச்சர்களும் செய்தியாளர்களைச் சந்திக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவ்வாறு ஏதும் நிகழவில்லை.

இரு அமைச்சர்களையும் தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் பலனில்லை என்றும், அவர்களிடம் இருந்து எந்தவொரு விளக்கமும் கிடைக்கப் பெறவில்லை என்றும் மலேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
மலேசிய நாடாளுமன்றத்தில் இரு அணிகளின் பலம் என்ன?
 
மலேசிய நாடாளுமன்றத்தில் 222 எம்பிக்கள் உள்ளனர். கடந்த 18ஆம் தேதி நாடாளுமன்றம் கூடிய போது, ஆளும் தரப்பு வரிசையில் 114 எம்பிக்கள் அமர்ந்திருந்தனர்.

இந்நிலையில் அன்வார் தரப்புக்கு 129 எம்பிக்களின் ஆதரவு இருப்பதாக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவர்களில் ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும் இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது இந்த எண்ணிக்கை பேச்சளவிலேயே இருப்பதாக அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

தற்போது இரு அமைச்சர்கள் அணி மாறுவது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் மகாதீரை ஆதரிப்பதாகக் கூறப்படுகிறது.

இது சாத்தியமாகும் பட்சத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மொகிதின் யாசின் தரப்புக்கும், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கும் தலா 111 எம்பிக்களின் ஆதரவு இருக்கும் என்கிறார்கள் அரசியல் கவனிப்பாளர்கள்.

தனது 95ஆவது வயதில் மீண்டும் அரசியல் போராட்டக் களத்தை எதிர்கொண்டுள்ளார் மகாதீர். தற்போதைய கட்சி சார்ந்த சர்ச்சை அவருக்கும் பிரதமர் மொகிதின் யாசினுக்கும் இடையேயான நேரடி மோதலாக உருவெடுத்துள்ளது.

மீண்டும் அரசாங்கத்தைக் கைப்பற்றுவோம் என்று மகாதீரும் அன்வார் இப்ராகிமும் அறைகூவல் விடுத்துள்ளனர்.

மகாதீரால் கட்சியைக் கைப்பற்ற முடியுமா? அதற்கு முன்பே அன்வாருடன் இணைந்து ஆட்சியைக் கைப்பற்ற முடியுமா? என்பதை அடுத்தடுத்த நிகழ்வுகளும், கள நகர்வுகளும் தீர்மானிக்கும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்