லைபீரியாவில் எபோலா நோயால் இந்தியர் ஒருவர் பலியானார்

வியாழன், 27 நவம்பர் 2014 (17:30 IST)
லைபீரியாவில் பணியாற்றிய இந்தியத் தொழிலாளி ஒருவர் எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டு செப்டம்பர் மாதத்தில் மரணமடைந்ததாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


 
அந்த நபரின் மரணம் குறித்து அவரது குடும்பத்தினருக்குத் தெரியப் படுத்தப்பட்டு விட்டதாகவும், அவரது உடல் லைபீரியாவிலேயே புதைக்கப் பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
கினியா, சியர்ரா லியோன், லைபீரியா ஆகிய நாடுகள் எபோலா நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
 
இந்த மூன்று நாடுகளிலும் சேர்த்து, இதுவரை 5,400 பேர் மரணமடைந்துள்ளனர். நைஜீரியா, ஸ்பென், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் சிலர் இந்நோயினால், மரணமடைந்துள்ளனர்.
 
மருந்தாளுனராகப் பணியாற்றிய இந்த நபர்தான் எபோலாவினால் மரணமடையும் முதல் இந்தியராவார். மேற்கு ஆப்பிரிக்காவில் சுமார் 45,000 இந்தியர்கள் வசித்துவருகின்றனர்.
 
இந்த நபர் எபோலா நோய்த் தொற்றினால் செப்டம்பர் 7ஆம் தேதி மரணமடைந்ததாக, மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே. சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
 
இந்த மாதத் துவக்கத்தில் லைபீரியாவிலிருந்து வந்த ஒருவர், எபோலா நோய் குணமடைந்துவிட்டாலும், பாலுறவு மூலம் நோய் தொற்றலாம் என்பதால், அவரை இந்திய அதிகாரிகள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர்.
 
இந்தியாவில் இதுவரை யாரும் எபோலாவினால் பாதிக்கப்படவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்