ஆணை அறைந்த இலங்கைப் பெண்: காலையில் கைது, மாலையில் விடுதலை

வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (19:36 IST)
இலங்கையில் ஆடவர் ஒருவரை அறைந்ததற்காக கைது செய்யபட்ட பெண்ணை காவல்துறையினர் விடுதலை செய்துள்ளனர்.
 
குருநாகலை மாவட்டம் வாரியப்பொலப் பகுதியில் ஒரு பேருந்து நிலையத்தில், தன்னைத் தகாத வார்த்தைகளால் ஏசிய ஒரு ஆடவரை அந்தப் பெண்மணி அறைந்ததை அடுத்து அந்தப் பெண்ணை 2014 ஆகஸ்டு 27 அன்று காவல் துறையினர் கைது செய்தனர்.
 
அந்தப் பெண் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பதை அவரது விடுதலைக்காக போராடியவர்கள் பிபிசியிடம் உறுதிப்படுத்தினர்.
 
இலங்கையின் தாய்மார் மற்றும் மகள்கள் அதாவது மதர்ஸ் அண்ட் டாட்டர்ஸ் ஆஃப் லங்கா எனும் அமைப்பைச் சேர்ந்த சாமில துஷாரி, கைது செய்யப்பட்டிருந்த திலானி அமல்காவை காவல் நிலையத்தில் சந்தித்துப் பேசியுள்ளார்.
 
காவல் துறையினர் அவரைத் தொடர்ந்து தடுத்து வைக்கவே விரும்பினர் என்றும், தங்களைப் போன்றவர்கள் முன்னெடுத்த அழுத்தம் காரணமாகவே அவர் விடுவிக்கப்பட்டார் எனச் சாமில துஷாரி, பிபிசியிடம் தெரிவித்தார்.
 
இச்சம்பவம் இலங்கைப் பெண்களுக்கு ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்று தான் கருதுவதாக சாமில துஷாரி கூறுகிறார்.
 
"இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்றாலும், பெண்கள் தொடர்ந்து வன்முறையை எதிர்கொண்டு அதன் காரணமாக துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இலங்கையில் அனைவரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் என்பதை இந்தப் பெண்மணியின் சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது"
 
அதேவேளை காவல் துறைனரும் இப்படியான சம்பவங்களை எப்படி கையாள வேண்டும் என்றும் இது சிந்திக்க வைத்துள்ளது என்கிறார் துஷாரி. இச்சம்பவத்தை ஊடகங்கள் கையாண்ட விதம் மற்றும் அதை சித்தரித்த விதம் ஆகியவற்றையும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
அந்தப் பெண் மீது மட்டுமே தவறு என்பது போல ஊடகங்கள் இச்சம்பவத்தை சித்தரித்திருந்தன என்று குற்றஞ்சாட்டுகிறார் சாமில துஷாரி.
 

வெப்துனியாவைப் படிக்கவும்