இதையடுத்து சயான் உள்ளிட்டவர்களிடம் காவல்துறை மீண்டும் விசாரணை நடத்திவந்தது.அ.தி.மு.கவைச் சேர்ந்த ரவி என்பவர், தான் இந்த வழக்குத் தொடர்பாக தெரிவிக்க வேண்டிய அனைத்தையும்தான் ஏற்கனவே தெரிவித்துவிட்டதாகவும் தன்னை மீண்டும் விசாரணைக்கு அழைக்கக்கூடாது என்றும் சொல்லிவந்தார். அவர் இது தொடர்பாக உயர் நீதிமன்றத்திலும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
மற்றொரு குற்றவாளியான வாளையார் மனோஜ் ஆஜராகவில்லை. சுமார் 20 நிமிடங்கள் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றன. அந்தத் தருணத்தில் ரவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அனந்தகிருஷ்ணன், பால நந்தகுமார் உள்ளிட்டோர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அதில், ரவியை விசாரணைக்கு அழைக்கக்கூடாது என்று கூறியிருந்தனர்.
இதையடுத்து ரவி தரப்பு வழக்கறிஞர்களுக்கும் அரசுத் தரப்பு, சயான் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்குப் பிறகு, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதி தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம், தடயவியல் நிபுணர் ராஜ்மோகன், கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், கோத்தகிரி மின்சாரத் துறை துணைப் பொறியாளர் ஆகியோர் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.