சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா புதிய மனு

திங்கள், 15 செப்டம்பர் 2014 (20:55 IST)
பெங்களூரில் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றம் இயங்கும் இடத்தை மாற்ற வேண்டுமெனக் கோரி, ஜெயலலிதா மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது ஜெயலலிதா முதல்வராக இருந்த 1991-96ஆம் ஆண்டு காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து குவித்ததாக, பெங்களூரில் இருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
 
இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், செப்டம்பர் 20ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தீர்ப்பு வழங்கப்படும் தினத்தன்று, குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், முல்லைப் பெரியாறு விவகாரம், விடுதலைப் புலிகள் விவகாரம் ஆகியவற்றால் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், சிறப்பு நீதிமன்றம் இயங்கும் இடத்தை பரப்பன அக்ரஹாரத்திற்கு மாற்ற வேண்டுமெனக் கோரியுள்ளார்.
 
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கல் குன்ஹா, இதன் மீது நாளை விசாரணை நடக்குமென தெரிவித்துள்ளார். தற்போது இந்த சிறப்பு நீதிமன்றம் பெங்களூர் நகர சிவில் நீதிமன்ற வளாகத்தில் இயங்கிவருகிறது.
 
2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜெயலலிதா இந்த வழக்கில் ஆஜரானபோது, பாதுகாப்பு காரணங்களுக்காக, பெங்களூர் பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறைவாளாகத்தில் இயங்கிய சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்