சென்னை விமானநிலைய இணை ஓடுபாதை கைவிடப்பட்டது சரியா?

வெள்ளி, 16 மே 2014 (07:19 IST)
சென்னை விமானநிலையத்தின் தற்போதைய ஓடுபாதைக்கு இணையான ஓடுபாதை அமைப்பதற்காக தமிழக அரசு 2006 ஆம் ஆண்டு அடையாளம் கண்டு அறிவித்த 1084 ஏக்கர் நிலத்தில் சுமார் 853 ஏக்கர் நிலத்தை தற்போது அந்த விமான நிலைய விஸ்தரிப்புக்கு தேவையில்லை என்று விடுவித்து அறிவித்திருக்கிறது.

ஒரு பக்கம் இந்த நிலத்துக்கு உரிமையாளர்கள் தரப்பில் தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்றிருந்தாலும், இதன் மூலம் சென்னை விமானநிலைய விரிவாக்கம் தடைபட்டு, அதன் மூலம் சென்னைநகரின் எதிர்கால தொழில் வர்த்தக வாய்ப்புக்கள் பாதிக்கப்படும் என்று கவலைகளும் வெளியிடப்பட்டுவருகின்றன.
 
இந்நிலையில், தமிழக அரசின் இந்த முடிவு சென்னை விமான பயன்பாட்டாளர்களுக்கு ஏமாற்றமளிப்பதாக கூறுகிறார் விமான பயனாளிகள் சங்கத்தைச் சேர்ந்த சுதாகர் ரெட்டி. சென்னை விமானநிலையத்தில் புதிய இணையான ஓடுபாதை அமைப்பதை கைவிட்ட தமிழக அரசு உடனடியாக சென்னையின் எதிர்கால விமான தேவைகளுக்கு ஈடுகட்டும் விதமாக புதிய விமான நிலையம் கட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
 
காரணம், தற்போதைய சென்னை விமானநிலையம் இருக்கும் இடத்தில் விமான நிலைய விஸ்தரிப்புக்கு தேவைப்படும் நிலம் இல்லாத சூழலில் வேறொரு புதிய இடத்தில் இன்னொரு புதிய விமானநிலையம் கட்டுவது சென்னைக்கு அவசியத்தேவை என்றும் அதில் மத்திய அரசும் தமிழக அரசும் உடனடியாக உரிய கவனம் செலுத்தவேண்டும். 

வெப்துனியாவைப் படிக்கவும்