பொருளாதார வளர்ச்சி 5.3 வீதமாக குறைந்தது

சனி, 29 நவம்பர் 2014 (06:32 IST)
இந்த ஆண்டின் ஜூலை முதல் செப்டெம்பர் வரையான காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 5.3 சதவீதமாக குறைந்ததுள்ளதாக அரசாங்க புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
 
பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 5.7 சதவீதமாக இருந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது 5.3 சதவீதமாக குறைந்துள்ளது.
 
எனினும் ஆய்வாளர்கள் பலர் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி வீதம் குறையவில்லை. செப்டெம்பர் மாதம் முடிந்த காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.1 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார நோக்கர்கள் கணித்திருந்தனர்.
 
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் இடம்பெற்றுள்ள முதலாவது முழுமையான காலாண்டின் வளர்ச்சி வீதம் இதுவாகும்.
 
ஒட்டுமொத்தமாக கீழ்மட்டத்திற்கு சென்றுள்ள இந்தியாவின் பொருளாதாரம் மெதுவான, சுமாரான வளர்ச்சியைக் காண்கின்றது என்று மூத்த பொருளாதார நிபுணர் ஷிவோம் சக்கரபர்தி பிபிசியிடம் தெரிவித்தார்.
 
முதலீட்டுச் சூழலை புதுப்பித்து, வளர்ச்சியை அதிகரிக்கும் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவது இந்திய அரசாங்கத்தின் கடமை என்றும் அவர் கூறினார்.
 
கடந்த அக்டோபர் மாதம் கச்சா எண்ணெய் இறக்குமதிகள் 19.2 சதவீதம் சரிந்திருப்பதும், தற்போது பணவீக்கம் குறைந்துவருகின்ற நிலையும் இந்திய பொருளாதாரத்திற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
முதலீடுகளை ஊக்கப்படுத்த வட்டி வீதங்களை இந்திய ரிசர்வ் வங்கி குறைக்க வேண்டும் என்ற குரல்களும் அதிகரித்துள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்