முதல்வர் ஜெயலலிதாவுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்

புதன், 31 ஆகஸ்ட் 2016 (04:58 IST)
தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா, தேர்தலின் போது பல வகையான இலவசங்களை வழங்குவதாக வாக்குறுதிகள் அளித்த நிலையில், அதற்கான நிதி ஆதாரங்களைத் தெரிவிக்காததற்கு தேர்தல் ஆணையம் தற்போது கண்டித்துள்ளது.
 

 
மேலும் பல்வேறு இலவச பொருட்கள்-வாஷிங் மெஷின், இலவச மொபைல் போன், கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் முழுவதுமாக தள்ளுபடி என பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்கள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை என்பதை ஆணையம் சுட்டிகாட்டியுள்ளது.
 
இனி வரும் காலங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
 
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த மே மாதத்தில் விளக்கம் கேட்டிருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் அறிக்கை மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் வெளியாகியுள்ளது.
 
அதிமுகவின் விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்றும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி உருவாக்கப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளுக்கு ஏற்ப, அதிமுக தேர்தல் அறிக்கை அமையவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
 
ஜெயலலிதா அறிக்கை அனுப்பிய அதே சமயம் தி.மு.க. வுக்கும் தேர்தல் ஆணையம், தேர்தல் அறிக்கை குறித்து கவனமாக நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
 
தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் இலவசங்களை அளிப்பதாக தெரிவிக்கும் போதே அதை அளிப்பதற்கான நிதி ஆதாரங்கள் பற்றியும் விளக்கி குறிப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
 
அ.தி.மு.க அறிவித்த இலவச திட்டங்கள்:
 
தமிழகத்தில் அரசு கேபிள் டிவி சேவையை பயன்படுத்துவோருக்கு இலவச செட் டாப் பாக்ஸ், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச கைபேசி வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
 
பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீத மானியம் வழங்கப்படும் எனவும் கூறும் அக்கட்சியின் தேர்தல் அறிக்கை, வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் கூறுகிறது.
 
அரசின் கோ-ஆப்டெக்ஸில் கைத்தறி ஆடைகள் வாங்க அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்ரூ.500 மதிப்புள்ள பரிசு கூப்பன் உள்ளிட்ட பல இலவசங்களை அளிப்பதாக அதிமுக தெரிவித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்