"1980" தமிழக சட்டமன்ற தேர்தலில் எம்.ஜி.ஆர் மீண்டும் வென்றது எப்படி?

செவ்வாய், 2 மார்ச் 2021 (09:33 IST)
1977ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றிருந்த  அ.தி.மு.க.  அரசு கவனத்தைக் கவரும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. திருமலைப்பிள்ளை சாலையில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர் வசித்து வந்த வீடு வாங்கப்பட்டு, நினைவில்லம் ஆக்கப்பட்டது. பெரியாரின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, 1978ஆம் ஆண்டு, அக்டோபர் 19ஆம் தேதி முதல் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டது. 
 
அப்போது இடஒதுக்கீட்டிற்கான 'க்ரீமீ லேயர்' முறையை அறிமுகப்படுத்தியிருந்தார் எம்.ஜி.ஆர். பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இட ஒதுக்கீட்டைப் பெற அவர்களது பெற்றோரின் வருட வருவாய் ஒன்பதாயிரத்திற்குள் இருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டது. இதற்கு தி.மு.க, தி.க. ஆகியவை கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தன. இது பெரிய விவகாரமாகவும் உருவெடுத்துவந்தது. 
 
தமிழ்நாட்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மது அருந்துவதற்கான உரிமத்தைப் பெற்று மது அருந்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தாசில்தார் அலுவலகத்தில் 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் (குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டு மீண்டும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது). 
 
இதற்கிடையில் 1979ல் தி.மு.க - அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை இணைப்பதற்கான முயற்சிகள் ஜனதா கட்சித் தலைவரான பிஜு பட்நாயக் தலைமையில் நடைபெற்றன. ஆனால், அதில் வெற்றி கிடைக்கவில்லை. ஜனதா அரசு கவிழ்ந்து விட்ட நிலையில், நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. 
 
நெருக்கடி நிலை காலகட்டத்தில், இந்திய அளவில் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்ட கட்சி தி.மு.கதான். ஆனாலும் 1980 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. இ. காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முன்வந்தது. மீண்டும் ஆட்சிக்கு வர விரும்பிய இந்திராவும் இந்தக் கூட்டணியை விரும்பினார்.
 
இந்தக் கூட்டணியில் இந்திரா காங்கிரஸ் 23 தொகுதிகளிலும் தி.மு.க 16 தொகுதிகளிலும் முஸ்லீம் லீக் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க 24 தொகுதிகளிலும் ஜனதா 10 தொகுதிகளிலும் இடதுசாரிக் கட்சிகள் தலா 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
 
இந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றது. இ. காங்கிரஸ் போட்டியிட்ட 23 தொகுதிகளில் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகள் அனைத்திலும் வெற்றிபெற்றன. கோபிச்செட்டிப் பாளையம், சிவகாசி ஆகிய தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க. வென்றிருந்தது.
 
1977ல்தான் தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடந்திருந்ததால், அ.தி.முக. அரசு 1982வரை ஆட்சியில் இருந்திருக்க முடியும். ஆனால், பிரதமராகப் பதவியேற்ற இந்திரா, நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த மாநிலங்களில் எல்லாம் ஆளும் கூட்டணி தோல்வியடைந்திருக்கிறதோ அங்கிருந்த மாநில அரசுகளைக் கலைக்க முடிவெடுத்தார். முன்பு ஜனதா கட்சி சொன்ன அதே லாஜிக்கைச் சொன்னார் இந்திரா. அதாவது, "மக்களவைத்  தேர்தலில் தோற்றுப்போன கட்சி, மாநிலத்தை ஆளும் உரிமையை இழந்துவிட்டது".
 
ஆகவே, தமிழ்நாட்டுடன் சேர்த்து 9 மாநிலங்களின் ஆட்சி கலைக்கப்பட்டது. 1977ல் ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது இதேபோல 9 மாநிலங்களின் ஆட்சி கலைக்கப்பட்டிருந்தது. 1980ஆம் ஆண்டு மே மாதம் தேர்தல்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. 
 
இதையடுத்து கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் தொடங்கின. அ.தி.மு.க கூட்டணியைப் பொறுத்தவரை, ஜனதா கட்சி முதலில் 60 இடங்களைக் கேட்டது. பிறகு 46 இடங்களையாவது தரும்படி கோரியது. ஆனால், எம்.ஜி.ஆர் 26 தொகுதிகளை மட்டுமே தர முன்வந்தார். இதனால் அக்கட்சியுடன் கூட்டணி அமையவில்லை.
 
சி.பி.எம்., சி.பி.ஐ., காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ், தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ், ஃபார்வர்ட் பிளாக், அர்ஸ் காங்கிரஸ், மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லீம் லீக், கிறிஸ்தவ ஜனநாயக முன்னணி, இந்திய குடியரசுக் கட்சி (கவாய்) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்பட்டது. சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய காட்சிகளுக்கு தலா 16 இடங்கள் ஒதுக்கப்பட்டன. கா.கா.தே.காவுக்கு 12 இடங்களும் காமராஜ் காங்கிரசிற்கு 7 இடங்களும் வழங்கப்பட்டன. மீதமுள்ள இடங்களில் அதி.மு.க. போட்டியிட்டது. அ.தி.மு.கவின் சின்னத்தில் சிறிய கட்சிகள் போட்டியிட்டன. 
 
தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை, இ.காங்கிரசுடன் கூட்டணி தொடர்ந்தது. ஆனால், இந்த முறை இடங்களைப் பகிர்ந்துகொள்வதில் கடுமையாக இருந்தது அக்கட்சி. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக எம்.பி. சுப்ரமணியம் நியமிக்கப்பட்டார். இவர் கருணாநிதியுடன் மோதல் போக்கு உடையவராக கருதப்பட்டவர். ஆகவே, தேர்தல் பேச்சு வார்த்தை மிகவும் சிக்கலானதாகவே இருந்தது.  இதனால், முதலில் முஸ்லீம் லீக் கட்சியுடன் பேச்சு வார்த்தையை முடித்தது தி.மு.க. எட்டு இடங்கள் அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. மீதமிருந்த 226 இடங்களில் தி.மு.கவும் இ. காங்கிரசும் தலா 113 இடங்களில் போட்டியிடுவதென முடிவெடுக்கப்பட்டது. 
 
இந்த 113 இடங்களில் இரு கட்சிகளும் தங்கள் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு தலா நான்கு இடங்களைக் கொடுத்துவிட வேண்டும் என ஏற்பாடு. ஆகவே இரு கட்சிகளும் தலா 109 இடங்களில் போட்டியிட்டன. பிறகு, காங்கிரசும் தி.மு.கவும் தேசிய ஃபார்வர்ட் பிளாக், உழைப்பாளர் முன்னேற்றக் கட்சி, பசும்பொன் தேவர் கட்சி, சக்திதாசன் குடியரசுக் கட்சி, கிறிஸ்தவ முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இரண்டு - ஒன்று என இடங்கள் ஒதுக்கின.
 
ஜனதா கட்சி தனித்து 95 தொகுதிகளில் போட்டியிட்டது. 
 
பிறகு, அடுத்த பிரச்சனை துவங்கியது. தி.மு.கவும் இ. காங்கிரசும் சமமான எண்ணிக்கையில் போட்டியிடுவதால், முதல்வர் யார் என்பதை பிறகு தீர்மானிக்கலாம் என பேச ஆரம்பித்தனர் காங்கிரஸ் தலைவர்கள். தமிழ்நாட்டிற்கு வந்த மத்திய நிதி அமைச்சர் ஆர். வெங்கட்ராமன், "யார் முதலமைச்சர் என்று இப்போது எப்படிச் சொல்ல முடியும்? சரிசமமாகப் போட்டியிடுகிறோம். யார் கூடுதல் தொகுதிகளில் வெற்றிபெறுவார்களோ, அந்தக் கட்சி எம்.எல்.ஏக்களுக்கே அந்த உரிமை இருக்கிறது. எனவே தேர்தலுக்குப் பின்தான் அது பற்றி முடிவாகும்" என்று பேசினார்.
 
இது தி.மு.கவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. கூட்டணிப் பேச்சு வார்த்தையை  நிறுத்த முடிவுசெய்தது தி.மு.க. முடிவில், மு. கருணாநிதியே முதல்வராக இருப்பார் என இந்திரா காந்தி அறிவித்தார். ஆனாலும், தி.மு.க. கூடுதல் இடங்களைப் பெற்றால் மட்டுமே இது சாத்தியம் என்ற எண்ணம் தி.மு.கவுக்கு ஏற்பட்டது. 
 
இது ஒரு புறமிருக்க காங்கிரஸ் கட்சிக்குள் வேட்பாளர்களை முடிவுசெய்வதில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. பல இடங்களில் இரண்டு, மூன்று காங்கிரஸ்காரர்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். சில காங்கிரஸ் தலைவர்களுக்கு இடங்கள் கிடைக்காததால், அவர்கள் கட்சியிலிருந்து விலகிவிட்டு சுயேச்சையாக தங்கள் தொகுதிகளில் போட்டியிட்டனர். திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஒட்டுமொத்தமாக தேர்தல் வேலைகளைப் புறக்கணிப்பதாக அறிவித்தது. இப்படிப்பட்ட குழப்பங்களுக்கு நடுவில் தேர்தலைச் சந்திக்க தயாரானது தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி.
 
ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்தவுடனேயே சில திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார் எம்.ஜி.ஆர். பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டிற்கான வருமான வரம்பு நீக்கப்பட்டது. மேலும், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. 
 
தேர்தல் பிரச்சாரத்தின்போது, தனது ஆட்சி அநியாயமாகக் கலைக்கப்பட்டதாக திரும்பத் திரும்ப முழங்கினார் எம்.ஜி.ஆர். தாலிக்குத் தங்கம், சிறப்பான நிர்வாகம் ஆகியவற்றை தனது முழக்கங்களாக முன்வைத்தது தி.மு.க. மருத்துவக் கல்லூரி துவங்குவதை ஒரு தொழிலாகவே அ.தி.மு.க. அரசு மாற்றிவிட்டதாகவும் குற்றம்சாட்டியது.
 
இடஒதுக்கீடு கொள்கையை மாற்றியதால், திராவிடர் கழகம் எம்.ஜி.ஆருக்கு ஆதரவளிக்க, காங்கிரஸ் கூட்டணியின் காரணமாக, தி.மு.கவுக்காக தீவிரப் பிரச்சாரம் செய்தார் சிவாஜிகணேசன்.
 
தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு இரு கட்டங்களாக நடைபெற்றது. மே 28ஆம் தேதி 114 தொகுதிகளுக்கும் மே 31ஆம் தேதி 120 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் ஜூன் 1ஆம் தேதியன்று எண்ணப்பட்டன. எதிர்பார்த்ததைப் போலவே அ.தி.மு.க. தனித்து 129 இடங்களைப் பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 9 இடங்களிலும் கா.கா.தே.க. 6 இடங்களிலும் ஃபார்வர்ட் பிளாக் ஒரு இடத்திலும் சிறிய கட்சிகள் 6 இடங்களிலும் வென்றன.
 
தி.மு.க. கூட்டணி பெரும் தோல்வியை எதிர்கொண்டது. ஒட்டுமொத்தமாகவே இந்தக் கூட்டணிக்கு 69 இடங்களே கிடைத்தன. தி.மு.க. 38 தொகுதிகளிலும் இ. காங்கிரஸ் 31 தொகுதிகளிலும் முஸ்லீம் லீக் 1 இடத்திலும் வெற்றிபெற்றன. 
 
மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆரை எதிர்த்து பொன். முத்துராமலிங்கம் நிறுத்தப்பட்டிருந்தார். அங்கே எம்.ஜி.ஆர். 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். சென்னை அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட மு. கருணாநிதி 699 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 
 
அ.தி.மு.க. ஆட்சியில் சபாநாயகராக இருந்த முனுஆதி, ப.உ. சண்முகம், நடிகர் ஐசரி வேலன் ஆகியோர் தோல்வியடைந்தனர். தி.மு.கவைப் பொறுத்தவரை சாதிக் பாட்சா, நாஞ்சில் மனோகரன் ஆகியோர் தோல்வியடைந்தனர் (அ.தி.மு.கவில் இருந்த நாஞ்சில் மனோகரன் அப்போது தி.மு.கவுக்கு வந்திருந்தார்). ஜனதா கட்சிக்கு பத்மநாபபுரம், கிள்ளியூர் ஆகிய இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன. 
 
முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்ட எம்.ஜி.ஆர், கலைவாணர் அரங்கில் ஜூன் 9ஆம் தேதி பதவியேற்றார். 17 அமைச்சர்கள் இந்த அமைச்சரவையில் இடம்பெற்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்